Saturday, October 26, 2013

இந்த பாட்டை கண்டுபிடித்தது கம்பனா ? இல்லை கண்ணதாசன் எழுதியதா?



காந்தி கணக்கு என்ற புத்தகம் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதிலே இன்னும் பல சர்ச்சைகள் உள்ளதென்றும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை இன்று பார்ப்போம்.

மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் பாட்டை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா?

அந்த பாடலின் துவக்கத்தில் “ சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே’ என்ற வரிகள் வரும். செந்தமிழ் தேன் மொழியாள் பாட்டை எழுதிய கவியரசு கண்ணதாசனுக்கு அதை செழுமைப்படுத்த இன்னும் ஏதோ தேவைப்படுவதாக நினைத்து ஒரு தொகையறா சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தனையோடு பூங்காவில் உலாவப் போன போது காலில் நெருஞ்சி முள் குத்த, இந்த வரிகளை எழுதியதாக படித்துள்ளேன்.

இந்த நூல் சொல்வது என்னவென்றால் கம்பர் இரவில் உலா வரும் போது ஒரு குடிசையில் ஒரு பெண்ணின் அழுகுரல் “ சில்லென்று பூத்த” என்று தொடங்கி நின்றதாகவும் அடுத்த வார்த்தை என்னவென்று யூகிக்க முடியாத கம்பர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரிக்கையில் சமீபத்தில் கணவனை இழந்த பெண் அழத் தொடங்கும் போது மற்றவர்கள் வாய் பொத்தி தடுத்து விட்டதாகவும் சொன்னார்கள்.

மீண்டும் அங்கே மறுநாள் சென்று கம்பர் அந்த வீட்டில் காத்திருந்தபோது மற்றவர்கள் அந்தபெண்ணின் வாயை பொத்துவதற்கு முன்பே அந்த பெண் பின்வருமாறு பாடியதைக் கேட்டாராம்.

“ சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்து போனீரே!”

இதை வ.உ.சி வேறு ஒருவரிடம் சொன்னதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. கம்பனின் பல பாடல்களை கண்ணதாசன் எளிமையாய் நமக்கு அளித்துள்ளதாய் படித்துள்ளேன். ஆனால் இந்த பாடலை கம்பனிடமிருந்து கண்ணதாசன் கையாண்டதாய் எங்கும் படித்ததில்லை.

இது யாருடைய பாடல் சொல்லுங்களேன்.

கம்பன் கண்டறிந்ததா? கண்ணதாசன் எழுதியதா?

இன்னும் சில சர்ச்சைகள் உள்ளது. அவற்றை பிறகு பார்ப்போம்.


2 comments:

  1. முழுக்க முழுக்க கம்பன் எழுதிய பாட்டுதான் ! "சில்லென்று......."என்ற வரியில் "நில்லென்று சொல்லி நிறுத்தி வழி " போனீரே " என்பதற்குப் பதில் "போனாளே" என்று எழுதிவிட்டு, "நிற்பது பொல் நின்றாள்" என்பார் கண்ணதாசன் ! மகாலிங்கத்திற்கு தோகையறாவொடு பாட்டு வேணும் என்பதற்காக செய்தது! ---காஸ்யபன்.

    ReplyDelete
  2. தோழர் ராமன்... ஏற்கனவே ஒரு பதிவில் நீங்கள் சொய் சொய் பாடலை எழுதியவர் கண்ணதாசனை காப்பியடித்தாகச் சொன்னீர்கள்... கண்ணதாசனும் அப்படித்தான் செய்திருக்கிறார்.. ஆக அந்த சொய் சொய் கவிஞரை குறை சொல்லதீர்கள்... இதிலிருந்து என்ன தெரிகிறது.. எல்லா கவிஞரும் ஒருவரை ஒருவர் தழுவித்தான் ...(பாட்டை சொன்னேன்).. கவி படைகிறார்கள்

    ReplyDelete