Friday, October 18, 2013

அரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி                                             தோழர் இ.எம்.ஜோசப்
 
( எங்களது தென் மண்டல முன்னாள் துணைத்தலைவர், தோழர்
இ.எம். ஜோசப், எழுதி தீக்கதிர் நாளிதழில் வெளியான முக்கியமான
கட்டுரை இது. அவசியம் படியுங்கள் )

மோடி குறித்த கட்டுரை அல்ல இது.  மாறாக, சர்வதேச நிதி மூலதனம், நவீன தாராளவாதம், மற்றும் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றையத் தேவைக்கு மோடி எப்படி பொருந்துகிறார்  என்பது  குறித்த விளக்கமே.  

“ஒரு நவீன அரசு என்பது, பூர்ஷ்வாக்களின் ஒட்டு மொத்த நலன்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் ஒரு நிர்வாகக் குழு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.” இவை கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகங்கள்.  கால மாற்றத்திற்கும், முதலாளிகளின் தேவைகளுக்கும் ஏற்ப அரசின் நிர்வாக உத்திகள் மாறுபட்டு வருகின்றன. எனினும், 165 ஆண்டுகளுக்கு முன்னர், கார்ல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் அரசு குறித்து வகுத்த இந்த அடிப்படை இலக்கணம் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. 

பொருளாதார தேசியம்!

சுதந்திரத்திற்குப் பிந்ததைய சுமார் முப்பது ஆண்டுகள் வரை இந்தியப் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்கி வந்தது. இந்நாட்டில் முதலாளித்துவத்தை முழுமையாக நிறுவுவதும், பெரும் முதலாளிகளின் நலன்களை முன்னிலைப் படுத்துவதுமே இந்திய பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ அரசின்  இலட்சியம் என்றாலும், அத்தகைய அரசிற்கு பரந்த சமூக ஆதரவு தளம் தேவைப்பட்டது. அந்நிலையில், அது  பல்வேறு வர்க்கங்களின் நலன்களையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. இத்தகைய சூழலில், ‘சோஷலிச பாணி சமுதாயம்’ போன்ற சொல்லாடல்களின் பின்னணியில், ‘பொருளாதார தேசியம்’ என்பது அரசின் நடைமுறைக் கொள்கையாக ஏற்கப்பட்டிருந்தது. அத்தகைய ‘பொருளாதார தேசியம்’ தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள் என பல வர்க்கங்களின் கோரிக்கைகளை உள்வாங்கி சமரசம் செய்து கொள்வதாக இருந்தது. வர்க்க முரண்பாடுகளில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் பணி அரசின் கடமைகளில் ஒன்றாக  இருந்தது. தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட  பல சட்டங்கள் இந்தக் காலத்தில் இயற்றப்பட்டவையே ஆகும். ஆனால், முதலாளித்துவப் பாதையில் பயணித்த இந்தியப் பொருளாதாரம் பின்னர் இயல்பாகவே நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. இப்பின்னணியில், உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகிய ஏகாதிபத்திய முகமைகளிடமிருந்து இந்தியா கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அமைப்புக்கள் விதித்த நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கிய நிலையில்,  இந்தப் பொருளாதார தேசியம் என்ற கொள்கை சற்றுத் தடம் புரளத் தொடங்கியது. 1980களில் துவங்கிய இந்தச் சரிவு 1990களின் மத்தியில், பொருளாதாரத் தேசியத்தினை முற்றிலுமாக நிராகரித்து, நவீன தாராளவாதக் கொள்கைகளை ஏற்பதில் போய் முடிந்தது.

நிர்வாக அதிகாரம்! 

நவீன தாராளவாதக் கொள்கைகள் அமலாகும் இன்றைய சூழலில், நிதி மூலதனத்தின் விருப்பு வெறுப்புக்களை அனுசரித்தே அரசு செயல்பட வேண்டியுள்ளது. இல்லாவிடில், மூலதனம் நாட்டை விட்டு வெளியேறி விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம். இந்த நிலைமையில் ஜனநாயகத்தினையே கூட சற்று வெட்டிச் சுருக்குவதற்கு இந்தியப் பெரு முதலாளிகள் தயங்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் தான் கொள்கைகளை உருவாக்க முடியுமேயன்றி, அதற்கு எதிரான நிதி மூலதனத்தின் கொள்கைகளை அமலாக்க முடியாது. எனவே, நவீன தாராளவாதம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த ஜனநாயக அம்சங்கள் பலவற்றைச் சிதைக்கும் வேலையில் இன்று ஈடுபட்டு வருகிறது. ஜனநாயகத்தின் வெளி அலங்காரங்கள் சிலவற்றை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, அதன் உள்ளடக்கத்தில் சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஆதரவான பல அம்சங்களைப்  புகுத்துகிறார்கள். அவர்களது இந்த முயற்சியில், மக்களின் விருப்பங்களை விவாதிக்கும்  நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் போன்றவை குறுக்கீடாகத் தோன்றுகின்றன. எனவே அவைகளின் அதிகாரத்தினை, அரசு நிர்வாகத்தின் அதிகாரமாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட பூர்வமாக நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படாத  பிரச்சினைகளில், நிர்வாக அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான இன்றைய ஐ.மு.கூ அரசும் சரி, இதற்கு முந்தைய பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியும் சரி பல முடிவுகளை எடுத்திருக்கின்றன.  உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்திற்கான ஒப்புதல், அணு வர்த்தக ஒப்பந்தம், சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முலதனம் குறித்த   முடிவுகள் போன்றவை அவ்வாறு எடுக்கப்பட்டவை தானே? 1996ம் ஆண்டில் 13 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்த பிரதமர் வாஜ்பாய், அவர் பதவியினை ராஜினாமா செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, அந்நிய என்ரான் கம்பெனிக்கு ஆதரவான மறு உத்தரவாதத்தில் கையெழுத்திட்டதை  மறந்து விட முடியுமா? அத்தகைய முடிவுகளுக்கு எல்லாம் பயன்பட்டது  இந்த நிர்வாக அதிகாரம் தானே? 

இரண்டு வழிகளில்…

அரசமைப்பில் சட்டமியற்றல் (நாடாளுமன்றம்/சட்ட மன்றம்), நிர்வாகம், நீதி நிர்வாகம் ஆகிய அடிப்படையான மூன்று துறைகளில், நிதி மூலதனம் இன்று அதிகம் விரும்புவது நிர்வாகத் துறை அதிகாரத்தினையே. நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், பொழுது விடிவதற்கு முன்பு நாடு முழுவதும் அமலாகும் வகையில் இரவோடு இரவாக ஒரு உத்தரவினைப் பிறப்பிப்பதற்கு இந்த அதிகாரம் தானே அவர்களுக்கு உதவுகிறது? எனவே தான், மற்ற இரண்டு துறைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கு நிதி மூலதனம் பெரிய அளவில் முயன்று வருகிறது. நீதித் துறையின் முக்கியத்துவத்தைக் குறைப்பது உடனடியாக அவ்வளவு எளிதானது அல்ல என்ற நிலையில், அதனுடைய உடனடி இலக்கு இன்று சட்டமியற்றல் துறையே ஆகும்.   நவீன தாராளவாதக் கொள்கையின் அடிப்படையில் சிந்திக்க வைக்கும் நோக்கில்,  மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மூலம் நீதிபதிகளுக்கு மறுபயிற்சி அளிக்கும் பட்சத்தில், நீதித்துறையினை வளைப்பதும் கூட சாத்தியமானதேயாகும். 

நிர்வாகத் துறையின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காக, இன்றைக்கு இரண்டு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒன்று, நிர்வாகத் துறையில் முக்கிய அதிகாரமுள்ள பதவிகளில், ‘சர்வதேச நிதிச் சமுதாயத்தின்’ கையாட்களை மட்டுமே நியமிக்கின்றனர். கல்வியாளர்கள், ஆலோசகர்கள், அதிகாரிகள், மேலாண்மை விற்பன்னர்கள், நிதி ஆய்வாளர்கள் என்ற பல பெயர்களில் இந்த நிதிச் சமுதாயம் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் சுற்றி வரும் இந்த சமுதாயத்தின் உறுப்பினர்கள், சிக்கனம், தனியார்மயம், அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனம், தேசிய மத்திய வங்கிகளின் (நம் நாட்டில் ரிசர்வ் வங்கி) சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட நிதிச் சீர்திருத்தங்கள் போன்ற பல அம்சங்களில், உலகம் முழுவதும் உள்ள  தேசிய அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அத்தகைய  ஆலோசனைகள் அனைத்துமே நிதி மூலதனத்தின் உலகக் கண்ணோட்டத்தினை அடிப்படையாக கொண்டவையே.  2002ம் ஆண்டில் பி.ஜே.பி அரசினால் நியமிக்கப்பட்ட  திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஐ.மு.கூ ஆட்சியில் இன்று வரை  தொடரும் ரகசியம் இது தான். பிரதமரி்ன் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக அண்மையில் உள்ளே நுழைந்த ரகுராம் ராஜன், அடுத்த கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப் படுகிறார். இது தவிர, பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில் இந்த நிதிச் சமுதாயத்தின்  உறுப்பினர்கள் கணிசமாக நிரப்பப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, அமைச்சரைத் தவிர மூத்த அதிகாரிகள் பலர் இங்கு வெறும் பொம்மைகளாக மாற்றப்பட்டு விட்டனர். எனவே நிதி மூலதனத்திற்கு ஆதரவான அத்தனை முடிவுகளையும் எவ்விதத் தடையுமின்றி இங்கே எடுக்க முடிகிறது. நிதிச் சமுதாயத்தின் உறுப்பினர் சிலரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசை கூட நிதி மூலதனத்திற்கு உண்டு. எனினும், இந்நாட்டின் பிரதமரையே மக்களவைத் தேர்தல்களுக்கு நிறுத்த முடியாத நிலையில், அது நடைமுறையில் இன்று சாத்தியமாக இல்லை. 

இரண்டாவதாக, நிர்வாகத் துறையின் முக்கியத்துவத்தினை அதிகரிக்க வேண்டும் எனில், மறுபுறத்தில் சட்டமியற்றல் துறையின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. இந்தத் துறையில் நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அரசியல் கட்சியினரே. இந்தத் துறையின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் எனில், அரசியல்வாதிகளின் பொதுத் தோற்றத்தினை சிதைக்க வேண்டும். எனவே, அந்தப் பணியும் இன்று நடைபெற்று வருகிறது. ஊழல் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், இன்றைய நவீன தாராளவாதக் கொள்கைகளே ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன. நிதிச் சமுதாயத்திற்கு இது தெரியும் என்பது மட்டுமல்ல. இதில் அரசியல்வாதிகளை உள்ளிழுப்பதும், அவர்களுக்கு உதவுவதுமே இந்த நிதிச் சமுதாயம்தான். இந்த விஷயம் பொது வெளிக்கு வராத வரை, சட்டமியற்றல் துறையில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் நிர்வாகத் துறை அதிகாரம் வலுப்பெறுவதற்கு உதவுகின்றனர். ஒரு வேளை ஊழல் பொது வெளிக்கு வந்து விட்டால், அப்போதும் சட்டமியற்றல் துறை (அரசியல்வாதிகள்) வலுவிழப்பதும், நிர்வாகத் துறை மேலும் வலுப்பெறுவதும் நடைபெறுகிறது. 

   நாடாளுமன்றம், சட்ட மன்றத்தை விட மத்திய உளவுத் துறை (சி.பி.ஐ),  தலைமைத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி), லோக் அயுக்தா போன்ற நிர்வாகத் துறை அமைப்புக்கள் இன்று பிரபலம் அடைந்து வருவதைப் பார்க்க முடிகிறது அல்லவா?  இந்த அமைப்புக்கள் நேர்மையாகச் செய்ல்பட்டு மக்களுக்கு உதவுமானால், அது நல்லது தான். ஆனால், நாடாளுமன்றம், சட்ட மன்றங்களின் மரியாதை சீரழிக்கப்படுவது தான் இங்கு  கவலைக்குரிய விஷயம்.    

இதன் நிறைவுப் பகுதி நாளை வெளியாகும்

No comments:

Post a Comment