Sunday, March 16, 2014

நீ என்னை அழித்தாலும் உனக்காகவும் நான்........

 கருத்துச் சுதந்திரம் குறித்து தீக்கதிர் நாளிதழில் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் இன்று எழுதிய ஒரு அர்த்தமிக்க
கட்டுரை. ஆனால் ஏற்கனவே விலை போய் விட்ட சில
ஊடக முதலாளிகள் இந்த உண்மைகளை எல்லாம்
புரிந்து கொண்டு பொறுப்புணர்வோடு செயல்படுவார்களா
என்பது சந்தேகமே....

காசாடா முக்கியம்... கூவுறதுதான் முக்கியம்...!
 

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பவர்கள் யாராயினும் ; எச்சூழலில் ஆயினும் ஏற்கவே இயலாது . ஊடகக்காரர்களை மிரட்டும் விதமாக கெஜ்ரிவால் பேசியது குற்றம் குற்றமே .

அதுசரி ! ஊடகக் காரர்கள் நெறிபிறழாமல் செயல்படுகிறார்களா எனக் கேட்டால் ‘ஆம்’ எனச் சொல்ல இயலாது. “கற்பாம் மானமாம்... கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்! காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்” என்கிற கண்ணதாசன் வரிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. 

கருத்துக்கணிப்பும் கருத்துத்திணிப்பும் யார் எவ்வளவு அள்ளித் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே!கார்ப்பரேட் ஊடகங்கள் மோடிக்காக அடிக்கிற கூத்து கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு திரைப்படத்தில் “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் முருகேசன் வாழ்க!” என கோஷம் போடுவதும் .. “அடங்..ஙொய்யாலா என்னமா கூவுறான் பாரு... காசாடா முக்கியம்... கூவுறதுதான் முக்கியம்” என டயலாக் பேசுவதும்; மேலும் கூவ காசு கொடுப்பதும் நடக்கும். அது சும்மா சினிமா காட்சின்னு நினைச்சோம். அதையும் மிஞ்சிடிச்சி மோடி பஜனை. 

ஊடக அறம் அநாதையாய் கதறிக்கொண்டிருக்கிறது.
இந்தப் போக்கை கண்டு ஜனநாயக உள்ளங்கொண்டோர் கவலைப்படுகின்றனர். கண்ணீர் விடுகின்றனர். கண்டிக்கின்றனர் . கெஜ்ரிவாலும் அதோடு நிறுத்தியிருந்தால் யாரும் குற்றம் சொல்ல இயலாது . 

ஆனால் அதற்கும் மேல் ஒருபடி போய் “தண்டிப்பேன் ” என மிரட்டுவது அதீதம் . அராஜகம். ஊடகங்களால் வளர்ந்தவர் ஊடகங்களை மிரட்டுவது வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்றதாகும் .ஆனால் “ஐயகோ! கெஜ்ரிவால் பாசிஸ்ட் ” என பாஜக ஊளையிடுவது “உச்சகட்ட நகைச்சுவை”.

 ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினை விமர்சிப்பவர் என்பதற்காக சன் டிவி வீரபாண்டியன் நிகழ்ச்சியையே முடக்கியவர்கள்; மாற்றுக் கருத்தை சகிக்க முடியாமல் புத்தக வெளியீட்டையே முடக்குபவர்கள்; புகழ்மிக்க ஓவியர் எம்.எப்.உசேனை விரட்டி மனம் நோகடித்துச் சாகடித்தவர்கள்; அறிவியல் உண்மைகளை ஏற்கமறுத்து கருத்துக்கூறுவோரை மிரட்டும் கரசேவகர்கள்; பாசிசம் என்ற சொல்லின் முழுப்பொருளாய் விளங்குபவர்கள்; மற்றவரைப் பார்த்து பாசிஸ்ட் என்பது மெகா காமெடியன்றி வேறென்ன?அரசியல் விமர்சனங்கள் என்பது தேவையானது; ஆரோக்கியமானது. 

அவதூறு என்பது அர்த்தமற்றது ; ஒருவித மனோவியாதி.கேள்விகள் கேட்பது நன்று; அது உண்மையின் முகவரியாகும் .குதர்க்கமாய் கேட்பது உள்நோக்கமானது; மனோவக்கிர வெளிப்பாடு. செய்திகளின் பின்னால் இருக்கும் சூக்குமங்களை மக்களுக்கு அறியச்செய்வது அவசியம் . ஆனால் படியளப்பவர்களைக் குஷிப்படுத்த கயிறு திரிப்பது அநீதியாகும் 

.ஊடக உலகில் இரண்டு வகைக்கும் சான்றுகள் கொட்டிக் கிடக்கிறது.பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பருகும் அன்னப் பறவையாக முடியுமானால் மட்டுமே வாசகன் மெய்யை அறிய இயலும் என்கிற நிலை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடையாளம் அல்ல.

எது எப்படியிருப்பினும் என் கருத்தை கடுமையாக எதிர்க்கிறவன் ஆயினும் அவனுக்கும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இறுதிவரை போராடுவேன் என வால்டேர் கூறியதை எப்போதும் உரக்கச் சொல்வோம். அதன் வழி உறுதியாய்ச் செல்வோம். அதே நேரம் அவனுக்குப் பொய் சொல்ல உரிமை உண்டெனில் அந்தப் பொய்யை எதிர்த்துப் போராட எமக்கு உரிமை உண்டுதானே!- சு.பொ.அ.

2 comments:

  1. Thambi ezhuthi vechukko 22 yedamum deposit gali.... Cummunist aa Partha kavalaiya erukku...

    ReplyDelete
  2. எலே புத்தி கெட்ட அனானி, ஓவர் மப்பா? நாங்க நிக்கறதே 18 சீட்டுதான். உன் உடம்ப பார்த்துக்க, முகத்தை மூடிக்கிட்டே வேற வீட்டுக்கு போய் அடி வாங்கிடப் போற! உன்னை பார்த்தாதான் கவலையா இருக்கு

    ReplyDelete