Saturday, February 26, 2022

அவர்களுக்கு தவிப்பு புரியாது.

 


உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கிற வேலையை மட்டும் மோடி செய்தால் போதும் என்று எழுதியதற்கு

"உக்ரைன் வரை போய் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவனால் விமானக் கட்டணம் செலுத்த முடியாதா?"

என்று ஒரு கேள்வி வந்தது.

இந்த கேள்வியை இப்போது சங்கிகள் பரவலாக கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் பயணச்செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பு எரிச்சல் அதிகமாகி விட்டது. 

நீட் எழுதாமல் கோடிக்கணக்கில் செலவு செய்பவனுக்கு எதற்கு தண்டச் செலவு செய்ய  வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் போன்ற வெறியன் வெளிப்படையாகவே பேசுகிறான்.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகவே தோன்றும்.  ஒரு சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

மதுரையில் கல்லூரியில் படித்த காலம். விடுதியில் இருந்த நேரம். மாதத்தின் கடைசி வாரம். மெஸ் கட்டணத்தோடு செலவுக்கான பணம் (கொஞ்சமாகத்தான்)  மாதத்தின் முதல் வாரம் வரும். மாதக் கடைசியில் சொற்பமாகத்தான் கையிருப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் பரவியதும் அரசு அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடியது. விடுதிகளை விட்டு மாணவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மதிய உணவு தயார் செய்திருந்ததால் அதை சாப்பிட்டு விட்டு செல்ல பெருந்தன்மையோடு கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது. 

அப்போது என் கையில் பேருந்து கட்டணத்துக்கு மேலாக ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. யாரிடமும் கேட்க கூச்சம். என் அக்காவின் மாமியார் வீடு மதுரையில் இருந்தது. அவர்களிடம் சென்று பணம் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படி கல்லூரி மாணவர்கள் பொறுப்பில்லாமல் போராடலாமா என்று என் அக்கா மாமனார் கொஞ்சம் வகுப்பெடுப்பார். ஊருக்கு போனதும் இதே வகுப்பு உக்கிரமாக நடக்கும். அதற்கு முன்பாக இன்னொரு வகுப்பு வேண்டாமென்று புறப்பட்டு விட்டேன்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அனைத்து கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் செம கூட்டம். ஒரு மணி நேரம் கழித்தே நின்று செல்ல இடம் கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் தேநீருக்கு ஒரு ஐம்பது காசு செலவழிந்து விட்டது.

திருச்சியிலும் இதே நிலைதான். ஒரு ஏழரை மணி அளவில் வந்திருப்பேன். இரண்டு இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டதில் ஒன்றரை ரூபாய் செலவு.  மீண்டும் திருச்சியிலிருந்து நெய்வேலி வரை நின்ற கோலத்தில் பயணம். திருவள்ளுவர் பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் இரண்டு ரூபாய். ஆக கையில் இருந்தது ஒரு ரூபாய்தான். விருத்தாச்சலத்தில்தான் உட்கார இடம் கிடைத்தது.

மதியத்திலிருந்து நின்று கொண்டே வந்ததில் ஏற்பட்ட களைப்பு, ஜன்னல் சீட்டில் வந்து மோதிய குளிர் காற்று இரண்டுமே தூக்கம் என் கண்களை தழுவச்செய்து விட்டது. 

அதன் விளைவு???

நான் இறங்க வேண்டிய மந்தாரக்குப்பம் நிறுத்தத்தை தவறவிட்டு விட்டேன். மத்தியப் பேருந்து நிலையத்தில் நடத்துனர்தான் எழுப்பி விட்டார். 

மந்தாரக்குப்பத்திற்கு செல்ல என்.எல்.சி  டவுன் பஸ் எப்போது என்று கேட்டால் அமராவதி தியேட்டர் செகண்ட் ஷோ முடிந்து பனிரெண்டு மணிக்கு மேல்தான்  என்று சொல்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் நாங்கள் கொண்டு விடுகிறோம் என்று சொலிகிறார்கள். அவர்கள் கேட்ட பத்து ரூபாய் என்னிடம் இல்லை என்கிறேன். வீட்டுக்கு போய் வாங்கிக் கொடு என்று சொல்கிறார்கள். பொறுப்பில்லாமல் தூங்கி விட்டு ஆட்டோவில் வந்தாயா என்று நள்ளிரவில் திட்டு வாங்க தயாராக இல்லை. 

பனிரெண்டு மணிக்கு மேல் டவுன் பஸ்ஸில் இருபத்தி ஐந்து பைசா கட்டணத்தில் சென்று எழுபத்தி ஐந்து பைசா கையிருப்போடு வீட்டுக்குப் போன சொந்தக்கதை, சோகக்கதை இது.

எதிர்பாராத பயணத்தால் ஒரே மாநிலத்தில் பட்ட அவதி இது.

படிக்கச் சென்ற உக்ரைன் மாணவர்களால் திடிரென விமானச் செலவுக்கான கட்டணத்தை எப்படி திரட்ட முடியும் என்று சிந்தித்தால் இந்த கேள்வி வராது.

உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.

இந்தியாவிற்கான அரசு விமான நிறுவனம் இல்லாத நிலைமையில் தனியார் விமானக் கம்பெனிகள் சூழலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் கதி அதோகதியாக மாறி விட்டது.

இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

அரசு நிறுவனமாக ஏர் இந்தியா இருந்திருந்தால் மூன்று மடங்கு கட்டணக் கொள்ளை நடக்காது. அதனால் அந்த கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஏர் இந்தியாவை விற்றுத் தின்ற அரசின் கடமைதான்.

எல்லாமும் இலவசமாக இருக்க முடியாது என்பதெல்லாம் விளக்கெண்ணெய் உபதேசம். முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகை, தள்ளுபடி உள்ளிட்ட எல்லா எழவுகளும் கூட இலவசம்தான். சொற்றொடர் வேறு.

உக்ரைனில் தவிப்பவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வுள்ளவர்கள் இப்போது செலவுக்கணக்கு பார்க்க மாட்டார்கள். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொகுசாக இருப்பவர்கள்தான் பொருளாதார மேதைகளாக வியாக்யானம் செய்து கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு மாணவர்களின் தவிப்பு புரியாது. அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பை காலம் நமக்கு கொடுத்துள்ளது.

என்ன இவர்கள்தான் தங்களை தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அனாமதயே அயோக்கியன்னு நிரூபிச்சுட்ட கருங்காலி நாயே

      Delete