Friday, December 6, 2013

டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் ஆறு வரை, மனதிற்கு மகிழ்ச்சியாய் ஐம்பது.



இன்று ஐம்பதாவது முறையாக ரத்த தானம் வழங்கினேன். இருபத்தி ஓரு வருடங்களில் ஐம்பது முறை என்பது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. ஆனாலும் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி, ஒரு நிறைவு. பல தோழர்களை தொடர்ந்து ரத்த தானம் வழங்க வைத்துள்ளேன் என்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ஒரு தற்செயலான ஒற்றுமை என்பது இருக்கிறது. இந்திய வரலாற்றின் மிக மோசமான கறுப்பு தினமாக ஆறு, டிசம்பர், 1992 அன்றுதான் முதல் ரத்த தானம் தொடங்கியது. இன்று ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தோழரது குடும்பத்து உறுப்பினருக்காக ரத்தம் அளித்துக் கொண்டிருந்த போதுதான் அதுவும் நினைவிற்கு வந்தது.

அந்த முதல் ரத்த தானத்தின் நினைவாக வீடு வரும் வழியில் கே.ஜே.யேசுதாஸின் கர்னாடக இசை காஸெட் ஒன்று கூட வாங்கி வந்தேன். கல்யாணி ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி என்று ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரு மணி நேரம் ஒலிக்கும் காஸெட் அது. யேசுதாஸின் கற்பனாஸ்வரங்களுக்கு பெங்களூர் தியாகராஜன் வயலினில் ஈடு கொடுப்பார்.

பூஜையைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்து விட்டு பாபர் மசூதியை படுபாவிகள் இடித்ததால், ராணுவம் கையில் இருந்தும் இடிக்கும்வரை வேடிக்கை பார்த்த நயவஞ்சக நரசிம்மராவ் இவர்கள் மீது கனன்று கொண்டிருந்த கோபத்திற்கு வடிகாலாய் அன்று கொடுத்த ரத்த தானமும் யேசுதாஸின் கல்யாணியும் அமைந்திருந்தது.

என்னை முதன் முதலாக ரத்ததானம் செய்ய அழைத்துச் சென்ற எங்கள் வேலூர் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர் இருபத்தி ஐந்து முறைகளுக்கு மேல் ரத்த தானம் செய்தவர்.

முதல் முறை ரத்த தானம் அளிக்கச் சென்றபோது வீட்டில் மனைவியிடம் தகவல் சொல்லவில்லை. அவர் பயப்படுவாரோ என எனக்கு பயம். ஆனால் அவருக்கு அதில் மகிழ்ச்சிதான். அதனால்தான் என்னால் தொடர்ந்து இப்பணியை செய்ய முடிகிறது. என் மகனுக்கும் இதில் பெருமை உண்டு.

இன்னும் இப்பணியை தொடர முடியும் என்று நம்புகிறேன்.


4 comments:

  1. ஐம்பதாவது முறையாக ரத்த தானம் கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மையிலேயே பெரிய சாதனை.. வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. கருப்பு நாளில் சிவப்பு தானம் ! தொடரட்டும் உங்கள் சேவை ! வாழ்த்துக்கள் தோழரே !

    ReplyDelete