நந்திகிராம் –
சதிகாரர்களின் சொர்க்க பூமி
இந்த ஆண்டு
துவக்கத்தில் சி.பி.ஐ கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கை
தாக்கல் செய்தது. மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சி மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு
மிகப் பெரிய களங்கத்தை துடைப்பதாக அந்த குற்றப்பத்திரிக்கை அமைந்திருந்தது. நமோ
பஜனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த எந்த ஒரு முதலாளித்துவ ஊடகமும் அது பற்றி வாய்
திறக்கவேயில்லை. ஆம் அந்த குற்றப் பத்திரிக்கை 14, மார்ச், 2007 அன்று நந்திகிராமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றிய
குற்றப்பத்திரிக்கை. இடதுசாரிகளின் மீது அபாண்டமாக பொய்ப்பிரச்சாரம் செய்தவர்களால்
உண்மையை எப்படி ஜீரணிக்க முடியும்? அதனால் அவர்களால் மௌனமாக வேறு பரபரப்புச்
செய்திகளில் மூழ்கியதான பாவனையில் முகத்தை மூடிக்கொண்டு விட்டார்கள். சரி அந்த
விபரங்களை பிறகு பார்ப்போம்.
முந்தைய
பதிவில் தொழில்துறையில் முன்னேற்றம் காண இடது முன்னணி நடவடிக்கை
எடுக்கத்தொடங்கியது பற்றியும் டாடா நானோ பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். தொழில்
வளர்ச்சியில் முன்னேற்றம் காண இடது முன்னணி அக்கறை செலுத்தவில்லை என்று விமர்சனம்
செய்து கொண்டிருந்தவர்கள், இடது முன்னணியின் தெளிவான, வேகமான நடவடிக்கை கண்டு
அஞ்சினார்கள். அது ஏன் என்பது பற்றி நாளை விரிவான பதிவில் காண்போம்.
இந்தோனேசியாவில்
உள்ள சலீம் குழுமத்தோடு நந்திகிராமில் ஒரு ரசாயன வளாகம் அமைப்பதற்கான ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தை முடக்குவதற்காக காங்கிரஸ் கட்சி, திரிணாமுல்
காங்கிரஸ், பாஜக, சில பெயரளவு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைவரும் கரம் கோர்த்தார்கள்.
இவர்களுடைய கூலிப்படையாக மாவோயிஸ்டுகள் செயல்பட்டனர். கொலை பாதகத் திட்டமொன்று
தீட்டப்பட்டது.
நந்திகிராமிற்கு
வந்த மேற்கு வங்க முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை கொலை செய்ய
திட்டமிட்டனர். அவர்கள் வைத்த வெடிகுண்டிலிருந்து அவர் மயிரிழையில் உயிர்
தப்பினார். தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மேடைதோறும்
முழங்குபவர்கள் ஒரு மாநில முதல்வரை கொலை செய்ய திட்டமிட்டவர்களை கைது செய்த போது
வானுக்கும் பூமிக்குமாக குதித்தார்கள். அந்த கொலைகாரர்களை பாராட்டி பூச்செண்டு
கொடுத்து விட்டு கையில் துப்பாக்கியையும் கொடுத்து என்னை சுட்டுக்கொல் என்று தோழர் புத்ததேவ்
சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள் போலும்!
அந்த பகுதி
மக்கள் எதிர்ப்பதினால் நந்திகிராம் திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் அறிவிக்கிறார்.
எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராட்டம் நடத்தினார்களோ அது நிறைவேறிய பின்பு
போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடி விட்டு போராட்டத்தை நிறைவு செய்வதுதானே முறை?
ஆனால் இந்த
சதிகாரர்கள் அவ்வாறு செய்யவில்லை. நந்திகிராம் பகுதியில் இருந்த மார்க்சிஸ்ட்
கட்சி ஊழியர்கள், அனுதாபிகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி அவர்களது
வீடுகளிலிருந்து துரத்தினார்கள். அந்த பகுதியே அவர்கள் வசமானது. நந்திகிராம் வரும்
வழியையெல்லாம் வெட்டி வைத்தார்கள். மாவோயிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு பகுதியாக
நந்திகிராம் மாறியது. மாநிலத்திலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும்
துண்டிக்கப்பட்டது.
தொழிற்சாலை
அமைக்கும் பணி கைவிடப்பட்டது, ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது என்று பலமுறை அரசு சொன்ன பிறகும் சதிகாரர்கள்
இறங்கி வரவேயில்லை. பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தது, ஆனாலும் எந்த
முன்னேற்றமும் இல்லை. சாலைகளை மீண்டும் அமைக்கப் போகிறோம் என்று இன்ஸ்பெக்டர்
ஜெனரலே நேரடியாக 13.03.2007 அன்று பேசுகிறார். மறுநாள்
வரப்போகிறோம் என்று தெரிவிக்கிறார்.
ஆனால் மறுநாள்
ஒரு ஐயாயிரம் பேர் அங்கே குழுமி இருக்கிறார்கள். காவலர்கள் மீது கல்லெறிகிறார்கள்.
கலைந்து போகச்சொல்லி லவிட் ஸ்பீக்கரில் அறிவித்தாலும் அதை கேட்கவில்லை. 53 சுற்றுகள் கண்ணீர் புகைக்கும் பயனில்லை, ரப்பர் தோட்டாக்களும் பலனளிக்கவில்லை, வானில் சுட்டும் கலையவில்லை, கல்லெறியும் நிற்கவில்லை.
அதன் பின்பே துப்பாக்கிச் சூடு நிகழ்கிறது. எட்டு உயிர்கள் பலியாகிறது.
இந்த
துப்பாக்கிச் சூட்டை மாநில அரசும் நியாயப்படுத்தவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைமையும் ஏற்கவில்லை. அரசு இன்னும் பொறுமையை கடைபிடித்திருக்க வேண்டும்
என்றே கூறியது. கலவரம் நிகழ்த்த வேண்டும் என்று சதிகாரர்கள் திட்டமிட்டு வன்முறையை
கட்டவழித்து விட்ட போதும் துப்பாக்கிச் சூடு சரியல்ல என்பதுதான் கட்சியின்
கருத்து. இந்த நேர்மை வேறு எந்த கட்சியிடமாவது உண்டா? இரண்டாயிரம் பேரைக் கொண்று
விட்டு நாய்க்குட்டி காரில் அடிபட்டு விட்டது என்று அலட்சியமாக பேசிய முதல்வரையும்
நாம் பார்த்திருக்கிறோமே.
நந்திகிராமிலிருந்து
துரத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஒரு காலகட்டத்தில் மீண்டும் தங்கள்
வீடுகளுக்கு திரும்புகிறார்கள். சொந்த வீட்டிற்கு திரும்பியதை குய்யோமுய்யோ என்று
கத்திய அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற அறிவுஜீவிகள் அவர்கள் அங்கிருந்து
துரத்தப்பட்ட போது போர்ட் பவுண்டேஷன் போன்ற
அறக்கட்டளைகளிடமிருந்து நிதி வாங்க அமெரிக்கா போயிருந்திருப்பார்கள்
போலும்.
நந்திகிராம்
பிரச்சினையை வைத்துக் கொண்டு இடதுசாரிகள் மீது ஒரு மோசமான அவதூறு பிரச்சாரத்தை
செய்தார்கள். ஆட்சியை பிடிப்பதற்காக அப்படி செய்யப்பட்டது. ஆனால் இப்போது சி.பி.ஐ
பதிவு செய்த குற்றப்பத்திரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. கலவரத்தை தவிர்க்க வேறு
எந்த வழியும் இல்லை என்றும் சொல்லி விட்டது.
நந்திகிராமால்
அரசியல் ஆதாயம் அடைந்த மம்தா இப்போது என்ன செய்கிறார்?
இந்த சதிகளில்
முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று சத்ரதார் மஹாதோ என்பவர். அவரை
மாவோயிஸ்ட் என்றும் சொல்கிறார். 1972 முதல் 1977 வரை மேற்கு வங்கத்தில் வன்முறை
வெறியாட்டம் நடத்திய சத்ர பரிஷத் என்ற மாணவர் அமைப்பில் மம்தா பானர்ஜி காண்பித்த
தீரத்தால் அந்த அமைப்பில் சேர்ந்தார் என்றும் சொல்கிறார்கள். அந்த தீரச்செயல்
என்னவென்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவசர நிலைக்கு
எதிராக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயண் மேற்கு வங்கம் வந்த போது அவரது காரை நிறுத்தி
அதன் பானெட் மீது ஏறி நின்று அசிங்கமான முறையில் நடனமாடியதுதான் மம்தாவின்
தீரச்செயல். சத்ரதார் மஹாதோ மக்களை அரசுக்கு எதிராக தூண்டி விட்டவர். ராஜ்தானி
வண்டிக்கு வெடி குண்டு வைத்ததில் தொடங்கி 18 வழக்குகள் அவர் மீது உண்டு. ராஜ்தானி குண்டு வெடிப்பிற்கே அவர் கைது செய்யப்படுகிறார்.
அவர் மீதுள்ள வழக்குகளை தீவிரமாக நடத்தி தண்டனை
வாங்கித்தர மம்தா முயன்று கொண்டிருக்கிறார்.
மற்றவர்
கிஷண்ஜி, மாவோயிஸ்ட் தலைவர். மம்தாதீதிக்கு ஆதரவாக அத்தனை நாச காரியங்களையும்
செய்து முடித்தவர். அதற்கு நன்றிக்கடனாக ஆட்சிக்கு வந்தவுடன் மம்தா பானர்ஜி அவரை
ஒரு எண்கவுண்டரில் கொன்று விட்டார்.
இப்போது
நந்திகிராமில் வேறு தொழிற்சாலைகளை கொண்டு வரப் போவதாக மம்தா அறிவித்துள்ளார்.
யாரிடமும் நிலத்தை எடுக்காமல் வானில் தளம் அமைத்து அந்தரத்தில் தொழிற்சாலை கொண்டு
வரப் போகிறார் என்று எதிர்பார்க்கிறேன்.
நாளை :
இடதுசாரிகளின் மீது ஏன் இந்த வெறுப்பு?
No comments:
Post a Comment