Thursday, August 2, 2018

மீண்டும் தலை தூக்குது . . .



மீண்டும் தலைதூக்கும் பொதுத்துறை எதிர்ப்பு முகாம்



வி.ரமேஷ்-
பொதுச் செயலாளர், 
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


பொதுத்துறை எதிர்ப்பு முகாம் முழுவீச்சுடன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. எல்.ஐ.சியைத் தனியார்மயமாக்க வேண்டுமென்ற கெடுநோக்கிலான கூக்குரல்களை எழுப்பத் துவங்கியுள்ளார்கள். ஐ.டி.பி.ஐ வங்கியை எல்ஐசி எடுத்துக் கொள்வது என்ற முடிவு இவர்களின் வாதங்களுக்கான வாய்ப்பைத் தந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டிற்குள் எல்.ஐ.சி இருக்கிற வரை பாலிசிதாரர்களின் பணம் பத்திரமாக இருக்காது என்று பேசத் துவங்கியுள்ளார்கள். பாலிசிதாரர்களின் சேமிப்புகளுக்குப் பங்கம் ஏற்படுத்துகிற வகையில், நலிவுற்ற ஐ.டி.பி.ஐக்கு நிறைய பணத்தை எல்.ஐ.சியின் வாயிலாகக் கொட்டுவதற்கு அரசு நிர்ப்பந்தம் செய்கிறது என்பதே அவர்களின் வாதம்.

விந்தையான வாதம்

இதில் விந்தை என்னவெனில், ஐ.டி.பி.ஐயின் பிரச்சனைகள் அல்லது மொத்த வங்கித் துறையின் பிரச்சனைகளுக்கு காரணம் தனியார் துறையின் தோல்வியேயாகும். வங்கித் துறையின் பெருமளவு செயல்படா சொத்துக்கு பிரதான காரணம் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வசூலாகாத கடன்களேயாகும். நேர்மையான வகைத் தோல்விகளால் வராமல் போகிற கடன்களின் பங்கு மிகச் சிறியதே ஆகும். நேர்மையின்மை, மோசடிகள், அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கம்-கார்ப்பரேட்டுகளின் கூட்டு ஆகியனவே இந்திய வங்கித் துறையை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. 

ஐ.டி.பி.ஐயைப் பொறுத்த வரையில் அதன் நெருக்கடிக்கு பெரிதும் காரணம் தடைபட்டுப் போன ஆதாரத் தொழில் திட்டங்களேயாகும். எல்.ஐ.சி, நாடாளுமன்றச் சட்டம் வாயிலாகப் பிறப்பெடுத்தற்கு காரணமே தனியார் நிறுவனங்கள் அடித்த அளவற்ற கொள்ளையும், மோசடிகளும் அவற்றிலிருந்து பாலிசிதாரர்களைக் காப்பாற்ற வேண்டியிருந்த தேவையுமேயாகும். எனவே பொதுத்துறை நிதி நிறுவனங்களைத் தனியார்மயமாக்க வேண்டுமென்பதும், யார் பிரச்சனைகளுக்கான காரணங்களாக இருக்கிறார்களோ அவர்களிடமே அந்நிறுவனங்களை ஒப்படைப்பதுமென்பதும் குரூரமானது; நேர்மையற்றது என்றே குறைந்தபட்சமாக சொல்ல முடியும்.

நம்பிக்கையின் மறுபெயர்

இன்று இந்தியாவின் தலையாய நிதிநிறுவனமாக எல்.ஐ.சி உருவாகியுள்ளது. பாலிசிதாரர்களின் பணத்திற்கும் அவர்களுக்கு சேர்ந்துள்ள போனஸ் தொகைக்கும் அரசு உத்தரவாதம் இருந்த போதிலும் கடந்த 62 ஆண்டுகளில் ஒரு முறை கூட எல்ஐசி தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அரசு உத்தரவாதத்தை பயன்படுத்தியதில்லை.உரிமப்பட்டுவாடாவில் அது உலக சாதனை படைத்துள்ளதோடு அதன் சேவை உலகத் தரங்களை விஞ்சுகிற அளவிற்கு உள்ளது என்றும் அதனால் பறைசாற்ற முடியும். எனவே தனியார்மய ஆதரவு முகாமின் பிரச்சாரத்தை உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். தனியார்மயத்திற்கு ஆதரவாக அவர்கள் உற்பத்தி செய்ய முனைகிற கருத்தாக்க முயற்சிகளை இன்னும் அதிகமான எதிர்வினைகள் வாயிலாக வீழ்த்த வேண்டும் தேசியமயச் சட்டம் எல்.ஐ.சிக்கு பிறப்பித்துள்ள கட்டளை ஒன்று உண்டு. பாலிசிதாரர் பணத்தைப் பத்திரமாக பாதுகாப்பதும், பாலிசிதாரர் சேமிப்பிற்கு உரிய உருவாயை ஈட்டித் தருவதுமே ஆகும். இந்நோக்கத்தை ஈடேற்றுவதற்கு தெளிந்த, வெளிப்படையான முதலீட்டுக் கொள்கை அவசியம். இந்தியப் பொருளாதாரத்தில் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடு மார்ச் 31, 2018 அன்று ரூ.25.15 லட்சம் கோடிகள் ஆகும். எல்.ஐ.சியின் முதலீடுகளில் 82 சதவீதம், அதாவது ரூ.20.5 லட்சம் கோடிகள் அரசு பத்திரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களிலேயே செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி 4.59 லட்சம் கோடிகளை பங்குகள், முன்னுரிமைப் பங்குகள், மற்ற முதலீட்டு வடிவங்களில் இட்டுள்ளது. இது மொத்த முதலீடுகளில் 18 சதவீதம் ஆகும். பங்குச் சந்தையில் எல்.ஐ.சி நீண்ட கால முதலீட்டாளராக இருப்பதால், அது தனது பங்குச் சந்தையின் பிற முதலீட்டாளர்களிடமிருந்து மாறுபட்டு முதலீடு செய்கிற திட்டமிட்ட உத்தியின் வாயிலாகப் பயனடைந்திருக்கிறது. அது எப்போதுமே முதலீடுகளின் மீது நல்வருவாயைப் பெற்று வருகிறது. ஆகவே ஐ.டி.பி.ஐ முதலீடுகள் மூலம் பாலிசிதாரர்களின் எல்லாச் சேமிப்புகளும் பறிபோகும் என்கிற பிரச்சாரம் திசை திருப்பலும், உள்நோக்கமும் கொண்டதாகும்.

ஐடிபிஐ பிரச்சனை- எழும் கேள்விகள்


ஐ.டி.பி.ஐ முதலீட்டில் இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. அவ்வங்கியிலுள்ள அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பது அப்பட்டமான தனியார்மயமேயாகும். பொதுத்துறைகளை அதிலும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் நிதித்துறையில் தனியார்மயத்தைக் கொண்டு வருவதை ஏற்க இயலாது. எனவே இதற்கு எதிராக ஐ.டி.பி.ஐ ஊழியர்களும் அதிகாரிகளும் எழுப்புகிற குரலோடு இன்சூரன்ஸ் ஊழியர்களின் குரலும் இணைந்து ஒலிக்கும்.

இரண்டாவதாக ஐ.டி.பி.ஐயில் கேந்திர முதலீட்டை எல்.ஐ.சி செய்வது குறித்ததாகும். இதில் கவலை கொள்கிற அம்சங்கள் உள்ளன. எந்தவொரு முதலீட்டு முடிவும் விரிவான செலவு-பயன் குறித்த ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும்.முதல் கேள்வி, ஐ.டி.பி.ஐயில் எல்.ஐ.சி செய்கிற முதலீட்டின் மதிப்பிற்கு உகந்த பயன் கிடைக்குமா? அதில் எல்.ஐ.சி எடுக்கிற இடர் சரியானதா? இரண்டாவது, ஐ.டி.பி.ஐயை எல்.ஐ.சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் வாயிலாக “பேங்கஸ்யூரன்ஸ்” எனக் கூறப்படும் வங்கி வழியிலான இன்சூரன்ஸ் வணிகம் அதிகரிக்குமா? அதன் பயனாக சராசரி பிரிமியத்தின் அளவை அதிகரிக்க இயலுமா? 

மூன்றாவதாக, அவ்வங்கியை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான திட்டம் என்ன? அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்? எல்.ஐ.சியின் இயக்குநரவையும், முதலீட்டிற்கான குழுவும் விளக்கமளிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.அரசாங்கம் எல்.ஐ.சி மீது இவ்வளவு பெரிய முதலீட்டிற்காக நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. பாலிசிதாரர்களின் நலனுக்கு எல்.ஐ.சியின் இயக்குநரவையே முதன்மையான பொறுப்பு ஏற்க வேண்டும். பாலிசிதாரர் நலன் காக்கிற முடிவுகளையே அது எடுக்க வேண்டும். நூற்றுக்கு நூறு நிறுவனத்தின் நலனும், பாலிசிதாரர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். 

தனியார்மய ஆதரவு முகாம்களின் முனைப்புகளுக்கு எதிர்வினை ஆற்றுவதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும். தனியார்மய ஆதரவுப் பிரச்சாரத்தின் கெடு நோக்கங்கள் அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட வேண்டும். தேசத்திற்கான தனது பெரும் பங்களிப்பை நல்கி தேசநிர்மாணத்திற்குப் பயன்படுகிற வரியில் நூறு சதவீத அரசு நிறுவனமாக எல்ஐசி தொடர வேண்டும்.

1 comment: