Monday, August 6, 2018

வழக்கம் போல ஜூம்லா . . .



காலி டப்பா- விவசாயிகளுக்கு 4 ஆண்டு மோடி அரசின் பரிசு
பொருளியல் அரங்கம்--க.சுவாமிநாதன்

பிரண்ட் லைன் (ஆகஸ்ட் 3, 2018) இதழில் இடம் பெற்றுள்ள பொருளாதார நிபுணர் சி.பி.சந்திர சேகர் கட்டுரையின் தகவல் கேள்வி - பதில் வடிவில் இங்கு தரப்பட்டுள்ளது.

பிரண்ட் இதழ் கட்டுரையின் தலைப்பு ‘EMPTY PROMLSES’

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அண்மையில் அமைச்சரவை முடிவுகளாக விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு + 50 சதவீதத்தை குறைந்தபட்ச ஆதரவு விலையாகவும். பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்கிற மேம்படுத்தப்பட்ட பயிர்க் காப்பீட்டுத்திட்டம் அமலாகுமென்பதும் அறிவிக்கப்பட்டுள்ளதே!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாதவிர, விவசாயிகளுக்கான மற்ற அறிவிப்புகளெல்லாம் நான்காண்டுகளாக சும்மா இருந்துவிட்டு பதவிக்காலம் முடிகிற தறுவாயிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு காரணங்கள் உண்டு. பல மாநிலங்களில் நடந்தேறி வரும் வலுவான விவசாயிகள் போராட்டம், தெளிவான கோரிக்கை சாசனத்தின் அடிப்படையில் விவசாயிகள் ஒரே மேடையில்இணைகிற எழுச்சி ஆகியன முக்கியமான முதல்காரணம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் விவசாயிகளின் கோபம் தங்களுக்கு எதிரான வாக்குகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் இரண்டாவது காரணம். நான்காண்டுகளில் மோடி அரசின் பாராமுகத்தாலும், பாரபட்சத்தாலும் விவசாயிகள் பட்ட பாடே இந்நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனினும் இந்த அறிவிப்புகள் பயன் தருமல்லவா!

பிஜேபி அரசுக்கு ஒரு “நற்பெயர்” உள்ளது. ஆரவாரமான அறிவிப்புகள், அமைதியாகக் கைகழுவுதல் என்பதே ஆகும். ஒரு உதாரணம், 2017 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “தேசியஉடல் நல பாதுகாப்புத் திட்டம்”. அதை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கும் போது ஆரவாரமாக “உலகின் மிக மிக அதிகமான நிதியாதாரங்களோடு அறிவிக்கப்பட்டுள்ள உடல் நலத்திட்டம்” என்று வர்ணித்தார். ஆனால்அதற்கான நிதி ஒதுக்கீடு என்பது இதுவரையிலும் கூட கண்களுக்குத் தென்படவில்லை.

பசல் பீமா யோஜனா பயிர்க்காப்பீட்டில் மேம்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறதல்லவா?

திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அரசு ஆதரவுபிரச்சாரம் துவங்கி விட்டது. ஆனாலும் உணர்வுப்பூர்வமான அக்கறையும், நிதிப்பங்களிப்பும் இல்லாவிட்டால் இத்திட்டம் எவ்வளவு தூரம் நகர முடியும் என்பதுதான் கேள்வி.

அத்திட்டம் என்ன? பயிர்க் காப்பீட்டிற்கு குறுவை எனில் விவசாயிகள் பிரிமியத்தில் 2சதவீதம் செலுத்தினால் போதும். சம்பா எனில்1.5 சதவீதம். தோட்டப் பயிர்கள் எனில் 5 சதவீதம்.மீத பிரிமியம் மொத்தத்தையும் மத்திய, மாநிலஅரசுகள் தர வேண்டும். 2017-2018க்குள்ளாக மொத்தப் பயிர் நிலங்களில் 40 சதவீதம். 2018-19க்குள்ளாக 50 சதவீதம் பயிர்க்காப்பீட்டின் வரம்பிற்குள் கொண்டு வரப்படும். இதுவே திட்டம். 2017-18 முடிந்துவிட்டது. 2018-19 நிதியாண்டு துவங்கி அதிலொரு காலாண்டு கழிந்துவிட்டது. ஆனால் திட்டம் அமலான அனுபவம் என்ன?

2016-17 ல் பயிர் நிலங்களில் 30 சதவீதம்பயிர்க் காப்பீட்டின் குடைக்குள் இருந்தது. 2017-18லோ 24 சதவீதமாகச் சரிந்துவிட்டது. பயிர்க்காப்பீட்டின் பாதுகாப்பைப் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையும் விழுந்துள்ளது. இதுதான்ஆரவார அறிவிப்பிற்கும், அமைதியாகக் கை கழுவுவதற்குமான இடைவெளி.

குறைந்த பட்ச ஆதரவு விலையாக உற்பத்திச் செலவு+ 50 சதவீதம் தரப்படுமென்றுஅறிவிக்கப்பட்டுள்ளதே!

இந்த அறிவிப்பின் கதியும் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியே. மேலும் இது எதைத்தருவதாக பிரதமர் விவசாயிகளுக்கு வாக்குறுதிஅளித்தாரோ அந்த விலையல்ல. அறிவிப்பிலேயே நீர்த்துப் போவது துவங்கிவிட்டது. பிரதமரின் வாக்குறுதி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த சி2(c2) என்கிற உற்பத்திச் செலவினம் + குடும்ப உழைப்பு + நில வாடகைமற்றும் இடப்படும் முதலீட்டிற்கான வட்டி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஆனால் மத்தியஅரசு அறிவித்திருப்பதோ ஏ2 + எப்.எல் (A2 + FL) என்கிற விலையே ஆகும். அதாவதுஉற்பத்திச் செலவினம்+குடும்ப உழைப்பிற்கான விலையாகும் அது. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைக்கும், இப்போது மத்திய அரசுஅறிவித்திருப்பதற்குமான இடைவெளி அனைத்துக் குறுவைப் பயிர்களுக்கும் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரையிலானதாகும். இது பிரதமர் 2018-ல் கிருஷி உன்னாடி மேளாவில்மீண்டும் தெளிவுபடுத்திய முந்தைய வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானது. பெரிய பள்ளம்!

அறிவித்திருக்கிற விலையாவது விவசாயிகளுக்கு கிடைக்குமா?

அதுவும் கேள்விக்குறியே. குறைந்த பட்சஆதரவு விலை அதிகரித்தால் மட்டும் போதாது.அரசின் கொள்முதல் அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகளுக்கு அரசு கொள்முதல் நிலையங்களை எட்டுவதிலேயே சிரமங்கள் உண்டு. எனினும் கொள்முதல்உயர்வதற்கான வாய்ப்புகள், ஆதாரவிலை உயர்வு காரணமாக ஏற்படலாம். ஆனால் அதற்குஅரசின் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிதிப்பற்றாக்குறை குறித்த அரசின் அணுகுமுறை இதை அனுமதிக்குமா? என்பதுகேள்வி. வசதி படைத்தவர்கள் மீது வரி போடுவதற்கான அரசியல் உறுதி உண்டா? ஏற்கெனவே நிறுவன வரியைக் குறைப்போமென்று கார்ப்பரேட்டுகளுக்கு அளித்துள்ள வாக்குறுதியை இவர்களால் நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? குறைந்த பட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உயர்த்தியிருப்பதால் நுகர்வோர் விலை அதிகரிப்பதைத் தடுக்கபொது விநியோக முறையைப் பலப்படுத்துவார்களா? இல்லையெனில் ரேசன் விலைகளை உயர்த்துவார்களா? உயர்த்தினால் விவசாய விளைபொருட்கள் கிட்டங்கிகளில் தேங்கினால் அதற்கான செலவுகள் உயருமே? தேர்தல் ஆண்டில் நுகர்வோர் விலை உயர்ந்தால் வாக்குகள் போய்விடுமே என்று ஆளுங்கட்சி அச்சப்படாதா? மாற்று வழிகள் என்ன? பங்கு விற்பனை வாயிலாக பட்ஜெட்டில் விழும் பள்ளத்தைச் சரி செய்வதென்றாலும் அதுவும் ஏற்கெனவே அதற்கு மேல் உறிஞ்ச முடியாத உச்சத்தைத்தொட்டுவிட்டதே. இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் என்ன பதில்?

என்ன ஆகும் இந்த அறிவிப்பு?

இக்கவலை உண்மையிலேயே அரசுக்கு இருக்கிறதா? 
என்பதுதான் சந்தேகம். வரிக்கொள்கையும், நிதிப்பற்றாக்குறை குறித்த அணுகுமுறையும் மாறாத வரையில் அறிவிப்புகள் அமலாவது கானல் நீரே. ஆகவே அதிகஎண்ணிக்கையிலான விவசாயிகள் கொள்முதல்முறைமையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள். பாஜக மாநில அரசுகள் இதைத்தான் செய்யும். பாஜக அல்லாத மாநில அரசுகள் இந்தஅறிவிப்பை அமலாக்க முயற்சித்தாலும் அதற்கான கூடுதல் செலவினத்தை மத்திய அரசுஈடுகட்டுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

அரசின் அறிவிப்புகள் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன?

இது தேர்தலுக்காக விடுக்கப்பட்டிருப்பதுதான். “சாதாரண மனிதன் ” மீதான கவலைஉண்மையில் இல்லை. கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்திற்கு 2017 -18 -ல் ஒதுக்கப்பட்ட ரூ. 55000 கோடி கொஞ்சமும் கூட 2018-19 -ல்உயர்த்தப்படவில்லை. 2017-18-ல் அந்தத் தொகைப் போதாமல் கூலி பாக்கி இருந்தது. இன்னொரு பக்கம் ஒதுக்கப்பட்ட தொகையும் முறையாகச் செயல்படவில்லை. வேலை கோரல்அதிகமாக இருந்தாலும் வேலை தரப்படவில்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்களையே ஊனப்படுத்துபவர்கள் எப்படி புதிய அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவார்கள்? ஆகவே புதிய அறிவிப்புகள் “காலி டப்பா ” ஆக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

நன்றி - தீக்கதிர் 05.08.2018 

No comments:

Post a Comment