தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பு
தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் “சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை என்றுமே தி.மு.க ஆதரித்ததில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார்.
இவர் போகிற ஊரில் எல்லாம் இனிமேல் ஒரு சூடத்தை ஏற்றிவைத்து கையால் அடித்து சத்தியம் செய்வார் போலிருக்கிறது. ஒரு படத்தில் வடிவேல் வாய்க்குள் சூடத்தை ஒருவர் தட்டிவிட்டவுடன் வெந்துபோய் காதுகளில் எல்லாம் புகைவரும். அதுபோன்றுதான் ஸ்டாலினின் நகைச்சுவைக்கும் தூத்துக்குடி சில்லரை வியாபாரிகள் சிரித்திருப்பார்கள்.
சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டிற்கு முதலில் பி.ஜே.பி யோடு கைகோர்த்து ரோடு போட்டவர்களே தி.மு.க காரர்கள்தான். முரசொலி மாறன் மத்திய வர்த்தக அமைச்சராக வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான குறிப்பை மாறன் முன்வைத்து அது ஏற்றுக் கொள்ளவும்பட்டது.
ஆனால் இடதுசாரிகள் மற்றும் சிறுவணிகர்களின் கடும் எதிர்ப்பால் அமலாக்கப்படவில்லை. அப்போது பி.ஜே.பியின் மூத்த அமைச்சர் “ பெப்சி , கொக்க கோலா வந்தாலும் பெட்டிக்கடை சர்பத் காணாமலா போய்விட்டது? “என்று கேலி பேசினார். இப்படி பி.ஜே.பி வால்மார்டிற்கு வால்பிடித்தபோது சேர்ந்து ஒரு கை கொடுத்தது திமுக.
மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் காங்கிரசுக்கு ஆதரவாக சில்லரை வணிகப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் கைதூக்கியதாக தூத்துக்குடியில் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்டாலின் அவர்களே! நீங்கள் 1999-2004 காலத்தில் மதவாதத்திற்கு ஒரு கை.. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு இன்னொரு கை.. என்று தூக்கியதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?இடதுசாரிகள் ஆதரவோடு மத்திய ஆட்சி இருந்தபோது ஒரு தடவையாவது இடதுசாரிகள் அந்நிய முதலீடு, தனியார்மயம் போன்ற பிரச்சனைகளில் சமரசம் செய்ததுண்டா? சோதனை வந்த காலத்தில் யார் உறுதியாக அவர்கள் பக்கம் நின்றார்கள் என்பது சிறு வியாபாரிகளுக்கு தெரியும்.
ஸ்டாலின் அவர்களே! ஊருக்கு ஏற்றாற்போல் எழுதிவைத்து பொய் சொல்லும் உங்களைப் பார்த்து சிறுவியாபாரிகள் சிரிக்கிறார்கள். தொண்டையில் உள்ள சூடத்தை வெளியே துப்பிவிடுங்கள். சுட்டுவிடப்போகிறது.- க.சுவாமிநாதன்
100000000000000000000000000000000000000000000000% TRUE.
ReplyDelete