Friday, October 4, 2013

கமலஹாசன் தசாவதாரத்தில் சொன்னது ஒன்றுமேயில்லை.



சிந்தடிக் பயோ வெப்பனை பயன்படுத்துவதுதான் தசாவாதரம் படத்தின் மையக் கருத்து. அமெரிக்கா மீதான விமர்சனமும் அந்தப் படத்தில் இருக்கும் ( விஸ்வரூபத்தில் அப்படியே பல்டியடித்திருப்பார் என்பது வேறு விஷயம்) ஆனால் அந்த திரைப்படத்தில் ஆயுதம் அழிக்கப்பட்டு விடும். ஆனால் அமெரிக்காவின் கறை படிந்த வரலாற்றில் ரசாயன ஆயுதங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள செய்திகள் அம்பலப்படுத்தும்.

ரசாயன ஆயுதங்களை அழிக்கும் தார்மீகப் பொறுப்பு அமெரிக்காவிற்கு உள்ளதா என்பதை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் கவுண்டர் பஞ்ச் என்ற இதழில் ஜெஃப்ரி செயிண்ட் களெய்ர் என்பவர் விளக்கியுள்ளார். இன்சூரன்ஸ் வொர்க்கர் அக்டோபர் 2013 இதழில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.

காலரா கிருமிகள் அடங்கிய போர்வைகளை செவ்விந்தியர்களுக்கு அளித்ததன் மூலம் அமெரிக்காவின் ரசாயன யுத்தம் 1860 ஆம் ஆண்டே தொடங்கியது.

1900 த்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கைதிகள் ஐவருக்கு பிளேக் நோய்க்கிருமியை செலுத்தினார்கள்.

1915 ல் மிஸிஸிபியில் பனிரெண்டு கைதிகளுக்கு மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கிருமியை செலுத்த அனைவரும் இறந்து போனார்கள்.

முதலாவது உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா தயாரித்த கடுகு வாயுவை தனது சொந்த வீரர்கள் மீதே பிரயோகித்தது. அரசு தயாரித்த முகமுடிகளின் வேலைத்திறனை பரிசோதிக்க நடைபெற்ற இம்முயற்சியில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு கூட வழங்கப் படவில்லை.

1920 ல் பியூர்டோ ரிகோவிலும் 1930 ல் பிலிப்பைன்ஸிலும் அமெரிக்க அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீதும் கடுகு வாயு பிரயோகிக்கப்பட்டது.

ராக்பெல்லர் பவுண்டேஷனின் டாக்டர் கார்னிலியஸ் ரோட்ஸ் என்பவர் பியூர்டோ ரிகோவின் கைதிகள் மீது புற்று நோய்க்கிருமிகளை செலுத்த 13 பேர் இறந்து போனார்கள். அரசின் எதிர்ப்பாளர்களை கிருமிக் கொண்டுகள் மூலம் அழித்தொழிக்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த அவரை அமெரிக்கா தனது நுண்ணுயிர் ஆயுதப் பிரிவின் தலைவராகவும் எரிசக்தித்துறையின் தலைவராகவும் அழகு பார்த்தது. அமெரிக்க மக்கள் மீது கதிரியக்க சோதனை நடத்தியவர் அவர். 1942 ல் அமெரிக்க ராணுவ, கப்பற்படை மருத்துவர்கள் சிக்காகோவில் நானூறு கைதிகள் மீது மலேரியா கிருமிகளை செலுத்தியது.

இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்க, ரஷ்ய கைதிகள் மீது நோய்க்கிருமிகளை செலுத்துவது, பிளேக் கிருமி தடவப்பட்ட தக்காளிகளை அளித்தது. பால்வினை நோய்களை உண்டாக்கும் கிருமிகளை பெண்கள் மீது செலுத்தியது, உயிரோடு இருப்பவர்களை மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை நடத்தி உறுப்புக்களை எடுத்தது, கிருமி குண்டுகளை வீசியது என்று எண்ணற்ற கொடூரங்களை நிகழ்த்திய டாக்டர் ஷிரோ இஷீ என்ற ஜப்பான் நாட்டு நுண்ணுயிர் பிரிவு தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பத்தாயிரம் பக்கம் கொண்ட அவரது ஆராய்ச்சிக் குறிப்புக்களை மட்டும் பெற்றுக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தின் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றவும் செய்தார்.

1950 ல் அமெரிக்க கப்பற்படை நிமோனியாவை உருவாக்கும் பாக்டீரியாவை சான் பிரான்ஸிஸ்கோ  நகர் மீது தூவியது.

1951 ல் ஆந்தராக்ஸ் அடங்கிய சிறகுகளையும் கொசுக்களையும் வட கொரியா மீதும் மஞ்சூரியா மீதும் ஏவியது.

1953 ல் கனடா மற்றும் அமெரிக்க நகரங்கள் ஆறின் மீது ரசாயன மேகங்களை உருவாக்கி  அமில மழை பெய்ய வைத்தது. அதிலே கனடாவின் வின்னிபெக் நகரத்து மக்கள் காட்மியம் என்ற ரசாயனப் பொருளை சுவாசித்ததால் நுரையீரல் நோய்க்கு உள்ளானார்கள்.

1951 ல் அமெரிக்க ராணுவம் வர்ஜினியாவில் உள்ள கடற்படைக்கு வழங்கும் உணவில் பாக்டீரியாக்களை இணைத்தது. அதே வருடம் வாஷிங்டன் விமான நிலையத்திலும் இதே வேலையை செய்தது. இதிலே ஏராளமானவர்கள் வாந்தியாலும் சுவாசப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டார்கள்.

ஜார்ஜியா, ப்ளோரிடா ஆகிய இரு அமெரிக்க நகரங்களிலேயே டெங்கு காய்ச்சலைப் பரப்பக்கூடிய கோடிக்கணக்கான கொசுக்களை ராணுவம் ஏவி விட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டார்கள். மருத்துவ ஊழியர்கள் என்ற போர்வையில் ராணுவ வீரர்களே அதைப் புகைப்படமும் எடுத்தார்கள்.

1965 ல் பென்ஸில்வேனியாவில் உள்ள சிறையில் உள்ள கறுப்பின கைதிகளுக்கு டையாக்ஸின் என்ற ரசாயனம் அடங்கிய ஊசி செலுத்தப்பட்டு அவர்களில் பெரும்பாலோர் இறந்து போனார்கள். இந்த சோதனையை டவ் கெமிக்கல்ஸ் ( யூனியன் கார்பைடின் தற்போதைய உரிமையாளர்) நிறுவனமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து நடத்தியது.

அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்கா டையாக்ஸினின் பவுடர் வடிவமான ஏஜென்ட் ஆரஞ்சை போராடும் வியட்னாம் மக்கள் மீது பிரயோகித்தது. இதிலே ஐந்து லட்சம் வியட்னாமியர்கள் கொல்லப்பட்டனர். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அதன் பாதிப்பு உள்ளது.

1966 ல் நியூயார்க் சுரங்க ரயில் பாதையில் ஒரு பாக்டீரியாவை வாயு வடிவில் ஏவி சோதனை செய்தது அமெரிக்க ராணுவம்.

1967 ல் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உணவு மட்டும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் தலைமையகத்து குடிநீரில் சி.ஐ.ஏ ரசாயனத்தை கலந்து குடிநீர் மூலமாக கொலைகள் செய்ய முடியுமா என்று சோதித்தது.

1971 ல் கியூபாவின் வான்வெளியில் ஸ்வைன் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை சி.ஐ.,ஏ தூவியது.

1980 ல் மியாமியிலும் பியூர்டோ ரிகா விலும் முகாம்களில் அடைக்கப் பட்டிருந்த ஹைட்டி நாட்டவர்களுக்கு அமெரிக்க மருத்துவர்கள் அளித்த ஹார்மோன் மருந்துகளால் கைனமோசியா ( பெண்களைப் போன்ற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுவது ) என்ற நோய் உருவானது.

கியூபாவால் வெளியேற்றப்பட்ட எட்வர்டோ அர்ஸோனா என்பவர் மூலம் 1980 ல் அமெரிக்கா அனுப்பிய கிருமிகள் மூலம் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலில் 188 பேர் இறந்து போனார்கள். 1984 ல் நிகரகுவாவில் 50,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்து போனார்கள். அமெரிக்க அரசு விரும்பாத இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்க சி.ஐ.ஏ அனுப்பிய விமானங்கள் அளித்த பரிசு அது.

1996 ல் கியூபாவின் உருளைக்கிழங்கு, பனை மற்றும் பல தாவரங்களை அழிக்கக் கூடிய கிருமிகளை ஏவியது அமெரிக்கா. தாழ்வாக பறக்கும் விமானங்கள் மூலம் அமெரிக்க சி.ஐ.ஏ தான் கிருமிகளை பரப்பியது என்பதை கியூபா நிரூபித்தது. அதற்காக ஐ.நா அமைத்த விசாரணை நடைபெறவிடாமல் அமெரிக்கா  பார்த்துக் கொண்டது.

முதலாவது வளைகுடா யுத்தம் முடிந்த போது அமெரிக்கா காமாஷியா என்ற இடத்தில் இருந்த இராக்கின் ரசாயன ஆயுதக் கிடங்கை தகர்த்தது. அதிலே அமெரிக்க படையினர் 20,000 பேர் சரின் என்ற நரம்பு மண்டலத்தை தாக்கும் வாயுவால் பாதிக்கப்பட்டார்கள். வளைகுடா யுத்த நோய் என்ற புதிய நோயால் அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டதற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்றால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை ஊசி மருந்துகளை வலுக்கட்டாயமாக போட்டதும் இன்னொரு முக்கியக் காரணம்.


இப்போது சொல்லுங்கள், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு தார்மீகக் கடமை இருக்கிறது அல்லவா? ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதல்லவா? அல்லது ஒரு வீதியில் இரண்டு தெரு நாய்கள் கூட இருக்க முடியாதே! ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் தங்களின் உரிமையில் மற்றவர்கள் கைவைப்பதை அமெரிக்கா எப்படி அனுமதிக்கும்? 

2 comments:

  1. இவ்வளவையும் செய்யும் அமெரிக்காவிற்கு தான் மன்மோகன் கைக்கூலியாக திகழ்கிறார். வெட்கம் கெட்ட ஜென்மங்கள். நம் நாட்டை அடியோடு ஒழித்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார் போல

    ReplyDelete
  2. Mr.Gopi, Mr.MMsingh is installed there by them. You cannot blame an employee for being dedicated to the jod allotted by his employer!

    ReplyDelete