Friday, September 13, 2013

மோடி வேண்டாம் என்றால் ராகுல் வேண்டும் என்றா அர்த்தம்? நோ நோ





பாஜக உள்கட்சி குடுமிபிடி சண்டை பற்றி நேற்று எழுதியிருந்த பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களில், ஏதோ காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வர நான் விரும்புவது போல எழுதியிருந்தார்கள். அதனாலேயே விரிவான இந்த பதிவிற்கு அவசியம் ஏற்பட்டது.

2014 ல் நடைபெறப் போவது நாடாளுமன்றத் தேர்தல். எந்த கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுகிறதோ அக்கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள்தான் பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க இது ஒன்றும் ஜனாதிபதி தேர்தல் இல்லை. ஆனாலும் மோடியா, ராகுலா என்ற விவாதத்திலேயே தேர்தலின் போது மக்கள் முன்பாக வைக்க வேண்டிய கொள்கைகளை மூடி மறைக்க பெரிய கட்சிகளும் சரி முதலாளித்துவ ஊடகங்களும் சரி முயல்கின்றன.

மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அலட்சியம் செய்வது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால் பிடிப்பது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வெண் சாமரம் வீசுவது போன்ற எந்த விஷயத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. சில மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற இருவரும் கை கோர்த்து இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க பாஜக கொண்டு வந்த சட்டத்தை காங்கிரஸ் ஆதரித்தது. பென்சன் துறையில் அன்னியரை அனுமதிக்க இப்போது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திற்கு பாஜக ஆதரவளித்தது. ஊழல்களிலும் ஒருவருக்கு இன்னொருவர் சளைத்தவர்கள் இல்லை.  ஆக இரு கட்சிகளும் அவசியமில்லை, தேவையில்லை. இருவருமே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

பிறகு யார் என்ற கேள்விக்கு

எங்களால் நெஞ்சுயர்த்தி, பெருமிதத்தோடு சொல்ல முடியும்.

தேசத்திற்கு தேவையான மாற்றத்தை இடதுசாரிகளால் மட்டுமே தர முடியும். மக்களுக்கு நல்லாட்சி அளிப்பதற்கான தகுதியும் அனுபவமும் இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு.

ஏராளமான உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சி பீற்றிக் கொள்கிறதே! அவர்களா மனமுவந்து கொண்டு வந்தார்கள்? இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி நடந்த காலத்தில் அவர்கள் அளித்த அழுத்தத்தால் வந்தது அந்த சட்டம். தகவல் அறியும் சட்டமும் பேடண்ட் சட்டத்தின் திருத்தங்களும் இந்த தேசத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த கொடை.

நிர்வாகத்திலும் ஈடு இணையற்ற ஆட்சி அளித்தவர்கள் மார்க்சிஸ்டுகள் மட்டுமே. கேரளத்தில் தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஈ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், வங்கத்தில் தோழர்கள் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுராவில் தோழர்கள் நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக் சர்க்கார் – இத்தனை முதல்வர்களைக் கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி. இவர்கள் மீதோ, இவர்களின் அமைச்சர்கள் மீதோ இன்றுவரை யாராலும் சிறு துரும்பளவு ஊழல் புகாரைக் கூட சொல்ல முடியவில்லையே. கேரள மாநிலச் செயலாளர் தோழர் பினராயி விஜயன் மீதான புகார் கூட ஜோடிக்கப்பட்ட வழக்குதானே.

ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி வசம் நிலத்தைக் கொடுத்த பாரம்பரியம் வேறு எந்த கட்சிக்கு உண்டு?

உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உண்மையான அதிகாரங்களையும் நிதியையும் கொடுத்தது மார்க்சிஸ்ட் அரசுகள்தானே!

இருண்ட தமிழகம் என இன்று பேசிக்கொண்டிருக்கிறோம். வங்கமும் ஒரு காலத்தில் இருண்டுதான் போயிருந்தது. எங்களிடம் சட்டர்ஜி உண்டு, முகர்ஜி உண்டு, பானர்ஜி உண்டு, ஆனால் எனர்ஜிதான் கிடையாது என்று நகைச்சுவையே உண்டு. அந்த மாநிலத்தை இன்று மின் மிகை மாநிலமாக மாற்றியது யார்?

நூறு சதவிகித கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை முதலில் பெற்ற மாநிலம் கேரளாதானே! இன்று அந்த சாதனையை திரிபுரா அரசு நிகழ்த்தியுள்ளதே!

மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் கலவரங்கள், மசூதியை இடித்ததால் கலவரங்கள், இந்திரா காந்தி இறந்ததால் கலவரங்கள் என்று இந்தியா முழுதும் கலவர பூமியாய் காட்சியளித்த காலத்திலும் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது வங்கம்தானே. கோவையிலும் சென்னையிலும் கூட தாக்கப்பட்ட சீக்கியர்கள், பாதுகாப்பாய் உணர்ந்தது தோழர் ஜோதிபாசுவின் ஆட்சியில்தானே!

இறந்த பின்பு அடக்கம் செய்யக் கூட எட்டடி நிலம் கூட தேவையில்லை என்று தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு எழுதி வைத்த தோழர் ஜோதி பாசு, தோழர் அனில் பிஸ்வாஸ் போன்ற தலைவர்கள் வாழ்வது மார்க்சிஸ்ட் கட்சியில்தானே!

சிங்கூர், நந்திகிராம் என்று சிலர் கதைக்கக் கூடும்.

தொழில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காக சிங்கூர் திட்டம் வந்தது. தொழிற்சாலைக்கு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் வணிகத்திற்காகவும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை காங்கிரஸ் கட்சியும் பாஜக வும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அடிமாட்டு விலையை விட கேவலமான சொற்பத்தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படுகிறது. காடுகளை வழங்குவதிலும் கூட ஊழல் செய்துள்ளதாய் சமீபத்திய அறிக்கைகள் சொல்கிறது. நிலக்கரி சுரங்கத்திற்குள் கோப்புக்களை புதைத்து வைத்த பெருமை மன்மோகன் சிங்கிற்கு உண்டு.

ஆனால் சிங்கூரில் அளிக்கப்பட்டது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே.

அரசு மதிப்பல்ல, சந்தை மதிப்பு போல ஒன்றரை மடங்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.

குத்தகைதாரர்களுக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டது.

தகுதியான நில உரிமையாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.

நானோ தொழிற்சாலை ஊழியர்களுக்கான சீருடை தைக்கும் பணி, அவர்களுக்கான கேண்டீன் போன்றவைகளுக்கான பொறுப்பு அங்கே இருந்த பெண்கள் வசம் அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 90 சதவிகித நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை அளிக்க மனமுவந்து விருப்பக் கடிதம் அளித்தார்கள்.

சிங்கூரிலும் அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகள் வந்தால் மேற்கு வங்க இடது முன்னணி அரசை அசைக்க முடியாது என்ற அச்சம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் வந்தது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மம்தா பானர்ஜி. மம்தாவிற்கு எடுபிடி வேலை பார்த்தது மாவோயிஸ்டுகள். நந்திகிராம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த பின்னும் அவர்கள் அங்கே அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். சிங்கூர் தொழிற்சாலை குஜராத்திற்கு போனது.

நெருப்பை விட தூய்மையானவர்கள்,
காந்தியை விட எளிமையானவர்கள்.
மக்களை எப்போதும் நேசிப்பவர்கள்

அறிவில் சிறந்த தலைவர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும். உலகில் எங்கெல்லாம் செங்கொடி பறக்கிறதோ, அங்கேயெல்லாம் மக்களுக்கு நன்மைகள் நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனத்தை பேராசான்கள் மார்க்ஸும் ஏங்கல்ஸும் வெளியிட்ட போது “ ஐரோப்பாவை கம்யூனிச பூதம் ஆட்டி வைக்கிறது “ என்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்றும் கம்யூனிசம் மீது சிலருக்கு அச்சம் இருக்கிறது. அப்படி அச்சப்படுபவர்கள் ஊரை அடித்து உலையில் போடும் மோசடி முதலாளிகளாக இருப்பார்கள். இல்லை எதுவுமே தெரியாத அப்பாவிகளாக இருப்பார்கள் 

சிவப்பைப் பார்த்து படியாத சில  மாடுகள் வேண்டுமானால்  அச்சப்படலாம். மனிதர்கள்  அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. 

5 comments:

  1. SEVIDAN KAADHIL OODHIYA SANGU!

    ReplyDelete
  2. தனிப்பட்ட முறையில் இடது சாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது உண்மையே. ஆனாலும், ஊழலையே முழு மூச்சாக கொண்ட காங்கிரஸ் அரசை ஆதரிப்பதிலேயே அதன் நேர்மை கேள்விக்குரியாகிவிடுகிறது. காங்கிரஸ் அளவு ஊழல் குற்றச்சாட்டுகள் பி ஜே பி மீது இல்லை. மேலும், நீங்கள் பெருமை கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்பது மோடிக்கும் பொருந்தும் என்பதை நினைத்துப்பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. மோடி பற்றிய பொதுவான குற்றச்சாட்டுக்களை அலசி எழுதப்பட்ட மிக நல்ல கட்டுரை http://othisaivu.wordpress.com/

    படித்துப்பாருங்கள். நேர்மையான அலசலில் அதில் உள்ள உண்மைகள் புரியும்.

    ReplyDelete
  4. பெரும்பான்மை இல்லாததால் தான் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து அதில் குறிப்பிடப்பட்டவை தானே தகவல் அறியும் உரிமை சட்டமும் ஊரக வேலை வைப்பு சட்டமும்? அதை நிறைவேற்ற கம்யுனிஸ்டுகள் கொடுத்த அழுத்தம் தானே காரணம்? பின்னூட்டம் இடுபவர்கள் இதை மறக்க கூடாது . மறந்தால் வரலாறு மன்னிக்காது.

    ReplyDelete
  5. MOdi is100 times beter then any one from cong if it is ragul or mannu comnuist not posibel in india

    ReplyDelete