Sunday, March 23, 2014

மம்முட்டிக்காக மன்சூர் அலிகான் இழுத்த தங்கத்தேர்

இடதுசாரிகளை எதிர்ப்பதன் மர்மம் என்ன?

மூன்று வாரங்களுக்கு முன்பாக திருப்பத்தூருக்கு ஒரு தோழரின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது ஆம்பூரில் இருவர் அதே பஸ்ஸில் ஏறினார்கள். இருவரும் அறிமுகமான தோழர்கள்தான். ஒருவர் ஒரு தொழிற்சங்க பொறுப்பாளர், மற்றொருவர் அந்த சங்கத்தின் உறுப்பினர். இருவரும் எனது முன் இருக்கையில் அமர்ந்தார்கள், ஆனால் என்னை கவனிக்கவில்லை. அவர்களின் பேச்சு அரசியலில் நுழைந்தது.

மோடி பிரதமரானால் என்ன தவறு என்று அந்த உறுப்பினர் கேட்க மோடி ஏன் பிரதமர் பதவிக்கு தகுதியில்லை என்று பொறுப்பாளர் விளக்கிக் கொண்டு வந்தார். பொறுப்பாளர் சொன்னதெல்லாம் சரி என்று அவர் ஒப்புக் கொண்டாலும் மோடி வந்தாதான் நல்லது என்று அவர் மீண்டும் சொல்ல அந்த பொறுப்பாளர் கடுப்பாகி ஏன் வரனும்னு நீ ஏன் சொல்ற என்று கேட்க அப்போது பூனைக்குட்டி வெளியே வந்தது.

இல்ல, என் கையில ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் நெறைய கம்பனிங்களோட ஷேர் இருக்கு. மோடி வந்தா அதோட ரேட்டெல்லாம் நல்லா உயரும்னு சொல்றாங்க, ஏதோ கொஞ்சம் காசு பாக்கலாம்கற ஆசைதான் என்று சொல்ல அப்போதுதான் நான் தலையிட்டேன். பங்குச்சந்தை சூதாட்டம் பற்றி அவருக்கு விளக்கி இன்று இந்திய பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு அந்த கம்பெனிகளின் வலிமையின் அடிப்படையிலோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையிலோ அமையாமல் அன்னிய நிறுவன நிதி மூதலீட்டாளர்கள் என்ற சூதாடிகளின், சர்வ தேச நிதி மூலதனத்தின் கையில் உள்ளது. அவர்கள் விரும்பும் போது முதலீடு செய்வார்கள், நினைக்கும் போது போய் விடுவார்கள். அப்படி வெளியேறும் போது உங்கள் பணமும் அவர்களோடு போய் விடும் என்று விளக்கினாலும் “சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசு கொடு” என்று சப்பாணி போலவே அவர் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்குள் திருப்பத்தூரும் வந்து விட  " நாடு நாசமாப் போனாலும் நான் வச்சுருக்கிற ஷேர் விலை ஏறனும் என்று சொல்கிறீகள். நீங்கல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க" என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லி விட்டு பேருந்திலிருந்து இறங்கி விட்டேன்.  

திருப்பத்தூரில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் மனது என்னமோ அந்த விவாதத்தின் மீதே சுழன்று கொண்டிருந்தது. பொதுவாக மத்திய தர வர்க்க ஊழியர்கள் மத்தியில் ஒரு புதிய மனோபாவம் உருவாகிக் கொண்டு வருகிறது. ஓய்வு பெறும் வயது வரை ஈ.எம்.ஐ செலுத்தி ஒரு சொந்த வீடு, பி.எப் லோன், சொசைட்டி லோன் போட்டு ஒரு கார், எந்த காலத்திலாவது பல மடங்கு விலை உயரும் என்ற நம்பிக்கையில் ஊருக்கு வெளியே அத்துவான பொட்டல்காட்டில் வாங்கிப் போட்டுள்ள ஒரு காலி மனை இவையெல்லாம் வந்ததும் தாங்களும் பணக்காரர்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். நாடு, மக்கள், அவர்களது துயரங்கள் இதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற சுயநலம் ஊறிப் போகிறது. இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும் விதி விலக்காக இருக்கின்றனர்.

இந்த சுயநலம் ஊறிப் போனதால்தான் நாடு எக்கேடு கெட்டால் என்ன, தான் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் தலைக்கேறி விடுகிறது. உண்மைகளைச் சொல்லும் இடதுசாரிகள் மீது கோபம் வந்து நக்கலும் நையாண்டியுமாக தங்கள் அதி மேதாவி அறிவுஜீவித் தனத்தை வெளிப்படுத்துகின்றனர். இடதுசாரிகள் நடத்துகின்ற பல்வேறு போராட்டங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலனடைந்த ஆட்களே இப்படி செய்யும் போது தங்களின் லாபவெறிக்கு முட்டுக்கட்டை போடும் இடதுசாரிகளை முதலாளிகள் கூட்டம் வெறுப்பது புதிதல்லவே.

ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளியான மக்களாட்சி படத்தில் ஒரு காட்சி வரும். திடீர் முதல்வரான மம்முட்டியின் கட்சியில் எதிர்கட்சி உறுப்பினரான மன்சூர் அலிகான் காலில் விழுந்து சேர்ந்து கொள்வார். அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி கொடுத்தவுடன் நான் இப்பவே போய் உங்களுக்காக தங்கத்தேர் இழுக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு மன்சூர் அலிகான் போய்விடுவார். இவன் எதுக்கு எனக்காக தங்கத்தேர் இழுக்கறான் என்று மம்முட்டி ஆர்.சுந்தராஜனிடம் கேட்க “ அவன் உனக்காக இழுக்கல. அந்த தங்கத்தேர் மீது அவனுக்கு ரொம்ப நாளா கண்ணு. அதை அப்படியே அவன் வீட்டுக்கு இழுத்துட்டு போய்டுவான்” என்பார் அவர்.

அது போல 2004 மக்களவைத் தேர்தல் முடிந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த கட்சியில் எனக்கு கப்பல் வேண்டும், டெலிபோன் வேண்டும், மருந்து வேண்டும், ரயில் வேண்டும் என்று பசையுள்ள அமைச்சகங்களுக்காக முட்டி மோதிக் கொண்டிருந்த போது அந்த அமைச்சரவைக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த இடதுசாரிகள் வேறு பல நிபந்தனைகளை விதித்தார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது.
கிராமப்புற வேலை உத்தரவாதச்சட்டம் கொண்டு வர வேண்டும்,
மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
தகவல் அறியும் சட்டம் வேண்டும்,
இன்சூரன்ஸ், வங்கி போன்றவை பொதுத்துறையில் நீடிக்க வேண்டும்.
அன்னிய மூலதனம் வந்து செல்ல கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்த உற்பத்தியில் கல்விக்கு ஆறு சதவிகிதமும் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒப்புக்கொண்டு அரசு தனது கொள்கைப் பிரகடனமான தேசிய குறைந்த பட்ச பொதுத்திட்டத்தில் அறிவித்தது.

இவையெல்லாம் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் அல்லவா? அதனால் முதலாளிகளுக்கு கிலி ஏற்பட்டது. அதே போல சர்வதேச நிதி மூலதனத்திற்கும் பொதுத்துறை பங்கு விற்பனை என்பது எரிச்சலை ஊட்டியது. வாஜ்பாய் அமைச்சரவையில் அருண் ஷோரி புண்ணியத்தில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களாயிற்றே! பொறுப்பார்களா? பங்குச்சந்தையில் போட்டிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க சென்செக்ஸ் வீழ்ந்தது. கறுப்பு வியாழக்கிழமை என்று முதலாளித்துவ ஊதுகுழல்கள் அலறின. என்ன இழவிற்கு இந்த தேசிய குறைந்தபட்ச பொதுத்திட்டமெல்லாம், காங்கிரஸும் பாஜகவும் சேர்ந்து அரசு அமையுங்கள் என்று முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்த ராகுல் பஜாஜ் ஓலமிட்டதை மறந்து விட்டீர்களா?

அப்போதிலிருந்தே இடதுசாரிகளின் வலிமையை குறைப்பதற்கான சதித்திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இடதுசாரிகள் வலிமையாக இருக்கிற மேற்கு வங்கத்தின் மீது வல்லூறுகள் குறி வைத்தது.இந்த சதிகளின் தலைமை பீடம் அமெரிக்கா என்றால் ஆதாரம் கேட்பீர்கள். மேற்கு வங்கத்தில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களுக்கு போர்ட் பவுண்டேஷனும் ராக்பெல்லர் பவுண்டேஷனும் பல கோடிகள் அனுப்பியதை மறந்து விட முடியுமா? அவர்களெல்லாம் இடது முன்னணி அரசுக்கு எதிராக செயல்பட்டதையும் ஒதுக்கி விட முடியுமா?

அதிலும் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்ததும், ஒரு கட்டத்தில் அந்த ஒப்பந்தத்தை கைவிடும் எண்ணத்திற்கே மத்தியரசு வந்ததும் (அணுசக்தி ஒப்பந்தம் மட்டும்தான் வாழ்க்கையில்லை, இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று ஒரு கூட்டத்தில் மன்மோகன்சிங் புலம்பியதும் நினைவில் உள்ளதல்லவா?) இந்த சதிகள் தீவிரமானது.

இந்த இடத்தில் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் போய் விட்டு வருவோம். 

1957 ல் உலகிலேயே முதன் முதலாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் 
கட்சி தலைமையிலான அரசு தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் கேரளாவில் அமைகிறது. நிலச் சீர்திருத்தமும் கல்வித் துறை சீர்திருத்தமும் அமலாகிறது. அதனால் கம்யூனிஸ்ட் அரசு தங்கள் மாநிலத்திலும் வந்தால் நன்றாக இருக்கும் என்ற உணர்வு மக்களிடம் ஏற்பட, அதே நேரம் இந்த உணர்வு பரவுவது நல்லதல்ல என்ற அச்சம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் ஏற்படுகிறது. 

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ களம் இறங்குகிறது. காங்கிரஸ் கட்சி, கிறிஸ்துவ அமைப்புக்கள், நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற ஒரு ஜாதிய அமைப்பு ஆகியவை விமோசன சமரம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் கலவரத்தினை தூண்டுகிறன. கலவரங்கள் நடத்துவதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் (இன்று பல நூறு கோடிகள் மதிப்பு) சி.ஐ.ஏ வழங்குகிறது.

கலவரங்களின் பின்னணியில் முதன் முதலாக 356 பிரிவு பிரயோகப் படுத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அரசை கலைக்கிறார். இதிலே சி.ஐ.ஏ வின் பங்கு என்ன என்பதை கேரள முன்னாள் நிதி அமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் அமெரிக்கா சென்று ஆதாரங்களை திரட்டி அம்பலப்படுத்தினார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மொய்னி ஹானும் ஒரு கட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக சி.ஐ.ஏ வும் பழைய ஆவணங்களை வெளியிட்டு விட்டது. விமோசன சமரத்தை முன்னெடுத்துச் சென்ற கம்யூனிச எதிரி "மன்னாதம் பத்மநாபன்" ஸ்விட்சர்லாந்து நாட்டில் எப்படிப்பட்ட சுகபோகங்களை அனுபவித்தார் என்பதை தோழர் தாமஸ் ஐசக் எழுதிய நூல் விரிவாக சொல்லியிருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனத்தை தோழர்கள் மார்க்ஸும் ஏங்கல்ஸும் வெளியிடும் போது கம்யூனிசம் எனும் பூதம் ஐரோப்பியாவை பிடித்து ஆட்டுகிறது என்றுதான் தொடங்கியிருப்பார்கள். கம்யூனிசம் மீதான அச்சம் அன்று முதல் இன்று வரை இன்னும் நீடிக்கிறது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அரசின் கொள்கைகளை தீர்மானிக்கிற இடத்தில் இடதுசாரிகள் இருந்ததும், முதலாளிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாறுவதை தடுக்கும் காவல் அரணாக அவர்களின் வலிமை இருந்ததும், இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் மதிக்க வேண்டும் என்று சொல்வது, இவை எல்லாவற்றையும் விட இந்தியாவை அடிமைப்படுத்தும் அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் தடுப்பது இவையெல்லாம் எரிச்சலை ஊட்டியது.

இடதுசாரிகள் வலிமையாக இருக்கிற, அவர்களுக்கு மக்களவையில் ஏராளமான உறுப்பினர்களை அளிக்கிற மேற்கு வங்கத்தில் அவர்களை பல்வீனப்படுத்த முடியுமா என்று முயன்றார்கள், தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். இது பற்றிய ஆதாரங்களும் எதிர்காலத்தில் நிச்சயம் வரும். ஊடகங்கள் சொன்னதை நம்பி இடதுசாரிகள் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்கள் அப்போது வெட்கி தலை குனிந்து நாணுவார்கள்.

கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பார்கள். 

நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பாரதி சொன்னபடி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது, ஆனால் தர்மம் மறுபடி வெல்லும், பீமன் கதையாக, அர்ஜுனன் வில்லாக இந்த தேசத்தை உண்மையிலே நேசிக்கிற மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சிகளை வந்தடையும். 

சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிற பீனீக்ஸ் பறவையாக இடதுசாரிகள் இத்தேர்தலில் தங்களின் வலிமையை நிரூபிப்பார்கள். 

ஆனால் தங்கத்தேரை தன் வீட்டிற்கு இழுத்துச் செல்கிற அரசியல் கட்சி தலைவர்கள் போல இல்லாமல் இந்த தேசத்தின் சொத்துக்கள் இத்தேசத்து மக்கள் அனைவரையும் சென்றடைய பாடுபடுவார்கள்.

இடதுசாரிகள் முன் வைக்கும் முழக்கங்கள் என்ன ? - நாளை.



 
 

4 comments:

  1. கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பவர்கள்.

    தோழரே நான் நிச்சயம் இடதுசாரிகளை வெறுப்பவன் இல்லை மாறாக அவ்வியக்கங்களின் கொள்கை மேல் கொண்ட பற்று, அக்கறை, காரணமாக அல்லது அந்த இயக்கத்தின் மேல் இருக்கும் விட்டகுறை தொட்டகுறையான காதலின் காரணமாகத்தான் கேட்கிறேன். இன்று உள்ள சூழலில் வெற்றி தோல்வி பற்றிய கவலை இன்றி வேலூர் தொகுதியில் வாய்ப்பிருக்கிற (அ) விருப்பப்படுகிற தோழர் ஒருவரை களம் இறக்கினால் என்ன?
    நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

    பாரதி சொன்னபடி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது, ஆனால் தர்மம் மறுபடி வெல்லும், பீமன் கதையாக, அர்ஜுனன் வில்லாக இந்த தேசத்தை உண்மையிலே நேசிக்கிற மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சிகளை வந்தடையும்.

    சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிற பீனீக்ஸ் பறவையாக இடதுசாரிகள் இத்தேர்தலில் தங்களின் வலிமையை நிரூபிப்பார்கள்.

    இந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது உஙளுக்கு?!

    நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. Thambi, 18lla one jeyicha kooda ethelam correct nnu yethukiren...

    ReplyDelete
  3. //கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பார்கள்.

    நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

    நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்//

    ரோஷமே இல்லாத அனானி, இவர்களில் நீ யார்?.

    ReplyDelete
  4. நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

    இடதுசாரிகள் வேறு பல நிபந்தனைகளை விதித்தார்கள்.

    பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது.
    கிராமப்புற வேலை உத்தரவாதச்சட்டம் கொண்டு வர வேண்டும்,
    மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
    தகவல் அறியும் சட்டம் வேண்டும்,
    இன்சூரன்ஸ், வங்கி போன்றவை பொதுத்துறையில் நீடிக்க வேண்டும்.
    அன்னிய மூலதனம் வந்து செல்ல கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
    சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும்.
    ஒட்டு மொத்த உற்பத்தியில் கல்விக்கு ஆறு சதவிகிதமும் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும்.
    Please answer my simple question-- I feel that my vote will become waste if i vote for left IN THIS ELCTION,, as, i do not believe Phoenix bird theory.But at the same time if i vote for DMK i feel that my vote will be useful at least in defeating communal forces.

    ReplyDelete