Monday, March 17, 2014

நாங்கள் அளித்தோம், அவர்கள் பறிக்கிறார்கள்



மோடி பஜனை பாடுபவர்கள் அவர்களுடைய பொய்ப்பிரச்சாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவ்வப்போது மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சி மீதும் சேற்றை வாரி வீசுவார்கள். முதலாளிகளின் கல்லாப்பெட்டிகள் நிறைவதை மட்டுமே வளர்ச்சி என்று கருதும் பல அறிவுஜீவிகளுக்கு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இடது முன்னணி அரசு எடுத்த நடவடிக்கைகள் கண்ணுக்கு தெரியாமல் போவதில் வியப்பில்லை.

1972 முதல் 1977 வரை மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போதைய மம்தா ஆட்சியைப் போலவே ஒரு அரைப் பாசிச ஆட்சியையே நடத்தியது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விவசாயமும் தொழில் வளமும் இல்லாமல் மின்சாரமே அரிதாகிப் போன மாநிலமாகவே மேற்கு வங்க மாநிலம் இருந்தது.

அதிகாரங்களையும் நிதியையும் தன் கையிலே குவித்து வைத்துள்ள மத்திய அரசாங்கம் முறைத்துக் கொண்டு நிற்கிற போது ஒரு மாநில அரசின் பணிகள் என்பது சிரமமானது. சவாலானது. ஆனால் அந்த சவாலை எதிர் கொண்டது இடது முன்னணி ஆட்சி.

பானர்ஜி, சட்டர்ஜி, பட்டாச்சார்ஜி உண்டு ஆனால் எனர்ஜி மட்டும் கிடையாது என்று ஜோக்கடிக்கும் நிலையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாற்றி மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் மாநிலமாக மாற்றிய பெருமை இடது முன்னணி ஆட்சிக்கே உண்டு. இத்தனைக்கும் மேற்கு மாநிலத்திற்கான மின் திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்வோடு ஏராளமான தடைகளை போட்டது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்கள்.

இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர வேறு எந்த ஒரு கட்சியாலும் செய்ய முடியாத மகத்தான சாதனையை செய்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் மூலம் உருவான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் தலைமையிலான கேரள கம்யூனிச ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்தங்களை மேற்கு வங்க அரசு அமலாக்கியது.

இடது முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் முப்பது லட்சத்து நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு பதினோரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களை வினியோகம் செய்துள்ளது. இந்தியாவில் செய்யப்பட்ட நில வினியோகத்தில் அறுபது சதவிகித நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் கொடுக்கப்பட்டதுதான். மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் மேற்கு வங்க இடது முன்னணி அரசிலோ நிலத்தை ஏழை மக்களுக்கு அளிப்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார்.

நிலம் என்பது சாதாரண விஷயமில்லை. அடிமைகளாய், கூலிகளாய் துயரத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய உரிமை. மிகப் பெரிய வாழ்வாதாரம். மிகப் பெரிய நம்பிக்கை. நிலக்குவியல் அங்கே உடைக்கப்பட்டது. சாகுபடிக்கு வாய்ப்பிருக்கிற அரசு நிலங்களெல்லாம் ஏழைகளின் சொத்தானது. ஏழை விவசாயத் தொழிலாளி அங்கே சொந்த நிலமுடைய விவசாயியாக மாறினான். உழைப்புக்கான கருவிகள் வழங்கப்பட்டது, பாசன வசதிகள் பெருக்கப்பட்டது.

அதனால்தான் மேற்கு வங்கம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அரிசி விளைச்சலிலும் காய்கறி சாகுபடியிலும் மேற்கு வங்கம் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றால் அதற்கு இடது முன்னணியின் முயற்சிகள் மட்டுமே காரணம்.

இதை விட இன்னொரு மகத்தான சாதனை அதிகாரப் பரவல். மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையை அறிமுகம் செய்து பஞ்சாயத்துக்களை உண்மையிலேயே சக்தி மிக்கதாய் மாற்றி அமைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். ஜமீன்தார்களும் மிராசுதார்களுமே பஞ்சாயத்து தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதை ஒரு ஏழை விவசாயி கூட  பஞ்சாயத்து தலைவராக முடியும் என்று மாற்றி அமைத்தது இடது முன்னணி ஆட்சிதான். தலித் மக்கள் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து நிற்பதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசுதான். தீண்டாமை இல்லாத மாநிலமாக திகழ்வதும் இடது முன்னணி ஆட்சியால்தான்.

தொழில்துறையில் முன்னேற்றத்தை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அத்தனை கம்யூனிச எதிரிகளும் சேர்ந்து சீரழித்தது ஒரு தனிக்கதை. அதன் பின்னணி பற்றி நாளை விவாதிப்போம்.

டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து பிரச்சினை பற்றி எரிந்த போது கூர்க்காலாந்து பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பனி படர்ந்த இமய மலையில் மீண்டும் அமைதி தவழ்வதை உருவாக்கியது இடது முன்னணி அரசு. தனி மாநிலம் பிரித்து தருகிறோம் என்று மம்தாவல் தூண்டி விடப்பட்டதை நம்பி இன்று அந்த மக்கள் ஏமாந்து நிற்பது வேறு கதை. இப்போது அதே போலி வாக்குறுதியை இரண்டு எம்.பி சீட்டுக்களுக்காக பாஜக அளித்துள்ளது இன்னொரு கதை.

ஏழை மக்களுக்கு நாங்கள் நிலம் அளித்தோம். ஆனால் நரேந்திர மோடி அரசாங்கமோ அவர்கள் கைவசமுள்ள சொற்ப நிலத்தையும் பறித்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே அந்த அரசின் சாதனை. விவசாயிகளை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு வளர்ச்சி கானம் பாடிக்கொண்டிருப்பது வெட்கக் கேடு.

டாடா நானோ – மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும் – நாளை காண்போம்.

No comments:

Post a Comment