Monday, July 17, 2017

மீரா குமார் வென்றால் நல்லது




இந்த பதிவை எழுதும் வேளையில் குடியரசுத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் முடிந்துள்ளது.

வாக்குப் பதிவு விபரங்கள் முழுமையாக நாளை காலையில் தெரிந்து விடும். யாரெல்லாம் வாக்களித்தார்கள், யாரெல்லாம் ஒதுங்கி நின்றார்கள் என்ற விபரமும் தெரிந்து விடும். வாக்களிக்காதவர்கள் இரண்டு வகைப்படும். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் ஒரு வகை. வாக்களிக்க சோம்பல்பட்டு வீட்டிலேயே இருப்பவர்கள். இவர்களே தேர்தல் மூலம் பொறுப்புக்கு வந்தவர்கள் என்பதுதான் கொடுமை. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் செல்லாத ஓட்டுக்கள் போட்டார்கள் என்ற விபரம் விரைவில் தெரிந்து விடும்.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

இது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவிதானே! யாராக இருந்தால் என்ன?

இப்படி பல குரல்கள் ஒலிக்கிறது.

ஆம். பல ஜனாதிபதிகள் இப்பதவியை அப்படி ஒரு அலங்கார பொம்மையாக மாற்றி விட்டு போயுள்ளனர். அரசியல் சாசனமும் குடியரசுத்தலைவருக்கு அவ்வளவு அதிகாரங்களைத் தரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரத்தை வழங்கி உள்ளது.

ஆனால் குடியரசுத்தலைவர் பதவி என்பது வெறும் அலங்கார பொம்மை மட்டுமல்ல.

அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு குடியரசுத்தலைவருடையதுதான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜனநாயகப்பாதையிலிருந்து பிறழ்கிற போது தட்டிக் கேட்டு தடம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை குடியரசுத்தலைவருடையதுதான்.
அவரச நிலைக்காலத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அக்கடமையிலிருந்து விலகியவராக திரு ஃப்க்ருதீன் அலி அகமது காட்சியளிக்க, பீகார் அரசை கவிழ்க்கும் முடிவை நிராகரித்ததன் மூலம் கடமையை சரியாக நிறைவேற்றியவராக திரு கே.ஆர்.நாராயணன் உயர்ந்து நிற்கிறார். குஜராத் பற்றி எரிந்த நேரத்தில் மத்தியரசை தட்டிக் கேட்டவரும் அவர்தான்.

மத்தியரசு என்ன சொன்னாலும் தலையாட்டக்கூடிய ஒரு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஊறிப் போன ராம் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் அபாயகரமானது.

ஏற்கனவே மத்தியரசு வெறி பிடித்து அலைகிறது. ஆட்சியைத் தக்க வைக்க எந்த அளவிற்கும் கீழிறங்க தயாராக உள்ளது. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுனர்கள் மூலமாக குதிரை பேர மோசடிகள் செய்து வருகின்றவர்கள். அவர்களின் கைப்பாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

வாய்ப்பு குறைவு என்று புள்ளிவிபரங்கள் சொன்னாலும்

மனம் என்னமோ சுயேட்சையாக செயல்படக்கூடிய திருமதி மீரா குமார் வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறது,

ஏனென்றால் இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலில் அதுதான் நாட்டிற்கு நல்லது.  

No comments:

Post a Comment