Tuesday, February 22, 2022

கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்

 



 

*நாளொரு கேள்வி: 21.02.2022*

 

தொடர் எண்: *630*

 

இன்று நம்மோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் *கே.கனகராஜ்*

########################

 

*கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்*

 

கேள்வி: உலகமயம் வேலைகளை உருவாக்கும் என்று சொல்லப்பட்டது. அதை தீவிரமாக பின்பற்றும் மோடி காலத்து வேலை உருவாக்கம், வாக்குறுதிகள் நிலைமை என்ன

 

*கே.கனகராஜ்:*

 

2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி என்கிற புதிய முதலாளிகளின் பிரதிநிதியை ஆளும் வர்க்கம் முன்னிறுத்தியது. அவர்  மிகப் பிரம்மாண்டமான வாக்குறுதிகளை முன்வைத்தார். *ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை* என்பதை அவர் சொன்னது மட்டுமின்றி முதலாளித்துவ ஊடகங்கள் அவர் கையில் அதற்கான *மந்திரகோல்* இருப்பது போன்று ஊதிப் பெரிதாக்கின. இடதுசாரிகள் அப்போது உலகம் முழுவதும் இருந்த அனுபவத்தை கணக்கில் கொண்டு *தாராளமயம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே* உருவாக்கும். இதனால் ஏற்கனவே உள்ள  வேலைவாய்ப்புகளும் நீடித்து நிற்க முடியாது என்று உறுதிபட கூறினர். இதற்காக அவர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள்.

 

இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் தலைவராக உள்ள *பிபேக் தேப்ராய்* வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியாகத்தானே இருக்கிறதுஎன்று கேள்வி எழுப்பினால் வளர்ச்சியற்ற வேலைவாய்ப்புகள் உருவாகுமா? என்று *எதிர்க்கேள்வி* கேட்கிறார். ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை என்று சொன்னவர்கள் தற்போது அடுத்த *ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை* உருவாக்குவதற்கான முறையில்தான் திட்டங்கள் அமைந்திருப்பதாக இந்த பட்ஜெட்டில் கூறுகிறார்கள்.

 

சமீபத்தில் வடக்கு ரயில்வேயில் 35 ஆயிரம் பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆரம்பத்தில் மோடி *ஸ்வட்ச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா* ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் தற்போது தான் வேலையின்மை விகிதம் உச்சத்தில் இருக்கிறது. *2011-12ல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக வேலையின்மை* உயர்ந்துள்ளது. 2021 டிசம்பர் கணக்கு படி *சுமார் 5.25 கோடி பேர் வேலையில்லாத இளைஞர்கள் இந்தியாவில்* இருக்கிறார்கள். இவர்களில் 3.50 கோடி பேர் ஏதாவது வேலை கிடைக்காதா? என்று தொடர்ச்சியாக வேலை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். மீதமுள்ள 2 கோடி பேர் இனி வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நம்பிக்கையிழந்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டார்கள்

 

2014 இல் தந்த 10 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி சந்தித்த அவலம் இதுதான்

 

உண்மை என்னவென்றால், *2016-17ல் 5.1 கோடி பேர் உற்பத்தி துறையில்* பணியாற்றிக் கொண்டிருந்தனர். 2022ம் ஆண்டை நெருங்குகிற போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட *46.5 சதவிகிதம் குறைந்து 2.73 கோடி பேர் மட்டுமே வேலை* பார்க்கிறார்கள். மோடி சொன்னது போல உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் 5 கோடியிலிருந்து 10 கோடி என்று இரண்டு மடங்காக உயர்வதற்கு பதிலாக 5 கோடியிலிருந்து 2.73 கோடியாக குறைந்து விட்டது. ஒவ்வொரு துறையிலும் இதுதான் நிலைமை. *ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுரங்கம், ஊடகம், பதிப்புத்துறை, பொதுநிர்வாகம் என்று அனைத்திலும் 2016-17ல் இருந்ததை விட 2020-21ல் வேலைவாய்ப்புகள் அகலபாதாளத்திற்கு* சரிந்து விட்டன. 2021-22 கணக்கைச் சொன்னால் கொரோனா பாதிப்பை கணக்கில் எடுக்காமல் சொன்னதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் ஊளையிடக் கூடும்.

 

எனவே, தான் 2021 மார்ச் வரையிலான கணக்கு இங்கே முன்வைக்கப்படுகிறது. *ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 10.43 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள் 2.92 லட்சமாக குறைந்து விட்டதாக* தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஏறத்தாழ 72 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டன. அதாவது, 2016-17ல் ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 100 பேர் வேலை செய்தார்கள் என்றால் இப்போது வெறும் 28 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2016-17ல் அனைத்து துறைகளும் சேர்ந்து 40.7 கோடி பேர் பணியிலிருந்தார்கள். ஆனால், 2020-21ல் இந்த எண்ணிக்கை 37.8 சதவிகிதமாக சரிந்து விட்டது. மோடி சொன்னது போல நடந்திருந்தால் 2020-21ல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள் 50 கோடியை தாண்டியிருக்க வேண்டும். மாறாக, உள்ளதும் போச்சு என்று சொல்லும் வகையில் 7.13 கோடி வேலைவாய்ப்புகள் இந்த காலத்தில் இல்லாமல் போய்விட்டன.

 

*எல்லையில் வீரர்கள்* என்று சங்பரிவார் கும்பல் எப்போதும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றம் செய்வதற்காக கூக்குரலிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் *பாதுகாப்புத்துறையில் 1.90 கோடி பேர் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெறும் 71 லட்சம் பேர் மட்டுமே* பணியிலிருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் மிகக்கடுமையாக குறைந்திருக்கிறது. இப்போது மோடியின் கையில்மந்திரகோல்ஏதுமில்லை என்பது தெளிவாகியிருக்கும். *வேலைவாய்ப்பு தனி மனிதனின் திறமையினால் மட்டும் உருவாக்கப்பட்டு விடுவது அல்ல.* ஒரு அரசு கடைபிடிக்கும் கொள்கைகளால் உருவாக்கப்படுவது தான். அரசே அனைவருக்கும் வேலைகள் கொடுத்து விட முடியும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், *அரசின் கொள்கைகள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்* என்பது தான் இதன் அடிப்படையான அம்சம்.

 

நவீன தாராளமயக் கொள்கை வளர்ச்சி என்று வேடமிட்டு வந்தாலும் அடிப்படையில் அது லாபத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தோடு தான் வருகிறது. *லாப அதிகரிப்பு மிக முக்கியமான அம்சமாக இருப்பது தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைப்பதும், பணி நேரத்தை அதிகப்படுத்தவும், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வெட்டிச் சுருக்குவதாகும்.* சிக்கன நடவடிக்கை, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள், நாடு வளர வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் துயரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நவீன தாராளமயத்தை, உலகமயத்தை ஆதரிக்கும் எல்லோரும் ஏழை, எளிய மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், *எப்போது சிக்கனத்தை கைவிட முடியும்?, எப்போது இறுக்கி கட்டிய வயிறை சற்று நெகிழ்வாக்கிக் கொள்ள முடியும்?, நாடு வளர ஏற்றுக் கொண்ட துயரம் எப்போது குறையும்?. நாடு எப்போது நிறைவான வளர்ச்சி பெறும்? என்பதை பற்றி எவரும் எழுதுவதில்லை.*

 

தேசத்தின் பொருளாதாரம் கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் ஏற்கனவே இருந்த நிலையை விட மிக கடுமையாக குறைந்திருக்கிறது. இத்தகைய அனுபவத்தில் இனிமேலும் நவீன தாராளமயக் கொள்கை என்னும் *வெள்ளை யானையை சுமந்து கொண்டு திரிய வேண்டுமா”?.*

 

உலகமே ஒரு திசையில் ஓடுகிற போது இடதுசாரிகள் மட்டும் மாற்றுக் கருத்தைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று சிலர் அப்பாவித்தனமாகவும், சிலர் நரித்தனத்தோடும் பேசக் கூடும். ஆனால், இடதுசாரிகள் சொன்னது தான் இப்போது உண்மையாகி இருக்கிறது.

 

எனவே, இந்தியாவில் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத *உலகமே ஒரு பக்கம் ஓடுகிறது என்கிற வாதமும், அதனால் நாமும் சேர்ந்து ஓட வேண்டும் என்கிற வாதமும் முட்டாள்தனமானது.*

 

*******************

*செவ்வானம்*

 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உன் பொய்யஒ உன் பக்கத்திலேயே வாந்தி எடுடா முண்டம்

      Delete