Wednesday, August 1, 2018

காந்தியைக் கொல்லும் மோடி


தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மோடிக்கு எழுதிய கடிதத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அவருக்கே உரிய நையாண்டி பாணியில் எழுதப்பட்டுள்ளது. சாவி எழுதிய நூலை ஹெச்.ராஜாவை மொழிபெயர்க்கச் சொன்னது ஓவர் நக்கல்.

நான் மிகவும் ரசித்ததால் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.காந்தியை மீண்டும் கொல்லாதீர்கள்!
மதுக்கூர் இராமலிங்கம்


அன்புள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். 

அன்புள்ள என்கிற வார்த்தையை சில இடங்களில் அர்த்தமற்ற அசைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி, சுபாஷ் சந்திரா, சஞ்சீவ் பூரி உள்ளிட்ட இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் புடைசூழ நின்றுகொண்டு தொழிலதிபர்களுடன் இருக்க பயப்படவில்லை என்று பேசி இருக்கிறீர்கள். இதில் நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை. நாட்டு மக்கள் தான் பயப்பட வேண்டியிருக்கிறது. முதலாளிகளோடு நீங்கள் காட்டுகிற நெருக்கம் இந்திய மக்களின் கடைசி கையிருப்பையும் களவாடி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்ற பெயரில் நீங்கள் அறிவித்த நடவடிக்கை அதைத்தானே செய்தது.இந்தக் கூட்டத்தில் பேசும்போது, என்னுடைய மனச்சாட்சி தெளிவாக இருக்கிறது. எனவேதான் தொழிலதிபர்களோடு நிற்கிறேன் என்று பேசியுள்ளீர்கள். அனுமனின் நெஞ்சை பிளந்து பார்த்தால் ராமன் தான் இருப்பான் என்று புராணங்கள் புனைந்துரைப்பதைபோல, உங்கள் நெஞ்சம் முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகள்தான் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பார்கள்.

இதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.ஆனால், மகாத்மா காந்தியை இந்த இடத்தில் இழுத்து உங்களோடு ஒப்பிட்டுக் கொண்டிருப்பதைதான் தாங்க முடியவில்லை. காந்தியின் உள்நோக்கம் தூய்மையாக இருந்ததால், பிர்லா குடும்பத்தோடு தங்குவதற்கு அவர் தயங்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள்.ஏதோ காந்தியடிகள் பிர்லா குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்தது போல பேசியிருக்கிறீர்கள். 1946 - 47 நாட்டின் பிரிவினை காலத்தின் போது, காந்தியடிகள் தில்லியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பங்கி காலனியில்தான் தங்கியிருந்தார். அது எங்கு இருக்கிறது என்று கூட உங்களுக்கு தெரியாது. 

நவகாளி யாத்திரையின் போது, எளிய இந்து மற்றும் முஸ்லிம் மக்களின் குடிசைகளில்தான் காந்தி தங்கியிருந்தார். அங்குதான் எல்லோரையும் சந்தித்தார். சாவி எழுதிய நவகாளி யாத்திரை புத்தகத்தை படித்தால் இதை புரிந்து கொள்ள முடியும். இந்தப் புத்தகம் தமிழில் இருக்கிறது. எச்.ராஜாவிடம் கேட்டால் இந்தியில் மொழி பெயர்த்துக் கொடுப்பார்.1947 செப்டம்பர் 9 முதல் 1948 ஜனவரி 30 ஆம் தேதி இந்துத்துவா வெறியன் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படும் நாள் வரை பிர்லா மாளிகையில் காந்தி இருந்தார் என்பது உண்மைதான். காந்தி பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் விடாது வலியுறுத்தியதால்தான் காந்தி அங்கு தங்கியிருந்தார்.
அந்த இடமும் கூட அவருக்கு பாதுகாப்பு தரவில்லை என்பது வேறுவிஷயம்.மற்றபடி, காந்தியோடு ஒப்பிட்டுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு ஒற்றுமையாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் காந்தி பிறந்த குஜராத்தில் தான் நீங்களும் பிறந்தீர்கள் என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

‘சத்யமேவ ஜெயதே’ என்பது காந்தியின் வார்த்தை. அதாவது வாய்மையே வெல்லும். ஆனால் மறந்தும் கூட உண்மையை பேசாதவர் நீங்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன். கறுப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன். விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட அரை மடங்கு அதிக விலை வைத்து தருவேன் என்றெல்லாம் நீங்கள் அள்ளி வீசிய வார்த்தைகள் இப்போது உங்களைச் சுற்றி கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன.சர்ச்சிலால் ‘அரை நிர்வாண பக்கிரி’ என்று இகழப்படும் அளவுக்கு எளிமையின் இலக்கணமாக இருந்தார் காந்தி.

 ஒபாமாவை வரவேற்க 15 நிமிடம் மட்டுமே அணியக் கூடிய மேல் கோட்டை ரூ.15 லட்சம் செலவு செய்து லண்டனில் தைத்து அணிந்து கொள்கிறீர்கள் நீங்கள். காந்தியின் பசி தீர்க்க நிலக்கடலையும், ஆட்டுப் பாலும் போதுமானதாக இருந்தது. ஆனால், உங்களுக்கு முகப் பொலிவை பராமரிக்க தினமும் ரூ.4 லட்சம் செலவு செய்து தைவானிலிருந்து காளான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் நாட்டுக்கு செலவாகிறது.இந்த நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் காந்தி. ஆனால், நான் பிரதமராக இருக்கிற போது, ஒரு விவசாயியும் உயிரோடு இருக்கக் கூடாது என்பது போல செயல்படுகிறீர்கள் நீங்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி மாண்டு போகிறார். அதனால் என்ன, விவசாயிகள் அம்பானி, அதானி குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? 

நாடு விடுதலை பெற்ற போது கொல்கத்தாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை முஸ்லிம் வீட்டில் அமர்ந்து கொண்டு, காந்தி அமைதியாக நூல் நூற்றுக் கொண்டிருந்தார். இந்து - முஸ்லிம் ஒற்றுமையை அழுத்தமாக வலியுறுத்தியதற்காகவே உங்கள் மூதாதையரான இந்து மகாசபை - ஆர்எஸ்எஸ் கும்பலால் காந்தி கொல்லப்பட்டார். லண்டனில் படித்துவிட்டு தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி விடுதலை உணர்வு மேலோங்க காந்தி இந்தியாவுக்கு வந்தார். ஆனால், நீங்களோ பிரதமரான பிறகு வெளிநாடுகளுக்கு பறந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள். போகும் இடமெல்லாமல் அம்பானிகளையும் அதானிகளையும் அழைத்துக் கொண்டே போகிறீர்கள். ஆஸ்திரேலியச் சுரங்கத்தை அதானிக்கு வாங்கிக் கொடுக்க, பாரத ஸ்டேட் பேங்க் பணத்தை எடுத்துக் கொடுத்த பாரிவள்ளல் அல்லவா நீங்கள்? 

ஜியோ நெட்வொர்க்கின் விளம்பரத் தூதராக நடித்துக் கொடுத்தீர்கள். பிரதமருக்கு தெரியாமல் இது நடந்திருக்கலாம் என சிலர் பொங்கிய போது, நீங்கள் அனைத்தும் அறிந்தது போல புன்னகை பூத்தீர்கள். இப்போது இன்னமும் துவங்காத ஜியோ பல்கலைக் கழகத்தை முதல் தரமான பல்கலைக் கழகம் என அங்கீகரித்த பெருமான் அல்லவா நீங்கள். இதுபோன்ற வேலைகள் எதிலும் காந்தி ஈடுபட்டதாக சரித்திரக் குறிப்பு இல்லை. வேண்டுமானால் உங்கள் ஆட்கள் எதிர்காலத்தில் எழுதி வைக்கக் கூடும்.2014ல் 2.6லட்சம் கோடியாக இருந்த பெருமுதலாளிகளின் வாராக்கடன் 2017 செப்டம்பரில் 8.37லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கி ஏப்பம்விட்ட ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 82 கோடி கடனை தள்ளுபடி செய்தீர்கள்.

இந்த காருண்யம் காந்திக்கு வருமா? மல்லையா துவங்கி நீரவ் மோடி வரை கடன் தொல்லை தாங்க முடியாமல் எத்தனை முதலாளிகள் நாட்டை விட்டு தப்பி ஓடுகிறார்கள். இவர்களையெல்லாம் அழைத்து வந்து கவுரவமாக தொழில் நடத்த வைப்பதுதான் காந்திக்கு செய்கிற மரியாதை என்று கூட பேசுவீர்கள். உங்கள் வாய், உங்கள் மைக். யார் என்ன செய்ய முடியும்?

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் காந்தியை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்.

நன்றி -  தீக்கதிர் 01.08.2018

No comments:

Post a Comment