Tuesday, March 18, 2014

டாடா நானோ – மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்மேற்கு வங்க இடது முன்னணி அரசின் சாதனைகளைப் பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய சில விபரங்களைச் சொல்லி விட்டு தலைப்புச் செய்திக்கு வருகிறேன்.

2009 – 10 ல் விவசாயத்துறை வளர்ச்சி தேசிய அளவில் 2.1 % ஆக இருந்த போது மேற்கு வங்கத்தில் 3.1 % ஆக இருந்தது. குஜராத்தில் விவசாய வளர்ச்சி எதிர்மறையாக இருந்த போதே 11%, 12% என்றெல்லாம் நமோ பஜனையாளர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்ததை கேஜ்ரிவால் அம்பலப் படுத்தியதை படித்திருப்பீர்கள்.

அந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 14.3 மில்லியன் டன். இது நாட்டின் உற்பத்தியில் 16 %. அதே போல் காய்கறி உற்பத்தி 12.8 %.

தொழிலாளிகளின் அரசாக இடது முன்னணி அரசாங்கம் இருந்த காரணத்தால்தான் ஒருங்கிணைக்கப் படாத தொழிலாளர்களுக்காக வருங்கால வைப்புத் தொகையை முதலில் அறிமுகம் செய்தது. தனது ஏழாவது ஆட்சிக்காலத்தில் மருத்துவக் காப்பீட்டையும் அறிமுகம் செய்தது. விவசாயத்தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புத் திட்டத்தையும் மருத்துவக் காப்பீட்டையும் விரிவு படுத்தியது. இடது முன்னணி ஆட்சிக்காலம் முடிகிற போது அரசின் சமூக நலத்திட்டங்கள் முப்பத்தி எட்டு லட்சம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தது.  மூடப்பட்ட ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 அளிக்கத் தொட்ங்கியதும் இடது முன்னணி அரசு.

விவசாயத்துறையை தன்னிறைவு பெற்ற துறையாக முன்னேற்றிய பின்பு, தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்த பின்பு தொழில் துறையை முன்னேற்ற கவனம் மேற்கொண்டது.

இடது முன்னணியின் ஏழாவது ஆட்சிக்காலத்தில் மட்டும் சிறிய, பெரிய, நடுத்தர தொழிலகங்களாக 36,000 கோடி ரூபாய் முதலீட்டிலான 1313 தொழிற்சாலைகள் உருவாகின.இதில் 2010 ல் மட்டும் 322 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு 1,41,0000 புதிய வேலைகள் உருவாகின. மற்ற இடங்களில் எல்லாம் சிறு தொழில் அழிந்து கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 4000 சிறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அனைத்து பெரிய நிறுவனங்களும் மேற்கு வங்கத்தில் அலுவலகங்களை துவக்கினர். 2006 ல் தகவல் தொழில் நுட்பத்துறையில் 36,000 ஆக இருந்த ஊழியர் எண்ணிக்கை 2010 ல் 1,10,000 ஆக உயர்ந்தது.

இடது முன்னணி ஆட்சியின் இந்த சாதனைகளையெல்லாம் கண்ணில் காவிக்கண்ணாடி மாட்டிக் கொண்டவர்கள் வளர்ச்சி என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். துபாயிலும் பெய்ஜிங்கிலும் இருக்கிற படங்களை ஒட்டு வேலை செய்து குஜராத் என்று காட்டி பித்தலாட்டம் செய்பவர்களுக்கு உண்மையான வளர்ச்சியும் அதற்கான முயற்சிகளும் அந்த வலியும் புரியவே புரியாது.
ஆனால் மேற்கு வங்க இடது முன்னணி அரசு இந்த வளர்ச்சி போதும் என்று இருந்து விடவில்லை. நிலத்தை பெற்ற விவசாயிகளின் மகனோ மகளோ படித்து விட்டு வருகையில் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதால் தொழில் துறையில் மேலும் முன்னேற்றம் காண்பது அவசியம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

அதற்கான முதல் நடவடிக்கைதான் டாடா நானோ தொழிற்சாலை.

மேற்கு வங்கத்தில் பெரும்பாலானவை சாகுபடி நிலங்கள்தான். ஆகவே மூன்று போகங்களோ இல்லை இரண்டு போகங்களோ விளைச்சல் இல்லாத ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய நிலத்தை கண்டறிய வேண்டியிருந்தது. அப்படி கிடைத்ததுதான் சிங்கூர்.

சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

இந்த முன் மாதிரி அமலாவதை விரும்பாத முதலாளிகளின் சூழ்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்திய எடுபிடி மம்தா பானர்ஜி. அவர்கள் செய்த கலாட்டாவால் நானோ தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றது. 990 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 20,000 ஏக்கர் நிலம் அங்கே வாரி வழங்கப்பட்டது. அதுவும் அடிமாட்டு விலையை விட கேவலமாக. இருபது மடங்கு கூடுதல் நிலம் எதற்காக? நாளை கூறு போட்டு விற்பதற்காக. அதனால்தான் முதலாளிகள் மோடியை காதலிக்கிறார்கள், தங்கள் ஊடகங்களில் நமோ பஜனை பாடுகிறார்கள். எந்த ஒரு தொண்டு நிறுவனமும் மோடியால் பறிக்கப்பட்ட நிலங்களின் விவசாயிகளுக்காக கண்ணீர் வடிக்கவில்லை. அருந்ததி ராயும் மேதா பட்கரும் குஜராத் ஏழைகளுக்காக கவலைப்பட மாட்டார்கள் போலும்.   

நாளை – நந்திகிராம் – சதிகாரர்களின் சொர்க்க பூமி


No comments:

Post a Comment