Sunday, July 9, 2017

பாரதி சிலையை அகற்றுங்கள்

மதுரையில் கல்லூரி படித்த காலத்தில் டவுன் பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் சேதுபதி பள்ளியையும் பஸ்ஸிலிருந்து பார்த்தாலே தெரியும் பாரதி சிலையையும் ஆவலோடு பார்ப்பேன். 

சமீபத்தில் மதுரை சென்ற போது கூட ஆட்டோவிலிருந்து எட்டிப் பார்த்தேன். 

பாரதி பணியாற்றிய பள்ளி என்பதால் சேதுபதி பள்ளி மீது மரியாதை உண்டு. இன்று தீக்கதிர் நாளிதழில் படித்த செய்தி, அந்த மரியாதையை மனதிலிருந்து அகற்றி விட்டது.

இப்படி ஒரு செயல் புரிந்த அந்த பள்ளி வளாகத்தில் இருக்கிற பாரதி சிலையை அகற்றி விடுவதே அவருக்கு செய்கிற மரியாதை.

தோழர் வெண்புறா சரவணன் அவர்கள் வரைந்த படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.


 




ஆர்எஸ்எஸ் ஆசிரியர்களின் கால்களை மாணவர்களை கழுவ செய்த கொடுமை.. !
______________________________________________

பாரதியார் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையுடைய மதுரை சேதுபதி பள்ளியில் மாணவ மாணவிகளை ஆர்எஸ்எஸ் ஆசிரியர்கள் தங்களின் கால்களை கழுவ செய்து பூசை செய்தனர். இதனை தடுக்க சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

நேற்று (8-7-2017) குரு பூர்ணிமா திதியாம் அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 108 ஆசிரியர்கள் சேதுபதி பள்ளியில் ஒன்றிணைந்தனர். அங்கு பயிலும் மாணவ மாணவியர்களை கட்டாயப்படுத்தி வரவழைத்த ஆசிரியர்கள், அவர்களின் கால்களை தாம்பூழ தட்டில் வைத்து தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்த செய்திருக்கின்றனர். இதில் இந்த பள்ளிக்குள் மாடுகளை அழைத்து சென்று கோ பூசை, பாத பூசை, கங்கா பூசை உள்ளிட்ட பல்வேறு பூசைகளையும் நடத்தியிருக்கின்றனர்.

இதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் உடனே திரண்டு பள்ளிக்குள் சென்று மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி ஆர்எஸ்எஸ் நபர்களின் கால்களை கழுவ செய்வதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் மாணவிகள் கால்கழுவி விடுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை வாலிபர் சங்கத்தினரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதோடு, கைது செய்தனர்.
*
-தீக்கதிர்.
 

3 comments: