Tuesday, October 8, 2013

தவறை நியாயப்படுத்தும் “மனசாட்சி”யற்ற தர்க்கங்கள்
ஏற்கனவே இரண்டு முறை எழுதிய பிரச்சினையின் தொடர்ச்சிதான் இது. புதுவையிலிருந்து  வெளியாகும் நமது மனசாட்சியின் ஆசிரியர் நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவைப் பிரதேசச் செயலாளர் தோழர் பெருமாள் மூலம் வேறு ஒருவரை தொடர்பு கொண்டு என் தொலைபேசி எண்ணை பெற்றதாகவும் கூறினார்.

யாரோ ஒருவர் நான் எழுதியதை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் அதை தான் அப்படியே பிரசுரித்ததாகவும் கூறி விட்டு, நீங்கள் எழுதியது என்று தெரியாதபோது உங்கள் பெயரை எப்படி குறிப்பிட முடியும் என்று என்னை எதிர்க் கேள்வி வேறு கேட்டார்.

எனக்கு வந்த செய்திதான் முக்கியம். அதை நீங்கள்தான் எழுதியதா அல்லது வேறு யாராவது எழுதியதா என்று கேட்டுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது என்பது அவருடைய இன்னொரு வாதம். எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரவே அவர் தயாராக இல்லை. இதில் பத்திரிக்கை தர்மம் எல்லாம் பாதிக்கப்படவில்லையாம்.

அவர் எனக்கு தொலைபேசி செய்ததே அவருடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்குத்தானாம்.

காங்கிரஸ் பத்திரிக்கை என்று நான் எழுதி விட்டேனாம். இருபது பக்க பத்திரிக்கையில் ஆறு பக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள பல வண்ண விளம்பரம், புதுவை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டின் படி புதுவை அரசின் மீதான தாக்குதல், கவர்னருக்கு புகழுரை, என்று பார்க்கும் போது இயல்பாக காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கையாகவே எனக்கு தோன்றியது. நானும் நாற்பது வருடங்களாக தமிழ் பத்திரிக்கைகளை படித்து வருபவன். தமிழக, இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவன். அப்படி குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு களங்கம் கற்பித்து விட்டேனாம்.

அந்தப் பத்திரிக்கையை முழுமையாக படிக்கும்போது அது பற்றி உருவான அபிப்ராயத்தை இங்கே சொல்லப் போவதில்லை. ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு பிறகு ஏதாவது சொன்னால் அது காழ்ப்புணர்வின் அடிப்படையில் சொல்லப்பட்டதாக ஒரு தோற்றம் கிடைத்து விடும்.

இதிலே இன்னொன்று வேறு. எனது தொலைபேசி எண்ணை இவருக்கு அளித்தவர், கடந்த சில வருடங்களாக எனக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் கீழ்த்தரமான  பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு நபர். நான் எழுதியது சரியில்லை என்று அவரே சொன்னாராம் வேலிக்கு ஓணான் சாட்சி.

தனது தவறை நியாயப்படுத்த அடுத்தவர்கள் மீது பழி போட நினைக்கும் இது போன்ற நபர்களை என்ன செய்ய முடியும்? ஊடகத்துறையில் இது போன்றவர்கள் அதிகமாகிக்கொண்டு வருகின்றனர் என்பதுதான் வருத்தமான செய்தி.

பின் குறிப்பு : இந்த பதிவை வலையேற்றுவதற்கு முன்பாக அந்தப் பத்திரிக்கையின் இணைய தளத்திற்குச் சென்றால் இன்னொரு அதிர்ச்சி. இதற்கு முந்தைய இதழிலும் “ யூ டூ கிருஷ்ணய்யர் ? “ என்று நான் இங்கே எழுதியிருந்தது வார்த்தை மாறாமல் அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் என்னுடைய பெயரில் வெளியாகவில்லை. இதுவும் யாரோ மின்னஞ்சலில் அனுப்பியது என்று அவர் நியாயப்படுத்தலாம். இன்னும் பழைய இதழ்களுக்கெல்லாம் நான் செல்லவில்லை. சென்றால் அலமாரியிலிருந்து எத்தனை எலும்புக்கூடுகள் வெளி வருமோ? (Skeletons hide in the Cupboard  என்ற ஆங்கில வாசகத்தின் அடிப்படையில் எழுதியுள்ளதைக் கூட களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு வரலாம்)  


3 comments:

 1. //யாரோ ஒருவர் நான் எழுதியதை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் அதை தான் அப்படியே பிரசுரித்ததாகவும் கூறி விட்டு, நீங்கள் எழுதியது என்று தெரியாதபோது உங்கள் பெயரை எப்படி குறிப்பிட முடியும் என்று என்னை எதிர்க் கேள்வி வேறு கேட்டார்.

  எனக்கு வந்த செய்திதான் முக்கியம். அதை நீங்கள்தான் எழுதியதா அல்லது வேறு யாராவது எழுதியதா என்று கேட்டுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது என்பது அவருடைய இன்னொரு வாதம்//
  படித்த முட்டாள்கள்! இவர்கள்தான் அரசியல் வாதிகளின் தவறுகளை கேள்வி கேட்கும் நிலையில் இருப்பவர்கள் என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது! அறிவு திருட்டு குறித்த குறைந்த பட்ச குற்ற உணர்ச்சி இல்லை என்பது கொடுமை!

  ReplyDelete
 2. ஆக குறைந்தது அவர் உங்களிடம் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திய போது யாரோ ஒருவர் அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய உங்க கட்டுரையை தான் அப்படியே பிரசுரித்ததிற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.ஆனா அவர் உங்களுக்கு தொலைபேசி செய்ததே அவருடைய எதிர்ப்பை(?) பதிவு செய்வதற்கு என்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.

  ReplyDelete
 3. YOU CARRY ON COMRADE. FOOLS CAN NOT WRITE ON THEIR OWN....

  ReplyDelete