Tuesday, July 11, 2017

திட்டமிட்டு ஒளிக்கப்பட்ட பாதை

மாற்று சினிமாவின் தந்தையாக கருதப்படுகிற நிமாய் கோஷ் தமிழிலே ஒரு திரைப்படமெடுக்க முயல்கிறார். இசை எம்.பி.சீனிவாசன், பாடல்கள், வசனம் ஜெயகாந்தன். ஏராளமானவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் திரட்டி படம் எடுக்கப்படுகிறது. கிளாப் அடித்து படப்பிடிப்பை ஜீவா துவக்கி வைக்கிறார். கம்யூனிஸ்டுகள் பலரும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

பக்கத்து தளத்தில் படப்பிடிப்பில் இருந்த லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் "கொக்கிகள் எல்லாம் திரைத்துறைக்கு வருகிறார்கள். இதை விடக் கூடாது" என்று சொல்கிறார். 

திரைப்படம் முடிகிறது. நன்றாகவே வந்து தேசிய விருதும் கிடைக்கிறது. அப்படத்தை வெளியிடும் உரிமையை ஏ.வி.எம் நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. பெரிய நிறுவனம் தொடர்புடையதால் படம் நன்றாகப் போகும் என்று நம்புகிறார்கள் படக்குழுவினர்.

சென்னை, தாம்பரம் தாண்டி ஒரு சிறிய திரையரங்கில் இரண்டே காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டு அத்தோடு அந்தப் படம் பெட்டியில் முடக்கப்படுகிறது. அதன் ஒரு பிரதி கூட இப்போது இல்லை. மாற்று முயற்சிகளை முடக்குவதும் அப்படி முயற்சிகள் வருகையில் திசை திருப்புவது காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.

பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றோர் யதார்த்தப் படங்களை எடுத்த சூழலில் முரட்டுக்காளை, சகலகலாவல்லவன் என்று திசை திருப்பியது ஏ.வி.எம் நிறுவனம் என்பதை மறக்கக் கூடாது. 

இப்போது ஜோக்கர் படத்தின் காட்சிகளை எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புவதில்லை என்பதை பழைய நிகழ்வோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 

அன்று திட்டமிட்டு முடக்கப்பட்ட படத்தின் பெயர்

"பாதை தெரியுது பார்"



வேலூரில் நடைபெற்று வரும் புத்தக விழாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமுஎகச வின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான தோழர் களப்பிரன் பேசியதிலிருந்து.



 
பின் குறிப்பு : அவரது இயற்பெயர் ராஜன். எங்களின் தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் துணைப் பொருளாளர் என்பது கூடுதல் செய்தி. மேலே உள்ள படம் இன்று எடுத்தது. போதுமான ஒளி இல்லாததால் சரியாக வரவில்லை. எனவே எங்கள் கோட்டச்சங்கம் நடத்திய கலைவிழாவை  அவர் பறையடித்து துவக்கி வைத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

2 comments:

  1. திரைப்படம் பற்றி நிறைய தகவல்களை வைத்திருப்பவர் களப்பிரன் ! போட்டு உலுக்குங்கள் ! நிறைய கிடைக்கும் ! ---காஸ்யபன்.

    ReplyDelete
  2. who are kokki, bro.

    ReplyDelete