Wednesday, October 23, 2013

இரண்டாவதாய் திருமணம் செய்து ஏமாற்றியவனுக்கு ஒரு அடி



மோசடி ஒன்றை செய்து விட்டு அதற்கான விளைவிலிருந்து தப்பிக்க அந்த மோசடியையே தன் தரப்பு வாதமாக முன்வைத்த ஒரு மோசடிப் பேர்வழிக்கு உச்சநீதி மன்றம் சரியான சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

என்ன விசு படம் போல குழப்பமாய் இருக்கிறதா?

ஒரு மோசடிப் பேர்வழி விவாக ரத்து ஆன ஒரு பெண்ணை ஒரு கோயிலில் வைத்து இந்து திருமண முறைப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறான். மூன்று மாதங்களுக்குப் பின்பு வேறு ஒரு பெண் அவர்களின் வீட்டிற்கு வந்து நான்தான் அவனது முதல் மனைவி, எங்களுக்கு திருமணமாகி இருபதாண்டுகள் ஆகி ஒரு மகனும் மகளும் இருக்கிறாள் என்கிறாள். இந்தப் பெண்ணிற்கு அதிர்ச்சி.

எங்களுக்கு கட்டுப்பட்டு அடக்க ஒடுக்கமாக இருந்தால் ஒரே வீட்டில் வாழலாம் என்று முதல் மனைவி சொல்ல இவளும் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஏனென்றால் அந்தப் பெண் அப்போது கருவுற்றிருந்தாள். ஆனால் நாளாக நாளாக அந்தப் பெண்ணிற்கு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. குடிபோதையில் இழிவாக பேசுவது, அடிப்பது என்று தாங்க முடியாத அளவிற்கு சித்திரவதைகள் தொடர்ந்ததும் வேறு வழியின்றி தன் தாய் வீட்டிற்கே திரும்புகிறாள்.

குழந்தையும் பிறக்கிறது. தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுக்க அவன் மறுக்கிறான். இருவருக்கும் திருமணம் நடந்துள்ளதற்கான சான்றுகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு சான்றுகள் ஆகியவற்றை பரிசீலித்த மாவட்ட நீதிபதி அந்தப் பெண்ணிற்கு மாதம் ஆயிரமும் குழந்தைக்கு மாதம் ஐநூறும் ஜீவனாம்சமும் வழங்க உத்தரவிடுகிறார்.

அதை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய அங்கே அவனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட ஐயா உச்ச நீதிமன்றமே  வந்து விட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் அவனது வாதம் என்ன தெரியுமா?
முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது என்பது ஹிந்து திருமணச் சட்டத்தின் படி குற்றம். அந்த திருமணம் செல்லுபடியாகாது. ஆக இரண்டாவது மனைவி சட்டபூர்வமான மனைவி இல்லை. சட்டபூர்வமான மனைவியே இல்லை என்கிறபோது குழந்தையும் தன்னுடைய குழந்தை கிடையாது. சட்டபூர்வமான மனைவி இல்லை என்பதால் ஜீவனாம்சம் தர வேண்டியது அவசியமில்லை – இதுதான் அந்த அயோக்கியனின் வாதம்.

நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. முதல் மனைவி இருப்பதை மறைத்தது அவனுடைய தவறு. அதற்காக அந்தப் பெண் அவனின் மனைவி இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆகவே ஜீவனாம்சம் கண்டிப்பாக தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கறாராக தீர்ப்பளித்து விட்டது.

பலதார திருமணம் செய்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு நல்லதொரு பாட,ம்.

நன்றி

தீர்ப்பின் நகலை அனுப்பி வைத்த
நாமக்கல் பத்திரிக்கையாளர் தோழர் விமலாவித்யா

1 comment:

  1. தீர்ப்பு சரிதான் ! ஆனால் ஏதோ சந்தையில் ஆடு மாடு பிடிப்பதை போல ஏழு எட்டு திருமணம் செய்யும் ஆசாமிகளை என்ன செய்வது ?

    ReplyDelete