Thursday, October 24, 2013

அந்த காங்கிரஸ்காரரை நான் கடுமையாக வெறுத்திருக்கிறேன். ஆனாலும் இன்று பாராட்டுகிறேன். The women archaks give teertha and prasadam to Congress Janardhan Poojary and others at Kudroli Gokarnatha shrine in Mangalore   —DC

இந்திரா காந்தி காலத்தில் நிதித்துறை இணையமைச்சராக இருந்த மனிதர் அவர். நிதியமைச்சராகக் கூட இருந்துள்ளார். லோன் மேளா என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளின் நிதியை எல்லாம் வாரி வாரி வழங்கிய ஜனார்த்தன் பூஜாரியை உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதாக ஒரு மசோதாவை நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்கிறார். அந்த மசோதாவை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையாக எதிர்த்தது. நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இயக்கங்கள், பிரச்சாரங்கள் காரணமாக அந்த மசோதா இறுதியில் கைவிடப்பட்டது. அப்போது எங்கள் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்தார். மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை, உரைகளை காவியம் என்றே சொல்வேன். அந்த மசோதாவை கைவிடப் போவதாக ராஜீவ் காந்தி தோழர் சுனில் மைத்ராவிற்குத்தான் கடிதம் எழுதினார்.

அந்த சமயம் நான் எல்.ஐ.சி யில் பணியில் சேராவிட்டாலும் பிறகு எங்கள் சங்க இதழ் இன்சூரன்ஸ் வொர்க்கரில் பல விபரங்களை படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நாடாளுமன்ற விவாதத்தின் போது எல்.ஐ.சி யை ஐந்தாக பிரிப்பதற்கான வாதங்களை நிதித்துறை இணையமைச்சர் என்ற ஹோதாவில் இந்த மனிதன்  ஜனார்த்தன் பூஜாரி முன்வைக்கையில் எல்.ஐ.சி ஊழியர்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி சித்தரித்திருந்தார். இழிவு படுத்தினார். அன்றைய கோயபல்ஸ், இன்றைய மோடியை விட மோசமான பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசியதை படிக்க படிக்க ரத்தம் கொதிக்கும். சே! எவ்வளவு மோசமான மனிதன் என்று அவ்வளவு கோபம் வந்தது.

ஜனார்த்தன் பூஜாரியின் அபத்தமான பொய்களுக்கெல்லாம் எங்கள் தோழர் சுனில் மைத்ரா சம்மட்டி அடியாக பதில் கொடுத்து விட்டார் என்பது வேறு விஷயம். ஆனாலும் அந்தப் பெயரை கேள்விப்பட்டாலே மனதில் வெறுப்பு எட்டிப்பார்க்கும். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளராக வேறு அவர் கொஞ்ச காலம் இருந்ததால் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வேறு அவர் பெயர் வந்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும்.

அப்படி வெறுத்த மனிதரைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் ஒரு செய்தி படிக்கையில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

மங்களூர் நகரில் ஒரு கோயிலின் தர்மகர்த்தாவாக அவர் உள்ளாராம். அந்த கோயிலில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றை செய்வது விதவைப் பெண்கள் மட்டும்தான். விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அப்படி பூஜை செய்கிற பெண்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

ராசியில்லாதவர்கள், விசேஷங்களில் கலந்து கொள்ள தகுதியில்லாதவர்கள், அவர்கள் முகத்தில் முழித்தால் விளங்காது என்று விதவைகளை ஒதுக்கி வைக்கும் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவத்தான் செய்கிறது. தங்களின் பையன், பெண் கல்யாணத்திற்கே மேடைக்கு வராமல் நத்தை கூட்டுக்குள் ஒடுங்குவது போல் தாங்களாகவே ஒதுங்கி நிற்கும் பெண்களையும் பார்க்கிறோம்.

நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருந்தாலும் உன் முகத்தை நேரில் பார்க்க முடியாது என்று சொன்ன சாமியார்களும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன கோயில்களும் இருக்கிற நாட்டில் இந்த செய்தி மிகவும் சிறப்பானது.

சமூகம் புறக்கணிக்க ஆசைப்படும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஜனார்த்தன் பூஜாரியை நான் மனமாற பாராட்டுகிறேன்.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் கூட ஒரு பாராட்ட வேண்டிய அம்சம் உண்டு. மாத விலக்கான நேரத்தில் கூட அங்கே பெண்கள் தாங்களே அம்மனை தொட்டு வழிபாடு செய்யலாம் என்பது அந்த அம்சம்.

கடவுள் நம்பிக்கை இல்லாத உனக்கு என்ன இதிலே இவ்வளவு மகிழ்ச்சி என்று யாராவது அனானிகள் கேட்பதற்கு முன்பாக நானே பதிலளித்து விடுகிறேன்.

மதத்தின் பெயரால், மதக்கலாச்சாரத்தின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசத்தில்,  ஒரு மத அமைப்பு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி. இது மதங்களின் மூர்க்கத்தனத்திற்கு எதிரான கலகமாகவும் பார்க்கிறேன்.

மேல்மருவத்தூரில் நடக்கும் மோசடிகள், கல்லூரிகளின் ஊழல் பற்றி தெரியுமா என்று கேட்கும் நண்பர்களே, அது குறித்து கடந்த காலங்களில் எழுதியுள்ளேன். அங்கே உள்ள ஒரு நல்ல அம்சத்தைப் பற்றி மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியாவை விட இன்னும் பல நாடுகளில் பெண்கள் மோசமாக நடத்தப் படுகின்றார்களே, நீங்கள் அது பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை என்று கேட்கும் நண்பர்களே, என்னுடைய முந்தைய எழுத்துக்களை படித்து விட்டு பிறகு பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

 1. பெண்ணுரிமை என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் என்பது என் எண்ணம். ஏன் மற்றவர்களின் எண்ணமும் அதுதான். ஆனாலும் மிகக் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானவர் இப்படி ஒரு நற்காரியம் செய்வது பாராட்டப்பட வேண்டியதே ! இது போன்ற எண்ணம் நம்ம ப.சி.க்கும் வந்தால் எல்.ஐ.சி.யை பலவீனமாக்கும் முடிவுகளை கை விடுவார் என நம்புவோம்

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. அடையாளம் இல்லாமல் நக்கல், நையாண்டிகளோடு கேட்கப்படும் அனானிகளின் பின்னூட்டம் நீக்கப்படும். அடையாளத்தோடு பின்னூட்டமிடுபவர்களுக்கு பதில் அளிக்கப்படும்

  ReplyDelete
 4. "I'm always right" attitude won't help in the long run. For public, your self-righteousness is not important. You guys are psuedo-communists for asuran and vinavu gang!

  ReplyDelete
 5. நல்லதை யார் செய்தாலும் போற்றுவதும், கெட்டதை தான் செய்தாலும் திருத்துவதுமே மனிதத்துவம். கைம்பெண்கள் கோவில் பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியே!

  ReplyDelete