Wednesday, October 9, 2013

மத்தியரசு மீது உச்ச நீதிமன்றம் சுழட்டிய சவுக்கு





நேற்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அனைத்து அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி நீதியரசர் பி.சதாசிவம், நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், நீதியரசர் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எஸ்.சி/எஸ்.டி. ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்ற விதி, இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது என்பதையும் இத்தீர்ப்பு ஆணித்தரமாக சொல்லியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒரு சட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதிகார வர்க்கத்திற்கே உரிய குறுக்கு புத்தியின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆணைகள், பணியிடங்கள் எவ்வளவோ அதிலே இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக காலியிடங்களில் இட ஒதுக்கீடு போன்றவையெல்லாம் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு என்பதை பெருமளவு ஏட்டுச்சுரைக்காயாகவே வைத்திருந்தது.

அப்பலன் அவர்களை சென்றடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தவர்கள் உருவாக்கிய தடைகள்   இத்தீர்ப்பின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. “மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் பெற அவர்களூக்ககு வேலை வாய்ப்புக்கள் வழங்க வேண்டியது அவசியம். அவர்கள் வேலை வாய்ப்பு பெறாமல் இருப்பதற்கு அவர்களின் குறைபாடுகள் காரணமல்ல. அவர்களைப் பற்றிய சமூக மதிப்பீடுகள்தான் காரணம்” என்று சுட்டிக்காட்டியுள்ள இத்தீர்ப்பு மத்தியரசின் மீது சவுக்கை சுழட்டியிருக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பாகவும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் முன்மொழியப்
பட்டுள்ள பல சர்வதேச பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள  மத்திய அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. அதை தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் சொல்லியுள்ளது. 1995 ல் சட்டம் வந்தாலும் அதன் பலன்கள் அவர்களை சென்றடையவில்லை என்று மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பான தீர்ப்பில் முக்கியமான அம்சம் ஒன்றும் உண்டு. தங்கள் உரிமைகளுக்காக மாற்றுத் திறனாளிகள் 1987 ல் நடத்திய நாடு தழிவிய போராட்டத்தால்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதை இத்தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.

போராட்டங்கள் அவசியமற்றது என்ற கருத்துக்கள் அடங்கிய சில தீர்ப்புக்கள் உண்டு. போராட்டங்களை தடை செய்யும் தீர்ப்புக்கள் உண்டு. அப்படி இருக்கும் வேளையில் மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பெறுவதற்கு அவர்கள் நடத்திய போராட்டம்தான் காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

மூன்று மாத காலத்திற்குள் இத்தீர்ப்பு அமுலாக்கப்பட வேண்டும் என்றும் கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமுலாக்காமல் தட்டிக் கழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கறாராக சொல்லப்பட்டுள்ளது.

பார்ப்போம், மத்தியரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்று. பொறுப்போடு நடவடிக்கை எடுப்பார்களா இல்லை மீண்டும் கூண்டில் ஏறுவார்கள் என்று காத்திருப்போம்.

பின் குறிப்பு : முழுமையான தீர்ப்பை மின்னஞ்சலில் அனுப்பிய நாமக்கல் பத்திரிக்கையாளர் தோழர் விமலா வித்யா அவர்களுக்கு நன்றி.

                          

1 comment:

  1. கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டிய தீர்ப்பு. நீதிமன்றம் மீண்டும் சவுக்கு எடுக்கும் நிலை வராது என நம்புவோம்

    ReplyDelete