Friday, March 28, 2014

வாழ்த்துக்கள் கவாஸ்கர், ஜாக்கிரதையா இருங்க

 http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ed/Sunny_Gavaskar_Sahara.jpg

வாழ்த்துக்கள் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக
பொறுப்பெடுக்கப் போகின்றீர்கள். லாபியிங்க், கேம்ப்ளிங்க் போன்ற
எந்த சித்து வேலைகளும் இல்லாமல் உச்ச நீதி மன்றம் உங்கள் மீது
வைத்துள்ள நம்பிக்கை உங்கள் கையில் இந்த பொறுப்பை அளித்துள்ளது.

கட்டுக்கடங்காத முரட்டுக் குதிரையாக தறி கெட்டுத் திரிந்த இந்திய
கிரிக்கெட் வாரியத்திற்கு முதல் முறையாக உச்ச நீதி மன்றம் 
கடிவாளம் போட்டிருக்கிறது.

உங்களது பணி சாதாரணமானது அல்ல என்பது உங்களுக்கே மிக
நன்றாகத் தெரியும். இந்திய அரசியலை விட மிக மோசமாக கறைபட்டு
களங்கப்பட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட். ஊழல் பேர்வழிகள்,
சூதாடிகள், கார்ப்பரேட் முதலைகளின் சொர்க்க பூமியாக இந்திய
கிரிக்கெட் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

நீங்கள் களத்தில் சந்திக்கப் போவது சாதாரண ஆட்கள் கிடையாது.
மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், இயான் போத்தம், இம்ரான் கான்
ஆகியோரை மைதானத்தில் சந்தித்தது போல அவ்வளவு சுலபமான
சவால் அல்ல.

ஸ்ரீனிவாசன், ஜக்மோகன் டால்மியா, லலித் மோடி போன்ற ஊழல்
பெருச்சாளிகளோடு இந்திய கிரிக்கெட்டை கைப்பற்ற அருண் ஜேட்லி,
லாலு பிரசாத் போன்ற அரசியல் பெருச்சாளிகளும் மோதும் 
இடம் இது.

நிதானமான ஆட்டத்திற்கு பெயர் போனவர் நீங்கள். முடிவுகள்
எடுப்பதில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் பாணியிலே
இருக்கட்டும். ஆனால் அமலாக்குவதில் உங்களுக்கு பிடிக்காத
கபில் தேவின் வேகத்தை காண்பிக்காவிட்டால் உங்களை
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ஆக்டோபஸ்கள் 
விழுங்கி விடும்.

உங்கள் பதவிக்காலத்தில் கிரிக்கெட்டை கனவான்களின் 
ஆட்டமாக மாற்றாவிட்டாலும் சரி, குறைந்த பட்சம் சூதாடிகள்,
பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்தாவது 
காப்பாற்றுங்கள்.

கோடிக்கணக்கில் வாரியத்தின் கஜானாவில் குவிந்துள்ள
பணத்தை கிரிக்கெட்டை மட்டும் மேம்படுத்த பயன்படுத்தாமல்
மற்ற விளையாட்டுக்களை முன்னேற்றவும் செலவிடுங்கள்.

ஒளிரும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று
இந்தியா இரண்டாக பிளவு பட்டிருப்பது போல இந்திய 
விளையாட்டுத் துறையும் வலிமையான கிரிக்கெட், வறுமையான
இதர விளையாட்டுக்கள் என்று இரண்டாக பிளவு பட்டுள்ளது.

அதை மாற்ற உங்கள் பதவி பயன்படட்டும். உங்களுக்கு
பாரத ரத்னா தரச்சொல்லி நானே பரிந்துரைப்பேன்.

மீண்டும் வாழ்த்துக்கள் கவாஸ்கர், கிரிக்கெட் வாரியத்திற்கு
உங்கள் மூலமாகவாவது பெருமை சேரட்டும்.
 

1 comment: