Saturday, March 15, 2014

குஜராத் கோயபல்ஸ்கள்



ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் தகவல்துறை அமைச்சராக இருந்த கோயபல்ஸ் கடைபிடித்த தாரக மந்திரம் “ ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகி விடும்”. அப்படித்தான் அவன் ஹிட்லரைப் பற்றி மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான். சோவியத் யூனியனின் செஞ்சேனையிடம் ஹிட்லரின் நாஜிப்படைகள் வீழ்ந்து கொண்டிருந்த போது கூட ஜெர்மானிய வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள், ரஷ்யாவை வீழ்த்தி விட்டார்கள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தான்.

செஞ்சேனை பெர்லினைக் கைப்பற்றி ஹிட்லரின் மாளிகையை நெருங்கும் போது கூட கோயபல்ஸ் கதை விடுவது நிற்கவில்லை. இறுதியாக சோவியத் யூனியனின் செஞ்சேனை ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைத்த போது ஹிட்லரும் அவன் ஆசை நாயகியும் மட்டும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கோயபல்ஸும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.

ஹிட்லர் இறந்து விட்டான், கோயபல்ஸ் இறந்து விட்டான். ஆனால் அவர்கள் உருவாக்கிய கீழ்த்தரமான பிரச்சார உத்தி மடிந்து விடவில்லை. சங் பரிவாரக் கும்பலின் ஆதர்ஸ நாயகன் ஹிட்லர் என்பதால் அவனுடைய பொய் சொல்லும் கலையை இவர்கள் ஸ்வீகரித்துக் கொண்டுள்ளனர். 

"ஒளிரும் இந்தியா" என்று ஒரு மாயப் பிரச்சாரம் செய்து அது எடுபடாமல் போன அனுபவம் இருந்தும் கூட இப்போதும் அது போன்ற, ஏன் அதையும் விட இன்னும் மோசமான ஒரு பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட வேண்டிய அவசியம் என்ன? 

குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொடூரமாக கொல்லப் பட்டனர். மோடிக்கு அரசியல் நெருக்கடி வந்த நேரத்தில் எல்லாம் “அவரது உயிருக்கு ஆபத்து” என்று கதை கட்டி போலி எண்கவுண்டர் கொலைகள் நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் நண்பராக இருந்த ஹிரேண் பாண்டியா கொல்லப்பட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் முகாம்களியே உள்ளனர். அவர்கள் வீடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை கிடையாது. இப்படி நரேந்திர மோடி மீது படிந்துள்ள ரத்தக்கறையை எத்தனை பாக்கெட் சர்ப் போட்டாலும் நீக்க முடியாது என்பதால் அவரை ஒரு உன்னதமான மனிதனாக சித்தரிக்க நவீன கோயபல்ஸ்கள் கையில் எடுத்த ஒரு ஆயுதம் “குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது”. அதை தொடர்ந்து  பேசி வந்ததால் அவர்களுமே அதை உண்மை என்று நம்பத் தொடங்கி விட்ட பரிதாப நிலையை பார்க்க முடிகிறது. அந்த மயக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியுமா என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதை பார்ப்பதற்கு முன்பு வளர்ச்சி என்றால் என்ன என்று பார்ப்பது முக்கியம்.

பளபளக்கும் சாலைகளும் கண்ணாடி மாளிகைகளும் அதிகரிப்பதும் பங்குச்சந்தை குறியீட்டு எண் உயர்வதும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வதும் மட்டும்தான் வளர்ச்சியா?

ஒரு தேசத்தின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதார நிலையில் ஏற்படும் முன்னேற்றமும் அந்த முன்னேற்றம் அந்த தேசத்தின் அல்லது மாநிலத்தின் மக்கள் அனைவரையும் சென்று சேர்வதுதான். மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் வளர்ச்சி என்பது அர்த்தமுள்ள ஒரு வார்த்தையாக இருக்கும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மக்களின் வாங்கும் சக்தி உயர்வதுதான் வளர்ச்சி என்று சொல்ல முடியும். வாங்கும் சக்தி உயர வேண்டும் என்றால் வேலைவாய்ப்புக்கள் உயர்வது என்பது முக்கியம். இவையெல்லாம் மட்டுமே வளர்ச்சியின் குறியீடுகள்.

அந்த அடிப்படையில் குஜராத் ஒரு வளர்ச்சியடைந்த மாநிலமா? அவர் ஒரு திறமையான நிர்வாகியா?

மோடி ஆதரவாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிற ஒரு வாதத்தின் உண்மை நிலையைப் பார்ப்போம்.

எண்ணற்ற தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு பல லட்சம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளது. மோடி இதுவரை 8300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போட்டுள்ளார். அதன் படி இருபது லட்சம் கோடி ரூபாய் அங்கே முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வந்தது 250 தொழிற்சாலைகள் மற்றும் 29,813 கோடி ரூபாய் மட்டுமே. முன்பெல்லாம் கலைஞர் டி.வியில் தினம் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கலைஞர் உருவாக்கினார் என்று காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தொழிற்சாலைகள் வந்ததாகவோ, திறந்து வைக்கப்பட்டதாகவோ காண்பித்ததே கிடையாது. ஏனென்றால் அந்த காட்சியோடு அந்த கதை முடிந்து போய் விடும்.

குஜராத்திலும் அதே கதைதான். தொழிற்சாலைகள் வந்து கொண்டே இருந்தால் வேலைவாய்ப்புக்கள் பெருகி இருக்க வேண்டுமே? கடந்த பனிரெண்டு வருடங்களில் குஜராத்தில் வேலை வாய்ப்பு சதவிகிதம் எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். வெறும் பூஜ்ஜியம் சதவிகிதம்தான். அப்படியென்றால் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகவில்லை என்று அர்த்தம். புதிய வேலைகள் உருவாகியிருந்தால் அதற்கு இணையாக வேலையிழப்புக்களும் உள்ளது என்று அர்த்தம். இது குஜராத்திற்கு மட்டுமான பிரச்சினையும் இல்லை. வேலை வாய்ப்பில்லாத வளர்ச்சியைத்தான் உலகமயம் உருவாக்கியுள்ளது.

ஊதியங்களின் நிலை என்ன?

நகர்ப்புறங்களில் தினக்கூலி பெறுகிற ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் கேரளாவில் 218 ரூபாய். ஆனால் குஜராத்தில் 106 ரூபாய் மட்டுமே. அதே போல கிராமப்புறங்களில் 152 ரூபாய் என்றால் குஜராத்தில் 83 ரூபாய் மட்டுமே.

திறமையான நிர்வாகி, ஏழை மக்களை உய்விக்க வந்த “விகாஸ் புருஷ்” வளர்ச்சி நாயகனின் ஆட்சியைப்பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுனிசெப் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா?

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம் ஊட்டச்சத்து குறைவாகவும் நான்கில் மூன்று குழந்தைகள் ரத்த சோகை உடையதாக உள்ளன. குழந்தைத் திருமணங்களில் உச்சத்தில் உள்ள மாநிலமும் இதுதான்.

மக்கட்தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள் உள்ளதா என்று இந்திய அளவில் பட்டியல் போட்டால் அதற்கு 12 வது இடம்தான் கிடைக்கிறது. 45 % குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. சாலை வசதிகள் என்று பார்த்தாலும் கூட இன்னும் தார் சாலையோ, சிமெண்ட் சாலையோ எட்டிப்பார்க்காத கிராமங்களின் எண்ணிக்கை அதிகம். 30 % கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி கிடையாது.

மின் மிகை மாநிலம் என்று பீற்றிக் கொள்ளப்படுகிறது. ஆனால் மக்கட்தொகை அடிப்படையில் வீடுகளுக்கு மின்சார வசதி தரப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசையில் பதினாறாவது இடத்தில்தான் குஜராத் உள்ளது. அப்படியென்றால் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்றுதானே அர்த்தம்?

கிராமப்புற வீடுகளில் 67 % வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. 65 % கிராமப்புற மக்கள் திறந்த வெளியையே தங்களின் கழிவறைத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிவுகளை அகற்ற எந்த எற்பாடும் கிடையாததால் மண்ணும் தண்ணீரும் மாசு பட்டுப் போகிறது.

இதிலே இன்னொன்றும் சொல்ல வேண்டும். சட்டம் இருந்தாலும் கூட மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் கொடுமை தொடரும் மாநிலம் குஜராத். நீங்கள் எல்லாம் கடவுளுக்கு சேவை செய்பவர்கள், உங்களுக்கு சொர்க்கம் கியாரண்டி என்று சொன்னதோடு மோடியின் பணி முடிந்து போய் விட்டது.

ஆனால் முதலிடமும் உண்டு. இவரது திறமையான நிர்வாகத்தால்தான் இந்தியாவிலேயே மிக அதிகமாக மாசுபடிந்த எண்பத்தி எட்டு மையங்களில் எட்டு மையங்கள் இவரது மாநிலத்தில் உள்ளது. அதிலே முதல் இரண்டு இடங்கள் அங்கலேஷ்வர் மற்றும் வாபி.

இவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம், நீதி பரிபாலனம் எப்படி உள்ளது என்பதற்கு குஜராத் கலவரமே போதுமானது என்றாலும் இன்னும் சில விபரங்கள் உள்ளது. வரதட்சணை கொலைகளில் பூஜ்ஜியம் சதவிகிதத்தில்தான் தண்டனை கிடைத்துள்ளது. பெண்கள் மீதான இதர தாக்குதல்களில் 1.6 % குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. தேசிய அளவில் இது 23.5 % ஆகும். குஜராத் மாநில காவல்துறை வழக்குகளை நடத்தும் லட்சணத்திற்கு இதுதான் சான்று. இதுதான் இவரின் நிர்வாகத்திறன்.

பள்ளிப் படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும் 55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886 பெண்கள்தான். இதிலும் 50 % பெண்கள் ஊட்டச்சத்து குறைவானவர்களாக உள்ளார்கள். இதைத்தான் அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதே இல்லை என்று இரக்கமே இல்லாமல் மோடி சொல்கிறார்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் சதவிகிதம் 31.8 % என்று சுரேஷ் டெண்டுல்கர் அறிக்கை சொல்கிறது. இதுவே திட்டக்கமிஷன் அபத்தமாக நிர்ணயித்துள்ள அளவின்படி என்றால் உண்மையில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

ஆக இவ்வளவு ஓட்டை உடைசலை வைத்துக் கொண்டு குஜராத் மாதிரி வளர்ச்சி அடைந்த மாநிலம் உண்டா என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். நான் சொல்லியுள்ள எதுவும் கற்பனையிலோ காழ்ப்புணர்ச்சியிலோ எழுதப்பட்டது அல்ல. பல்வேறு அரசு புள்ளி விபரங்களின் அடிப்படையில்தான்.

மற்ற மாநிலங்களின் நிலைமை இதை விட மோசம் என்று சிலர் சீறிக் கொண்டு வருவார்கள். ஆம் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அப்படி மோசமாக இருக்கிற மாநிலங்களின் முதல்வர்கள் யாரும் தங்களை தாங்களே வளர்ச்சி நாயகன் என்று அழைத்துக் கொள்வதும் இல்லை. அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க கோடிக்கணக்கில் செலவழிப்பதும் இல்லை.

ஊழல்களைப் பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். அதற்கு இதுநாள் வரை மோடி வகையறாக்களால் உருப்படியான பதில் எதையும் தர முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

நேர்மையானவர் அவர் என்று சொல்லப்பட்டது. தன் திருமணத்தை மறைத்து தான் ஒரு பிரம்மச்சாரி என்று பொது வெளியில் சொல்லிக் கொள்வதுதான் நேர்மையாளரின் செயலா?

இந்தியாவில் உள்ள எல்லா பிரச்சினைகளும் குஜராத்திலும் இருக்கிறது. அதை மூடி மறைத்து அங்கே பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக கதைப்பது கீழ்த்தரமான உத்தி. பால் வளம் பெருகியுள்ளது என்பது கூட உண்மை. ஆனால் அதை சாதித்தது அமுல் எனும் கூட்டுறவை அமைப்பை உருவாக்கி வெள்ளைப் புரட்சி செய்த வர்கீஸ் குரியன் என்ற மகத்தான மனிதரே தவிர மோடி அல்ல.

உள்ளே கிழிசல்கள் இருந்த போதும் பளபளக்கும் ஜரிகையை மேலே காட்டி பட்டுத்துணி போர்த்தி பட்டாக்கத்தியை மறைத்து வருகிறார்கள். தங்களை வெட்டத்தான் வருகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல் சில அப்பாவி ஆடுகள் ஜரிகையின் மினுமினுப்பில் ஒரு பரவச மயக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

மோடி எனும் நயவஞ்சக வேடன் விரிக்கும் மாய வலையில் அந்த அப்பாவி ஆடுகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இதை மீண்டும் மீண்டும் எழுதுவேன். எழுதிக் கொண்டே இருப்பேன்.

கோயபல்ஸ்களின் பொய்கள் என்றும் வெற்றி பெற்றதில்லை என்பதுதான் வரலாறு. குஜராத் கோயபல்ஸ்களின் கதியும் மாறாக இருக்கப்போவதில்லை.

3 comments:

  1. சார் குஜராத்தை மாநிலங்களோடு ஒப்பீடு செய்த நீங்க ஏன் தமிழகத்தோடு ஒப்பிடவில்லை என்பது தான் புரியவில்லை. குஜராத்தில் பாலாரும் தேனாறும் ஓடவில்லை, சரி தமிழகத்தில் என்ன ஆறு ஓடுகிறது? சாராய ஆறு!! சாரயத்தையே நம்பி அரசு நடத்தும் உமது மாநிலத்தை விட தைரியமாக மதுவிலக்கை அமுல் படுத்தி நடத்தும் அரசு மெச்சத் தக்கதே.

    மஞ்சள்துண்டு இலவசம்......இலவசம்....... என்று வாரியிறைத்து ஒட்டு வாங்கியதைப் பார்த்த காங்கிரஸ் காரன் குஜராத் தேர்தலில் நானும் இலவசம் தருகிறேன் என்று கதை விட்டான். அதை புறந்தள்ளி விட்டு அவர்கள் மோடியையே தேர்ந்தெடுத்தார்கள்.

    மின்சாரம் இலவசமாக்குவோம் என காங்கிரஸ் காரன் சொல்ல, கட்டாத மின்பாக்கியை வசூலிப்பேன் என்று தைரியம் யாருக்கு வரும்?

    பால் வளம் அமுல் நிறுவனத்தால் என்கிறீர்கள், அதே தமிழகமாய் இருந்திருந்தால் அந்த நிறுவனத்தையே மிரட்டி வாங்கி மாடுகளை கேரளாவுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தை சாராய ஆலையாக்கியிருப்பார்கள். இருக்கும் வளத்தை நாசப் படுத்தாமல் இருப்பதே பெரிய சேவைதான்.

    குஜராத்தைப் பொருத்தவரை அந்த மாநில மக்கள் தீர்ப்பு மோடி ஏற்கத் தக்கத் தலைவர். மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். உமது தமிழகத்தில் நிலை என்ன? மஞ்சள் துண்டு கொடுமை, சரி ஆத்தாவுக்கு ஒட்டு போடு, அது மேலும் கொடுமை, மீண்டும் மஞ்சள் துண்டு.....கொடுமையிலும் கொடுமை, சரி ஆத்தா......... ஐயோ தாங்க முடியலை. இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு மோடி அரசை நீர் குறை சொல்வது நியாயமா?

    ReplyDelete
  2. எல்லா பிளான்களையும் சிதம்பரம் முடக்கிவிட்டாராமே.. இதை பற்றி ஏதாவது பதிவு எழுதியிருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. தோழரே, தற்போது வேலூர் தொகுதியின் விலை(யி)(மதிப்பி)ல்லா வாக்காளர் நான். என் வாக்கை யாருக்கு செலுத்த வேண்டும்.?. யாருக்கு செலுத்த வேண்டாம்.?. தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete