- தோழர் இ.எம்.ஜோசப்,
முன்னாள் துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
(நேற்று வெளியான தோழர் ஜோசப் அவர்களின்
தீக்கதிர் கட்டுரையின் நிறைவுப் பகுதி.)
ஊடகங்களின் பங்கு!
ஊழல்கள் அனைத்துமே அரசியல்வாதிகளின்
ஊழலாகவே முன்னிலைப் படுத்தப் படுகிறது. கார்ப்பரேட்டுகளின்
லாபத்திற்காகவே நடைபெறும் இந்த ஊழல்களில் கார்ப்பரேட்டுக்களின் பங்கு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
இன்றைக்கும் 2ஜி ஊழலில், அரசியல்வாதிகளைப் பற்றி
பேசும் ஊடகங்கள், யாருடைய கொள்ளை லாபத்திற்காக அந்த ஊழல்கள் நடைபெற்றனவோ, அந்த
கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஒட்டு மொத்த ‘கேக்’கை எடுத்துக்
கொண்டவர்களைப் பற்றிப் பேசாத ஊடகங்கள், அதில் சில துண்டுகளை மட்டுமே சாப்பிட்டவர்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசுகிறது. தேசிய ஊடகங்கள்
பலவும் கார்ப்பரேட்டுக்களின் கைகளில் இருப்பதால் இது சாத்தியமாகிறது.
தவிர, நவீன தாராளவாதக் கொள்கை ஏதோ நல்லது போன்றும், அரசியல்வாதிகளின்
ஊழல்கள் தான், அதன் அமலாக்கத்திற்கு ஊறு விளைவிக்கின்றன
என்பது போன்றும் நடுத்தர வர்க்கப் பிரிவினரிடம் ஒரு மாயையினை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.
ஊழல்களுக்கு எதிரான நடுத்தர வர்க்கத்தின் இயக்கங்களை ஊடகங்கள் உருவாக்கி ஆதரித்தன.
ஆனால், அங்கெல்லாம் ஊழல்களில் கார்ப்பரேட்டுகளின் பங்கு குறித்து எதுவும் பேசப்படவில்லை.
ஆனால், பொதுவாக ஊழலை எதிர்ப்பதால், ஊடகங்களுக்கு நடுத்தர வர்க்கப் பிரிவினர்
மத்தியில் சிறிது நம்பகத் தன்மையும் கிடைத்திருக்கிறது.
வலிமை பொருந்திய அரசு!
மக்களின் வாழ்வதாரங்கள் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கும் நிலையில்,
நவீன தாராளவாதக் கொள்கைகள் தோல்வி அடைந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு அமெரிக்க நெருக்கடியின்
பின்னணியில், அவை குறித்து நடுத்தர வர்க்கம் மற்றும் அறிவாளர்கள் மத்தியில் அது வரை
இருந்து ஆதரவு நிலை மாறி, சில ஐயப்பாடுகள்
தோன்றியுள்ளன. எனினும் அவற்றைக் கைவிட விரும்பாத இந்தியப் பெரு முதலாளிகள், அக்கொள்கைகளுக்கு
எதிரான சக்திகளை அடக்குவதற்கு தங்களின் கட்டுப்பாட்டில் ஒரு வலிமை பொருந்திய அரசு இருக்க
வேண்டும் என விரும்புகின்றனர். ஒரு நாட்டிற்கு
வலிமையான அரசு தேவை என்பதில் எவரும் கருத்து வேறுபட முடியாது. ஆனால், மூலதனத்தின் நேரடிக்
கட்டுப்பாட்டிற்குள் அரசு என்றால், அது பாசிசத்திற்கு
சமமானது என இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோக்லியாட்டி கூறியதை
இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
கச்சிதமாகப் பொருந்துகின்ற மோடி!
அத்தகையதொரு வலிமையான அரசின் வர்க்கத் தன்மை நமக்குத் தெரியும்.
ஆனால் அதற்கு ஒரு வெகுஜனத் தன்மையும் தேவைப்படுகிறது. அந்த வகையில் சில முன்னணி மனிதர்களும்
தேவைப்படுகின்றனர். அந்தத் தேவையினை நிறைவு
செய்வதில் முதலிடம் வகிப்பவர் மோடி.
குஜராத் மாநிலத்தில், ஐந்து லட்சம் ஏக்கர் வரையிலான நிலத்தை விவசாயிகளிடமும் மீனவர்களிடமும் இருந்து பிடுங்கி
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கும் வள்ளல் இவர். நானோ தொழிற்சாலையினை மேற்கு
வங்கத்திலிருந்து குஜராத்திற்கு அழைத்து வருவதற்காக 1,100 ஏக்கர் நிலத்தை சந்தை விலையை
விட 100 மடங்கு குறைவான விலைக்கு டாட்டாவிற்கு
கொடுத்தவர் இவர். டாட்டாவின் ரூ.2,900 கோடி மதிப்புள்ள அந்த முதலீட்டிற்கு, குஜராத்
அரசு வழங்கிய நீண்ட காலக் கடன் (20 ஆண்டுகள்)
ரூ.9,570 கோடி. அதற்கான வட்டி விகிதம் வெறும் 0.1 சதவீதம். (ஆம், ரூ.1000க்கு
ஆண்டிற்கு ரூ.1 வட்டி). அண்மையில் இந்தியாவின் முதல் 100 கார்ப்பரேட் நிறுவனங்களின்
முதன்மை அதிகாரிகளிடம் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ நாளேடு நடத்திய சர்வேயில் 74 சதவீதத்தினர்
மோடியே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் எனக் கூறியுள்ளனர். இவர்களின் இந்தத் தெரிவில்
வியப்பதற்கு என்ன இருக்கிறது?
இந்துத்துவா தளத்தில் செயல்படுபவர் என்பதால், அவர் வகுப்புவாத அடிப்படையில்
மக்களைத் திரட்டும் ஆற்றல் பெற்றவர். எனவே, அந்த வகையில் அவர் அரசின் வெகுஜனத் தன்மையினை உறுதிப்படுத்தும்
பங்கினையும் ஆற்றுவார் என கார்ப்பரேட் வட்டம் உறுதியாக நம்புகிறது. வகுப்புவாதம் மக்களின்
ஒற்றுமையினைக் கெடுத்து விடும் என்பதெல்லாம் கார்ப்பரேட்டுக்களின் கவலை அல்ல. இன்னும்
கூடச் சொல்லப் போனால், அத்தகைய பிளவு அவர்களுக்கு உதவும் என்று கூடக் கருதுவார்கள். மொத்தத்தில்
இவ்விஷயத்தில் கார்ப்பரேட்டுகளின் தேவைகளுக்கு மோடி கச்சிதமாகப் பொருந்துகிறார். கார்ப்பரேட்டுகளால்
பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட மோடி, இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கட்சியின்
முன்மொழிவாகவும் மாறியிருக்கிறார்.
No comments:
Post a Comment