Friday, July 14, 2017

தமிழ்ப்பாட்டும் பாடினா குத்தமாய்யா?



இசைக்கு மொழி உண்டு, உண்டு, உண்டு



இசைக்கு மொழி கிடையாது என்று இத்தனை நாள் எண்ணி இருந்தேன்.

எல்லைகள் கடந்து அனைவரையும் இன்புறச் செய்வது இசைதான் என்றும் எண்ணியிருந்தேன்.

இசையை ரசிக்க அர்த்தம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்று நினைத்திருந்தேன்.

சொல்லப்படும் விஷயத்தை புறம் தள்ளி இசையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்படியெல்லாம் நினைப்பது முட்டாள்தனம் என்று ஹிந்தி ரசிகர்கள் நிரூபித்து விட்டார்கள்.

“நேற்று, இன்று, நாளை” என்று தமிழில் பெயர் சூட்டப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் பதினாறு பாடல்களை ஹிந்தியில் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான், பனிரெண்டு தமிழ்ப்பாடல்களையும் பாடி ரசிகர்களை ஏமாற்றி விட்டாராம். அதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளி நடப்பு செய்து கடும் கண்டனம் செய்தது மட்டுமல்லாமல் தங்களிடமிருந்து பெறப்பட்ட கட்டணத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

இங்கிலாந்தில்தான் நடந்துள்ளது இச்சம்பவம். பிழைப்பிற்காக அன்னிய நாடு சென்றாலும் தங்களை இந்தியர்கள் என்று கருதாமல் “ஹிந்தி”யர்கள் என்று கருதுவதன் கோளாறு இது.

அரசியல் சாசனப்படி தேசிய மொழி என்று எதுவும் இல்லாவிட்டாலும், ஹிந்திதான் தேசிய மொழி என்று கதைக்கிறார்கள். ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி இருந்த போதிலும்  ஒவ்வொரு வாய்ப்பிலும் ஹிந்தியை திணித்துக் கொண்டே உள்ளனர்.

அரசாங்கம் இவ்வாறு செய்வதால் ஹிந்தி பேசும் மக்களுக்கும் தாங்கள் என்னவோ மிகவும் உயர்ந்த மொழியை பேசுபவர்கள் என்ற தெனாவெட்டு வந்து விடுகிறது. மற்ற மொழிகளை துச்சமாக கருதும் மனப்பான்மை அதிகரிக்கிறது.

இந்த திமிரும் தெனாவெட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர், தமிழ்ப்பாட்டுக்களை பாடுவதையே கண்டிக்க வைக்கிறது.

பனிரெண்டு தமிழ்ப்பாட்டுக்களையே உங்களால் சகித்துக் கொள்ள முடியாத போது, எங்கள் அலுவல்களிலும் அன்றாட வாழ்விலும் பயணங்களிலும் தொலைக்காட்சியிலும் நாங்கள் ஏன் ஹிந்தியை சகித்துக் கொள்ள வேண்டும்?

எங்கள் வரிப்பணத்தை ஹிந்தியை திணிப்பதற்கு ஏன் அனுமதிக்க வேண்டும்?

எங்கள் பாடல்களைக் கேட்க உங்கள் செவிகள் விரும்பாத போது உங்கள் திரைப்படங்களை ஏன் இங்கே திரையிட அனுப்பி வைக்கிறீர்கள்? உங்கள் படங்களில் எதற்கு எங்கள் திறமை வாய்ந்த கலைஞர்களை பயன்படுத்துகிறீர்கள்?

வெளி நாட்டுக்குப் போனாலும் அடுத்த மொழியை வெறுக்க முடிகிறதென்றால், ஹிந்திதான் மேலானது என்று கருதி கலாட்டா செய்ய முடிகிறதென்றால், நிச்சயமாக அவர்கள் காவிகளின் வார்ப்புக்களாக மட்டுமே இருக்க முடியும்.

பின் குறிப்பு : நான் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகன் அல்ல, பாலிவுட் திரைப்படச்சந்தையை மனதில் கொண்டு  இசையமைக்கப்படும் அவரது பெரும்பாலான பாடல்கள் தமிழ்ப்பாடல்கள் என்ற உணர்வையே தராது என்ற கருத்திலும் மாற்றம் கிடையாது. அவருக்கே இப்படி என்றால்????


No comments:

Post a Comment