Saturday, July 22, 2017

நீயும் அப்பவே செத்து தொலைச்சிருக்கலாம்



எங்கள் மகளிர் மாநாட்டில் சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில அமைப்பாளர் தோழர் எம்.மகாலட்சுமி அவர்கள் பேசிய சில விஷயங்களை முன்னர் பதிந்திருந்தேன்.

இன்னொரு முக்கிய செய்தி இங்கே




பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் பணி செய்து கொண்டிருக்கிறேன். ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளி இறந்து போய் விட்டால் கரித்துண்டாக மாறிப் போய் விடுவார்கள். முதலாளிகள் தந்திரமாக தொழிற்சாலைக்கு வெளியே வைத்து விடுவார்கள்.

கரித்துண்டான அந்த உடல்களை பாயில் சுற்றி ஒரு ரிக்சாவில் ஏற்றுவோம். ரிக்சாவில் ஏற்ற அந்த ரிக்சாக்காரர் மறுத்தால் “இறந்து போனவனும் உன் வர்க்கம்” என்று சொல்லி ஏற்றுவோம். பட்டாசு ஆலையின் முதலாளி வீட்டின் முன்போ அல்லது அலுவலகத்தின் முன்போ அந்த உடலைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் இழப்பீடு கொடுப்பார்கள்.

எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டாயிரம் ரூபாய். இது பதினைந்து ஆண்டுகளூக்கு முன்பு. இப்போதெல்லாம் அரசு உதவி, இழப்பீடு, காப்பீட்டுத் தொகை என்று ஏழு லட்ச ரூபாய் வரை தருகிறார்கள். சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவு அது.

அதே நேரம் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களும் கரித்துண்டுகளே. ஆனால் அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்கும். உடலெல்லாம் வெந்து போனவர்களாக  முகம் தீய்ந்து போனவர்களாக, எந்த ஒரு வேலைக்கும் அடுத்தவர்களை நம்புபவர்களாக, உயிர் இருந்தும் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். விபத்தில் அவர்கள் உயிர் பிழைத்திருந்தாலும் வாழ்க்கை அவர்களுக்கு நரகமாக மாறி விட்டது.

இப்படி வேதனை அனுபவிப்பதற்குப் பதிலாக அந்த விபத்தில் இறந்து போயிருக்கலாமே என்று நெருங்கிய சொந்தங்களே சொல்லுமளவிற்கு அவர்கள் வாழ்க்கை ரணகளமாக இருக்கிறது.

அப்படி நடைப்பிணமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிலைமை மேம்பட சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறது.


3 comments:

  1. இதுபோலான ஆதரவற்றோருக்கு கரம் நீட்டுவதில் சிஐடியு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

    ReplyDelete
  2. வெற்றி நிச்சயம்!

    ReplyDelete
  3. மனம் வலிக்கிறது... இன்றைய உலகம் இப்படி ஆகி விட்டது. இதை மாற்றும் வலிமை அரசிடம் உண்டு. அரசை ஆட்டி வைக்கும் வலிமை மக்களிடம் உண்டு.
    மக்கள் தங்கள் சக்தியை உணராமல் சாதி, பணம் என்று குறுகி நிற்பதால் இப்படி வேதனை படுகின்றார்கள். மேல் நாடுகளில் மக்கள் தங்கள் சக்தியை உணர்ந்து இருப்பதால் இப்படி சிரம படுவதில்லை.

    ReplyDelete