Thursday, October 17, 2013

நாம் செலவழிக்கும் பணம் பிராண்டிற்குத்தான் – சமையல் குறிப்பு மட்டுமல்ல இது.
மேலே உள்ள படத்தை பார்த்தீர்களா? இது ட்ரை ஃப்ரூட் லட்டு. பல கடைகளில் கிடைக்கக் கூடியது. வேலூரில் உள்ள சரவண பவன் ஹோட்டலில் இரண்டு பீஸ் இருபத்தி மூன்று ரூபாய். மற்ற இடங்களில் விலை கொஞ்சம் கூட குறைய இருக்கலாம்.

சமீபத்தில் முகநூலில் ஒரு படம் பார்த்தேன். ஒரு டி.ஷர்டின் விலை எண்பது ரூபாய் என்றும் அதுவே அடிடாஸ் நிறுவனத்தின் இலச்சினையோடு விற்கப்பட்டால் நானூறு ரூபாய் என்றும் போடப்பட்டிருந்தது. அந்தப் படம் உருவாக்கிய தாக்கமே இந்த சமையல் முயற்சி.

ட்ரை ஃப்ரூட் லட்டு தயாரிக்க தேவையான பொருட்கள்

இருநூறு கிராம் பேரிச்சம் பழம் -   ரூபாய்  முப்பத்தி ஐந்து
ஐம்பது கிராம் முந்திரி           -   ரூபாய்  பதினைந்து
ஐம்பது கிராம் பாதாம் பருப்பு   -    ரூபாய்  பத்து
கால் மூடி தேங்காய்             -   ரூபாய்  மூன்று
ஐம்பது கிராம் வெல்லம்         -   ரூபாய்  இரண்டு

முதலில் பேரிச்சம்பழத்தை சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முந்திரியை நான்காக உடைத்து வாணலியில் அப்படியே ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொள்ளவும்.  அதே போல் பாதாமையும் ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்த பின்பு பாதாமை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். தேங்காயை காரட் சீவுவது போல் சீவி அதையும் நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பின்பு நன்கு பொடித்த வெல்லத்தோடு இவை அனைத்தையும் கலந்து லட்டு போல உருண்டையாக பிடித்தால் ட்ரை ஃப்ரூட் லட்டு தயார். மேலே சொன்ன அளவிற்கு எனக்கு மொத்தம் பதினேழு லட்டுகள் வந்தன. அதன் படி பார்த்தால் ஒரு லட்டின் அடக்க விலை ரூபாய் 3.82 மட்டுமே. ஆக ஒரு லட்டிற்கு ரூபாய் 7.68 லாபம் பார்க்கிறார்கள். அவர்கள் பொருட்களை மொத்த விலைக்கு வாங்குவதால் லாபம் இன்னும் அதிகரிக்கவே செய்யுமே தவிர குறையாது.

இன்னொரு விஷயமும் உள்ளது. இந்த பொருட்கள் எல்லாம் ட்ரை ஃப்ரூட் லட்டு என்ற திண்பண்டமாக, ஒரு சமையல் தொழிலாளியின் உழைப்பால்தான் பொருளாக  உற்பத்தியாகிறது. இவ்வளவு லாபம் பார்க்கிற முதலாளி அந்த லாபத்தின் சிறு பகுதியையாவது அந்த தொழிலாளிக்கு கொடுப்பாரா? அப்படி கொடுக்காதபோதுதான்  அங்கே முரண்பாடுகள் உருவாகிறது. மோதல்கள், போராட்டங்கள் வெடிக்கிறது.

மூலதனம், இடு பொருட்கள் என்று இருந்தாலும் ஒரு தொழிலாளியின் உழைப்பால் மட்டுமே அதை விற்பனை செய்யக் கூடிய ஒரு பொருளாக  உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. அந்த உழைப்பாளிக்கும் ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டியுள்ளது.

அதனால்தான் இன்று முதலாளித்துவம் உற்பத்தி இல்லாமல் நிதி மூலதன சுழற்சி மூலமே லாபம் அடைய பார்க்கிறார்கள். இந்த போக்கு தொடருமானால் ஒரு கட்டத்தில் பணம் மட்டுமே மிஞ்சியிருக்கும். உண்ண, குடிக்க, குடியிருக்க, பயணம் செய்ய, எல்லாவற்றுக்குமே நோட்டுக் கட்டுகளை மட்டுமே நம்ப வேண்டியிருக்கும்.

பின் குறிப்பு 1 : சமையல் குறிப்பிலும் நாங்கள் எங்கள் கொள்கைகளை சொல்வோமே

பின் குறிப்பு 2 : கடந்த வாரம் ஒரு நாள் முயற்சி செய்து லட்டு பிடிக்க வராமல் வெல்லப் பாகு வைத்து அது மேலும் சொதப்பி விட்டது. தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனாக நேற்று மீண்டும் தயாரித்து வெற்றி பெற்று விட்டேன்.

7 comments:

 1. தையல் மீது உள்ள மையலை விட ச-மையல் மீதுதான் உங்களுக்கு அதிக மையல் உள்ளது. மாதம் ஒரு பதிவு போட தவறுவதே இல்லை

  ReplyDelete
 2. KRS paththi solrathaa sollittu LADDU kudukkurarthu Gnaayama Thozhaa re ..

  ReplyDelete
 3. S.Raman,Vellore said...

  நிச்சயம் நாளை எழுதுகிறேன்.
  October 16, 2013 at 8:25 PM

  ReplyDelete

 4. பின் குறிப்பு 1 : சமையல் குறிப்பிலும் நாங்கள் எங்கள் கொள்கைகளை சொல்வோமே\\ Super!!

  ReplyDelete
 5. திருவாளர் அனானி, தோழர் கே.ஆர்.எஸ் பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஆனால்
  உங்கள் தொனியில் ஏதோ வில்லங்கம் தெரிகிறது. அதனால்
  நீங்கள் யார் என்று சொன்னால் நல்லது. ஒரு நல்ல விஷயத்தைப்
  பற்றி கேட்பவர் அனாமதேயமாக வர வேண்டிய அவசியம் இல்லையே

  ReplyDelete
 6. அடுத்த அன்னியனாக வர வாழ்த்துகள்....

  ReplyDelete
 7. லட்டை வைச்சு ஒரு பாடமே சுவையா நடத்திட்டீங்க.

  ReplyDelete