Saturday, July 15, 2017

அப்பவே ஆரம்பிச்சுட்டாங்க!!!

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர்  ஆர். விஜயசங்கர்  தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். பொய்ப்பிரச்சாரம் செய்வதை காவிகள் இந்திய விடுதலைக்கு முன்னாளேயே துவங்கி விட்டனர் என்பதை இச்செய்தி உணர்த்துகிறது. 

 


பொய்ச் செய்திப் புலிகள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொய்ச் செய்திகளையும், காணொளிக் காட்சிகளையும் பரப்பி பதட்டம் உண்டாக்குவதில் சங்க பரிவாரம் முன்னணியில் இருப்பதற்கான ஆதாரங்கள் பல வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் புதிய தொழில் நுட்பங்கள் வருவதற்கு முன்னே அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இதையே செய்து வந்துள்ளனர் என்பதை கீதா பிரஸ் என்கிற அற்புதமான நூலை எழுதிய பத்திரிக்கையாளர் அக்‌ஷயா முகுல் இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் அம்பலப்படுத்தியுள்ளார்.






இது நடந்தது 1946இல். “ஒரு வங்கப் பெண் விடுக்கும் இதயத்தை உலுக்கும் வேண்டுகோள்” என்கிற தலைப்பில் ஒரு பிரசுரம் உத்திரப் பிரதேசம் முழுவது வினியோகிக்கப்பட்டது. நவகாளியில் ஒரு இந்துப் பெண் அவளுடைய தந்தை, மாமானார், குழந்தைகளின் முன் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்டாள் என்று விலாவாரியாக எழுதப்பட்டிருந்த அந்தப் பிரசுரம் “உங்கள் தர்மம்’” என்னவாயிற்று என்று சங்காராச்சாரியார்களை நோக்கிக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்து சகோதரிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு ஏன் கொதிக்காமல் இருக்கிறது உங்கள் ரத்தம் என்று இந்து சகோதரர்களையும் சாடியது. அன்றிருந்த பிரிட்டிஷ் அரசு எவ்வளவோ முயன்றும் ”இந்தப் பெண்” யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்தப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டது இந்து மகாசபை போன்ற அமைப்புகளும் கீதா பிரஸ் என்கிற நிறுவனமும்தான் என்று அது கண்டுபிடித்து விட்டது. கீதா பிரஸ் நடத்திய கல்யாண் என்கிற பத்திரிக்கை மதன் மோகன் மாளவியாவைக் கவுரவிப்பதற்காக வெளியிட்ட சிறப்பிதழிலும் “அப்பெண்ணின் வேண்டுகோள்” வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் இதுவே பேச்சாகிப் போனது. மாகாண போலீஸ் உளவுத் துறை ஆயிரக்கணக்கான பிரசுரங்களைக் கைப்பற்றியது. அது அலஹாபாத் நகரின் இந்து மகாசபை செயலாளரால் அச்சிடப்பட்ட அந்தப் பிரசுரம், “இந்துக்கள், குறிப்பாக இந்துப் பெண்கள், உலகிலுள்ள முஸ்லிம் கொடுங்கோன்மைக்கு எதிராக வாளெடுத்துப் போரிட வேண்டுமென்று” கேட்டுக் கொண்டதாக அரசுக்கு உளவுத் துறை அறிக்கை அனுப்பியது. 

கல்யாண் பத்திரிக்கையைத் தடை செய்யவேண்டுமென்று உளவுத் துறை பரிந்துரைத்தது.  இது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பட்டியலிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது கல்யாண். இதை எழுதிய பத்திரிக்கை ஆசிரியர் ஹனுமான் பிரசாத் போத்தார் பின்னர் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவில்லை என்பதை அரசிடம் ஒப்புக் கொண்டார்.  

இந்த ஒப்புதலுக்குப் பிறகும் அன்றைய உள்துறை செயலாளர் ராஜேஸ்வர் தயாள் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. 

அச்சு ஊடகத்தைப் பொய்பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய அவர்களின் சந்ததியினர்தான் இன்று சமூக வலைத்தளங்களைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

1 comment:

  1. இளவு மாற்றம்
    ச குண மாற்றம் னு
    பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,

    ReplyDelete