Thursday, February 3, 2022

இந்த மொக்கைப்படம் ஏன் அய்யாவுக்கு????

 


மதிப்பிற்குரிய அய்யா அவர்கள் தன் தீர்ப்பில் ஒரு தமிழ்ப்படத்தையும் ஒரு இந்திப் படத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

அந்த தமிழ்ப்படம் “கல்யாண அகதிகள்”

1985 ல் என் கல்லூரி வாழ்வின் கடைசி மாதங்களில் பார்த்த படம்.  முற்றிலுமாக மறந்து போய் அய்யாவால் நினைவுக்கு வந்த படம்.

பாலச்சந்தர் உயிரோடு இருந்தால் அவருக்கே தான் இயக்கிய இந்த மொக்கைப் படம்  நினைவில் இருக்குமா என்பது சந்தேகம். நாசர் மட்டும் நினைவில் வைத்திருப்பார். ஏனென்றால் அவருடைய முதல் படம் அதுதான்.

ஒரு உறவினர் திருமணத்துக்காக மதுரை வந்திருந்த என் இரண்டாவது அக்கா, அவரது கணவர் வலுக்கட்டாயமாக கூட்டிப் போன படம்.  மதுரை சக்தி தியேட்டரில் பார்த்தது. அதே நேரத்தில் வெளி வந்த மோகன் நடித்த “பிள்ளை நிலா” படத்திற்கு போகலாம் என்ற என் ஆலோசனை நிராகரிக்கப் பட்டு பாலச்சந்தர் படம் என்பதால் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

படு பயங்கர மொக்கைப் படம். பாடல்கள் எல்லாம் கூட சுமார். திருமண பந்தம் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை சொன்ன படம் அது.

படத்தில் வரும் இணை நாயகிகள் அனைவருமே கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர்களாகவோ அல்லது திருமணம் ஆகாதவர்களாக, திருமணத்தை வெறுப்பவர்களாகத்தான் இருப்பார்கள். விவாகத்தையே விவாகரத்து செய்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த குழுவின் வீட்டில் யாருமே இல்லாத அபலைப் பெண்ணான நாயகி சரிதா இணைவார். அவருக்கு காதல் மலரும், திருமணம் நிச்சயமாகும்.

நாயகியின் திருமணம் நின்று போய் தனிப் பெண்கள் ஜோதியில் அவரும் ஐக்கியமாகி விடுவார் என்பது பார்வையாளர்களுக்கு அப்போதே  தெரிந்து விடும். அப்போதுதானே “கல்யாண அகதிகள்” என்ற டைட்டில் முழுமையாகும்!

அதற்கு ஒரு காரணம் வேண்டுமெல்லவா அதற்காக நாயகியை வருங்கால கணவன் வீட்டில் மத மாற்றம் செய்யச் செல்கிறார்கள் என்று வரும். அவர் கோபித்துக் கொண்டு சுதந்திரப் பெண்களோடு சங்கமமாகி விடுவார்.

படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் மத மாற்றத்தை கடைசி ஐந்து நிமிடத்தில் கையில் எடுத்திருப்பார் இயக்குனர். அது மிகவுமே செயற்கையாக இருக்கும்.  அதற்கு முன்பான இரண்டரை மணி நேரப் படத்தில்  நாயகிக்கு பக்தி இருப்பதாகவோ, கடவுளை வணங்குவதாகவோ கூட  ஒரு சின்ன காட்சி கூட இருக்காது. அதனால் நாயகிக்கு திடீரென ஏற்படும் அந்த பக்தி மிகவும் செயற்கையாக இருக்கும்..

முப்பத்தி ஏழு வருடங்களுக்கு வந்த மொக்கைப் படத்தை நினைவில் கொண்டு அய்யா தீர்ப்பில் சொல்கிறார் என்றால் அவரது நாடி நரம்பு அனைத்திலும் காவி உணர்வு ஊறிப் போயிருக்கிறது என்பதுதானே அர்த்தம்! அந்த உணர்வை வழக்குகளில் பிரதிபலிப்பதுதான் அபாயகரமானது. 

இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாட்டு அரசு மேல் முறையீடு செய்து இந்த தீர்ப்பை  மாற்றிட வேண்டும். அப்போதுதான் அபாயகரமான அபத்தங்கள் நின்று போகும்.  

No comments:

Post a Comment