Wednesday, October 30, 2013

நரேந்திர மோடியும் ஒரு கல்லூரி மாணவனும்



தன்னை ஒரு சூப்பர் மேனாக சித்தரிக்க தொடர்ந்து மோசடி விளம்பரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நரவேட்டை மோடி இப்போது புதிதாக இறந்து போனவர்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இறந்த போது அவருக்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்பது மோடியின் குற்றச்சாட்டு. வல்லபாய் படேல் மீது இப்போது தனிப்பாசம் செலுத்த தொடங்கியுள்ளார் மோடி. கோடிக்கணக்கில் செலவு செய்து இரும்பில் சிலை வைப்பதால் அதன் மூலம் சில ஆயிரம் வோட்டுக்களை பெற முடியுமா என்று பார்க்கும் தேர்தல் உத்திதான் அது.

ஆனால் சர்தார் வல்லபாய் படேல் மீது  இவர்கள் பாசத்தில் உருக உருக, மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின்பு தேசத்தின் ஒற்றுமையை குலைக்க சதி செய்யும் அமைப்பு என்று கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தது படேல்தான் என்பதுதான் இயல்பாக நினைவிற்கு வருகிறது.

படேலை உயர்வாக சித்தரிக்கும்  வேளையில் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட ஜவஹர்லால் நேரு வரவில்லை என்று கூறுவதன் மூலம் அவரை இழிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தான் என்பார்கள். ஆனால் இவரது புளுகோ ஒரே நாளில் அம்பலமாகி விட்டது. முன்னாள் இந்தியப் பிரதமர்  மொரார்ஜி தேசாய் எழுதிய சுயசரிதையில் படேல் அவர்கள் இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தும் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும் கலந்து கொண்டார்கள் என்று எழுதியதை புனியா என்பவர் வெளியிட அண்ணன் மோடியின் அடுத்த பொய்யும் சந்தி சிரித்து விட்டது.

“ சந்திப்பு”  திரைப்படத்தைப் பற்றி இரு தினங்கள் முன்பு நான் எழுதும்போதே என் பையன் சண்டை போட்டான். இறந்து போன ஒரு மனிதரை விமர்சனம் செய்து எழுதுவது சரியில்லை என்பது அவனது வாதம். அது திரைப்பட விமர்சனமாக இருந்தாலும் அது நியாயமான விமர்சனமாக இருந்தாலும் அவசியமில்லை என்று அழுத்தமாக வாதிட்டான். அதன் பின்பு ஏற்கனவே எழுதிய தலைப்பை மாற்றி, வேறு சில வாசகங்களையும் மாற்றி பதிவிட்டேன்.

இறந்து போன ஒருவரைப் பற்றிய விமர்சனம் நியாயமாகவே இருந்தாலும் அதைச் சொல்வது சரியில்லை என்ற உணர்வு ஒரு கல்லூரி மாணவனுக்கு இருக்கிறது.

ஆனால் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு மனிதன் இறந்து போன முன்னாள் பிரதமர் பற்றி பொய் சொல்லுகிறார். தான் சொன்னது பொய் என்பது அம்பலமான பின்பும் கூட சொன்னதை திரும்பப் பெறவில்லை. அதற்காக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

மன்மோகன்சிங் பேசாமல் கழுத்தறுக்கிறார்.
நரேந்திர மோடி பொய் பேசி கழுத்தறுக்கிறார்.

இந்த மனிதரை பிரதமராக்க, பொய் பேசாமல் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியின் பெயரில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் தமிழை அருவியாக பொழியவுள்ளார். என்ன கொடுமை சார் இது?

3 comments:

  1. மதப்பித்து ஜாதிப்பித்து வந்தால் நாடு உருப்படாது. ஒரு ஜாதி ஆட்களை மட்டும் தனியாக வாழ்ந்து காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.
    தமிழ்மணம் வோட்டு + 1

    ReplyDelete
  2. I like NaMo. He do better than Cong. Why always Blame him? Give him a chance .

    ReplyDelete
  3. மன்மோகன்சிங் பேசாமல் கழுத்தறுக்கிறார்.
    நரேந்திர மோடி பொய் பேசி கழுத்தறுக்கிறார்.
    >>
    இவர்கள் ரெண்டு பேரும்தான் பிரதம வேட்பாஆள்ர்கள். இனி இந்தியாவின் கதி!?

    ReplyDelete