Tuesday, October 22, 2013

இது எங்களால் மட்டுமே முடியும்?





நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது. திரிபுராவில் ஒருவர் முட்டாள்தனமான ஒரு வேலையைச் செய்ய அதை வைத்து அவரவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். எழுதித் தீர்த்தார்கள். தினமலர் பத்திரிக்கைக்கு இதை விட வேறு பிழைப்பு கிடையாதே.

இதோ நேற்றைய தீக்கதிர் செய்தியை படியுங்கள்.
 ------------------------------------------------------------------------------
 கட்சியிலிருந்து நீக்கம்

அகர்தலா, அக். 20 -
திரிபுராவில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சமர் ஆச்சார்ஜி என்பவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீக்கியுள்ளது.
இந்த அறிவிப்பை திரிபுரா மாநிலத்தின் சதார் மண்டலக் குழுவின் செயலாளர் சமர் அதயா வெளியிட்டுள்ளார். 

திரிபுரா மாநிலம் சதார் பகுதியில் பன்குமாரி பகுதியைச் சேர்ந்தவர் சமர் ஆச்சார்ஜி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப் பினரான இவர், தனது படுக்கையில் ரூ.20லட்சம் பணக் கட்டுகளைப் பரப்பி தூங்கியதாக ஊடகங்களில் வீடியோ செய்தி வெளியானது. இதுகுறித்து உடனடியாக கட்சியின் சதார் மண்டலக்குழு விசாரணை நடத்தியது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மண்டல செயலாளர் சமர் அதயா, மேற்கண்ட செயலில் ஈடுபட்ட சமர் ஆச்சார்ஜி உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற முட்டாள்தனமான, நாகரீகமற்ற செயல்களில் எமது கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அத்தகைய நபர்களை பாதுகாக்கவும் மாட்டோம் என்றும் கூறினார்.

முன்னதாக இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் உள்பட நாடெங் கிலும் உள்ள ஊடகங்கள் `அதிபயங்கரச்’ செய்தியாக ஊதித் தள்ளின. மேற்கண்ட சமர் ஆச்சார்ஜி தனது ஒப்பந்தத் தொழிலில் அதிகபட்சமாக பெற்றுள்ள ரூ.20லட்சத்தை படுக்கையில் பரப்பி வீடியோ காட்சியாக பதிவு செய்தார் என்பதே உண்மையான தகவல் ஆகும். 

ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள், மேற்கண்ட நபர் ரூ.2.5 கோடி பணத்தை பரப்பி படுத்திருந்ததாகவும், மிகப்பெருமளவில் திரிபுராவில் ஊழல் நடப்பதாகவும் கதைகட்டி எழுதின. ஆனால் அது உண்மையல்ல என்று கட்சியின் சதார் மண்டல செயலாளர் சமர் அதயா தெரிவித்துள்ளார்.

 ------------------------------------------------------------------------------------------------

 
ஒருவர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடும்போது. மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும்போது அவர் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உள்ள ஒரே ஒரு கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அவர்கள் தலைவர்களா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களா? அவர்கள் போனால் எத்தனை பேர் கூடப் போவார்கள் என்றெல்லாம் பார்க்காமல் செயல்படும் பாரம்பரியமும் நேர்மையும் எங்களுக்கே உரியது.

வேறு எந்த கட்சியால் இப்படி நெஞ்சுயர்த்தி சொல்ல முடியும்?

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு வளையம் அளிப்பதைத் தான் செய்கிறார்களே தவிர தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். அதற்கு நேரமும் போதாது, பக்கமும் போதாது.

நேற்று உற்சாகப் பெருவெளியில் மிதந்தவர்கள் இன்று ஏன் அமைதியாக இருக்கின்றார்கள். தவறு நடக்கும் போது மகிழ்கிறவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் போது  வந்த வழி தெரியாமல் மறைந்து போய் விடுகின்றனர்.

ஏனென்றால் அது அவர்களுக்கு விருப்பமில்லாதது.

No comments:

Post a Comment