Monday, October 28, 2013

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சோதனைக்காலம்




நேற்று சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சந்திப்பு திரைப்படம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது கொஞ்சம் நினைவுகளை கிளறி விட்டது.

கல்லூரி இரண்டாம் ஆண்டின் முதல் நாள் அது. விடுதி வாழ்வின் முதல் நாளும் கூட. ஏனென்றால் முதல் வருடம் என் அக்காவின் மாமனார் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்திருந்தேன். காலையில் நெய்வேலியிலிருந்து மதுரை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இறங்கி டீ சாப்பிடும்போதே தினத்தந்தி கடைசி பக்கம் முழுவதுமே சந்திப்பு திரைப்படத்தின் விளம்பரம்தான். பிரம்மாண்டமான செட்டிங்கின் வண்ணப்படம் ஆவலைத் தூண்டியது.

வகுப்பு முடிந்ததும் அவசரம் அவசரமாக சினிப்ரியா தியேட்டர் நோக்கி புறப்பட்டோம். அந்த ப்ரியா காம்ப்ளெக்ஸ் கோன் ஐஸ் நன்றாகவே இருக்கும். ஒவ்வொரு நாளுக்கு ஒரு சுவை. இன்று என்ன ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் என்று பார்த்தெல்லாம் அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்க போன காலம் அது. (இப்போதும் அந்த சுவை உள்ளதா என்பதை மதுரைக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்)

“ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்பில்கள் குடி கொண்ட கூடு” என்ற அருமையான பாடலோடு ஆரம்பம் என்னமோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் சோதனை தொடங்கியது. ஸ்ரீதேவி டிஸ்கோ ஆட, அதற்கு நட்சத்திர ஹோட்டல் சர்வரான சிவாஜி கணேசனும் டிஸ்கோ மூவ்மெண்ட் கொடுத்துக் கொண்டே சர்வ் செய்ய சிக்கிக் கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. உத்தம புத்திரன் யாரடி மோகினி பாட்டுக்கான அவரது நடன அசைவுகளை இன்னும் ரசிக்க முடிகிறது. ஆனால் சந்திப்பு? அதிலும் க்ளைமேக்ஸில் சிவாஜி, பிரபு, சரத்பாபு, ஸ்ரீதேவி, ராதா, மனோரமா ஆடும் “ஷோலாபூர் ராஜா” பாட்டை முழுமையாக பார்க்க முடிந்ததென்றால் நீங்கள் நிச்சயம் பொறுமைசாலி, தைரியசாலி.

அந்த காலக்கட்டத்தில் இரு மேதைகள், தராசு, சிம்ம சொப்பனம் என்று சோதனை தந்த இன்னும் சில படங்கள் கூட உண்டு. மற்ற நண்பர்கள் ப்ரூஸ் லீ யின் பிக் பாஸ் படம் பார்க்க நானும் இன்னொரு நண்பனும் மட்டும் எதிரில் இருந்த லட்சுமி தியேட்டரில் தராசு படத்திற்கு போய் மாட்டிக் கொண்டோம். அது சிவாஜி கணேசனுக்கான சரியான பாத்திரங்களை தராத இயக்குனரின் தவறா இல்லை தவறான பாத்திரங்களை தேர்ந்தெடுத்த சிவாஜி அவர்களின் தவறா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

ஆனாலும் அது சோதனைக் காலம்தான். அவருக்கும் ரசிகர்களுக்கும்.
(தோழர் சாய் ஜெயராமனும் இதை ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன்)

3 comments:

  1. பாட்டும் பரதமும் படத்திர்க்கு பின் வந்த எல்லா சிவாஜி படங்களும் அவருக்கும் சோதனை ரசிகர்களுக்கும் வேதனை.{முதல் மரியாதை,தேவர் மகன் விதிவிலக்கு}

    ReplyDelete
  2. அவை மகனின் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக ஒரு தந்தை செய்த தியாகங்கள்.

    ReplyDelete
  3. சங்கிலிக்குப் பிறகு, சிவாஜி பிரபுவுடன் இணைந்து படங்களே நடித்திருக்கக் கூடாது. அப்போதுதான் சிவாஜியின் தனித்தன்மை வெளிப்பட்டிருக்கும். அதுபோல அப்பா, தாத்தா போன்ற உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு தனிமனிதன் அதாவது தனி பாத்திரம் கோணத்தில் பார்க்கும் வேடங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete