Tuesday, March 25, 2014

“உள்ளே – வெளியே” ஆட்டம் இனியும் முடியுமா?வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் விதத்திலும் மக்களுடைய வாங்கும் சக்தி அதிகரிக்கக் கூடிய விதத்திலும் வளர்ச்சி அமைவது உறுதி செய்யப்படும். வளர்ச்சியும் முன்னேற்றமும் மக்கள் சார்ந்ததாக இருந்திடும்.

இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் முன் வைக்கிற அடிப்படை முழக்கம். வளர்ச்சி என்பதை மற்றவர்கள் கூட சொல்கிறார்கள். ஆனால் அந்த வளர்ச்சி யாருக்காக என்பதில்தான் மற்ற முதலாளித்துவ கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அடிப்படை மாறுபாடு உள்ளது.

முதலாளிகளுக்காக முதலாளிகளால் நடத்தப்படுகிற முதலாளிகளின் அரசாகத்தான் பத்து வருட மன்மோகன்சிங் அரசும் இருந்திருக்கிறது. எழுபத்தி மூன்று மாதம், பதிமூன்று நாட்களை மூன்று முறையாக கழித்த வாஜ்பாயின் அரசும் இருந்திருக்கிறது. துன்பத்தில் உழலும் இந்தியாவை உருவாக்கிக் கொண்டே ஒளிரும் இந்தியா என்ற முழக்கத்தை சொல்ல இரு அரசுகளும் வெட்கமே பட்டது கிடையாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை தயவு செய்து இதன் இணையதளமான www.cpim.org சென்று படித்துப் பாருங்கள். ஒவ்வொரு அம்சத்திலும் நாட்டிற்கும் மக்களுக்கும் எது அவசியம் என்பதை அலசி தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்ல்ப்பட்டுள்ளது என்ன என்பதை இன்று சுருக்கமாக பார்ப்போம்.

நிதி மூலதனம் உள்ளே வருவது, வெளியே செல்வது ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மொரீஷியஸ் பாதை வழியாக நிதியை உள்ளே கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும். வருவாயைப் பெருக்க வரி விதிப்பிற்கான அடித்தளம் விரிவாக்கப் படும். முதலீட்டு ஈட்டு வரி (Capital Gains Tax),   பங்கு பரிமாற்ற வரி (Security Transactions Tax)  ஆகியவை மீண்டும் கொண்டு வரப்படும்.

பெரும் செல்வந்தர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும்.

நிறுவன வரி உயர்த்தப்பட்டு கறாராக வசூலிக்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இந்திய நிறுவனங்களை விற்றாலோ அல்லது பங்குகளை விற்றாலோ அது அயல் நாட்டில் நிகழ்ந்தால் கூட அதற்கு வரி விதிக்கப்படும்

ஸ்விட்சர்லாந்திலும் மற்ற நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் வெளியே கொண்டு வரப்படும்.

விற்பனை வரியில் கூடுதல் பங்கு மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.

வங்கித்துறை பொறுத்தவரை தனியார் தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க லைசன்ஸ் வழங்கப்படாது.

அன்னிய வங்கிகள் இந்திய வங்கித்துறையை மேலாதிக்கம் செய்ய வழி வகுக்கும் வங்கிகள் கட்டுப்பாட்டு மசோதா 2012 நீக்கப்படும்,

இந்திய வங்கிகளை அன்னிய வங்கிகள் வாங்க அனுமதிக்கப்படாது.

வங்கிகளில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள், செல்வந்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாராக் கடன்கள்  கறாராக வசூலிக்கப்படும்.

முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவது என்ற பொறுப்பு அமலாக்கப்படும்.

பென்ஷன் துறையில் தனியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு பலப் படுத்தப்படும்.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தும் முடிவு கைவிடப்படும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தடையாக இருக்கிற சட்டமான Fiscal Responsibility Budget Management Act  நீக்கப்படும்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் தப்பித்ததற்கு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் காரணம். அன்னிய மூலதன சுழற்சியை கட்டுப்படுத்தும் திறனோ சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இல்லாததால் பங்குச்சந்தையில் சரிவை சந்திக்க நேரிட்டது.

சர்வ தேச நிதி மூலதனம் “உள்ளே வெளியே” சூதாட்டம் விளையாடும் மைதானமாக இந்தியாவை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள அத்தனை அம்சங்களுமே இந்தியாவின் பொருளாதாரத்தை உண்மையிலேயே முன்னேற்றும்.

தொழில் – வெளியுறவு – விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது – நாளை பார்ப்போம்.

No comments:

Post a Comment