Saturday, July 15, 2017

ஆமாம், அகமதாபாத் சரிப்பட்டு வருமா?



அகமதாபாத் – பாரம்பரியச் சின்னம் – இன்னொரு  . . . .


யுனெஸ்கோ அமைப்பு அகமதாபாத் நகரை பாரம்பரிய நகராக அறிவித்தது தொடர்பாக பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அகமதாபாத்தை விடை  இன்னும் பழமையான, பாரம்பரியமான நகரங்கள் உள்ளதே என்ற குரல் இன்னும் அழுத்தமாக ஒலிக்கிறது.

இந்த சர்ச்சைக்கிடையில் எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா முகநூலில் எழுதிய பதிவு முக்கியமானது. இந்த சர்ச்சையை வேறு கோணத்தில் அணுகியுள்ளார்.

அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். முக்கியமான கட்டுரை. எனவே அவசியம் படியுங்கள்.




அன்புள்ள யுனஸ்கோவுக்கு..!! 

உலகின் பாரம்பரியமுள்ள நகரமாக எங்கள் இந்தியாவின் அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து ஒரு இந்தியக் குடிமகனாக மகிழ்ச்சி கொள்ள முகாந்திரம் இருந்தாலும், வரலாறு அதற்கான வாய்ப்பை வழங்கிடவில்லை. இந்த அறிவிப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வதாக எங்கள் பிரதமரும் அவரின் மகிழ்ச்சியை நாட்டு மக்களோடு பகிர்ந்து கொண்டதையும் செய்தித்தாள்களில் பார்த்தேன். 

நல்லது.. எங்கள் பிரதமரின்மீது துர்நாற்றம் வீசும் இஸ்லாமியப் பிணங்களின் இரத்தவாடை குறித்து உலகமே நன்கறியும் என்பதால் அதைக்குறித்து எதுவும் நான் இப்போது பேசப்போவதில்லை. எனக்கு உங்களோடும் (யுனஸ்கோ) எந்த பிணக்குகளும் இல்லையென்றாலும், சில விசயங்களை உங்களுக்கு நினைவுபடுத்தும் கடமை எனக்குள்ளதாகவே கருதுகிறேன். 

2001 ல் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச்சபைக் கூட்டத்தின் ' மனிதகுலத்தின் நினைவுச் சின்னங்களுக்கெதிரான குற்றங்கள்' குறித்தும், 'பண்பாட்டுச் சின்னங்களின் மீது வேண்டுமென்றே நடத்தப்படும் தாக்குதல்' குறித்தெல்லாம் ஆழமாக விவாதிக்கப்பட்டதையும், பலகட்ட விவாதங்களுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நெறிமுறைகளை ஏற்று அதில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளும், கையெழுத்திட்டதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

யுனெஸ்கோவின் கன்வன்சன் நெறிமுறைகளில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த இந்தியாவின் ஒரு மாநிலமே குஜராத். அந்த குஜராத்தில் ஒரு நகரமே அகமதாபாத். அதாவது உலகின் பாரம்பரியமுள்ள நகராக நீங்கள் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ள அகமதாபாத்.

அதே அகமதாபாத்தில்தான் உருது கவிதையின் தந்தை என்று போற்றப்பட்ட வாலிகுஜராத்தின் புனித ஸ்தலம் ஒன்று இருந்தது. 2002 மார்ச் 1 ம் தேதி இரவோடு இரவாக சங்பரிவார் கும்பலால் இடிக்கப்பட்டு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் பளபளக்கும் தார்ச்சாலை போடப்பட்டது. அதற்கான எந்தச்சுவடுமே எஞ்சியிராத அந்தத் தார்ச்சாலையின் மீது, ஒருவேளை நீங்களும் பயனித்திருக்கக் கூடும். 

அதே அகமதாபாத்தில்தான் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான 400 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமுள்ள பள்ளிவாசலொன்றும் இருந்தது. இப்போது அந்தப் பள்ளிவாசல் இருந்த இடத்தில் ஒரு கோவில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் ஹுல்லாதியா ஹனுமன் ( கோபக்கார ஹனுமன்) சிலைக்கு தினந்தோறும் பூஜைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. 

அதே அகமதாபாத்தில்தான்,

1458-1511 காலகட்டத்தில் அப்பகுதியை ஆண்ட சுல்தான் மெஹ்மூத் பெகடா வம்சத்தால் கட்டப்பட்ட மாலிக் ஆசின் பள்ளிவாசலும் முஹாபின் கான் பள்ளிவாசலும் தரைமட்டமாக்கப்பட்டன. இன்று அங்கே உயர்ந்து நிற்கும் பணியா முதலைகளின் ஏதோ ஒரு வணிக வளாகத்தின் அஸ்திவாரங்களுக்குள் அதன் ஐநூறாண்டுப் பாரம்பரியத்தின் சுவடுகள் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அதே அகமதாபாத்தில்தான் வடோதரா அரசவம்சத்தின் மிகச்சிறந்த பாடகரான உஸ்தாத் ஃபயாஸ்கான் சமாதி புல்டோசர்களால் அழிக்கப்பட்ட பிறகு ஹனுமன் சிலை நிறுவப்பட்டது. 

அதே அகமதாபாத்தில்தான் சங்பரிவார் வெறியர்களால், புல்டோசர்களையும் கிரேன்களையும் பயன்படுத்தி 230 பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களும் இருந்த சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டது. 

அதே அகமதாபாத்தில்தான் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் இடிபாடுகளுக்குள் இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் 'இன்ஸ்டண்ட்' சமாதிகள் மூடப்பட்டிருக்கிறது. 

இவ்வளவுக்குப் பிறகும் அங்கு எஞ்சிய பாரம்பரியச் சின்னங்களை நீங்கள் அங்கீகரித்திருப்பதில் மகிழ எனக்கேதுமில்லை. 

ஆனால், என்றாவது ஒருநாள் எங்கள் இந்தியா நேர்மையான ஆட்சியாளர்களால் ஆளப்படும். அப்போது, உலகின் பல இடங்களில் நாஜிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு கன்சண்ட்ரேசன் கேம்ப்புகள் 'அழிவுகளின் நினைவுகளைச் சொல்லும்' நினைவுச் சின்னமாக்கப்பட்டது போல சங்பரிவார வெறியர்களால் விளைந்த 'அழிவுகளின் நினைவுச் சின்னங்கள்' குஜராத் முழுதும் ஆயிரக்கணக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அன்று நீங்கள் வெட்கப்படுவீர்கள்..


No comments:

Post a Comment