Wednesday, March 5, 2014

கை குடுங்க சார், சூப்பரா பேசினீங்க

ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானவர் அவர். அதன் பின்பு பெரிய பழக்கம் இல்லையென்றாலும் நேரில் பார்க்கும் போது வணக்கம் சொல்கிற அளவிற்கு பழக்கம் உண்டு. அந்த வணக்கம் சொல்வதும் பெரும்பாலும் கறிகாய் கடையில்தான் நடக்கும்.

இன்று இரவு கறிகாய் வாங்கச் சென்ற போது அவர் அங்கே இருந்தார். நான் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்ட உடனேயே என்னிடம் வந்து "கை குடுங்க சார், சூப்பரா பேசினீங்கஎன்று கை கொடுத்தார். என்ன சார் சொல்றீங்க, எந்த கூட்டத்தை சொல்றீங்க என்று கேட்டவுடன் "அதான் சார், உங்க மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணன் பேசினாரே, அந்தக் கூட்டம்தான்" என்றார்.

நான் கொஞ்சம் சந்தேகத்தோடே " உங்களை நான் பார்க்கவே இல்லையே" என்றேன். "என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, பாட்டுக் கச்சேரி நடக்கும் போது வந்தவன், நன்றி சொல்றவரைக்கும் இருந்தேன், நான் கூட உங்களைக் கூப்பிட்டேன், அதுக்குள்ள நீங்க மேடைக்கு போய்ட்டீங்க" என்று அழுத்தமாக சொன்னார்.

அதோடு கூட அவர் நிற்கவில்லை, குஜராத்தைப் பற்றி என்ன பேசினேன், காங்கிரஸ் பற்றி என்ன பேசினேன் என்றெல்லாம் பாய்ண்ட் பாய்ண்டாக வேறு அடுக்க ஆரம்பித்து விட்டார். தலை குழம்பிக்கொண்டிருந்த நேரம் அடுத்த விஷயத்திற்குப் போனார். "சார் இதோ இப்ப போட்டிருக்கிற பச்சை கலர் சட்டைதான அன்னிக்கும் போட்டிருந்தீங்க" என்ற போதுதான் அவர் உள்ளிருந்த சரக்குதான் இதுவரை பேசிக்கொண்டிருந்தது என்பதை புரிந்து கொண்டேன். 

இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

அந்த கூட்டத்தில் நான் பேசவேயில்லை.
அன்று அணிந்திருந்ததும் சிவப்பு கலர் சட்டை.
 

3 comments:

  1. இப்படித் தொடங்கலாமே :

    முன்பின் தெரியாத நபர் உங்களுடன் பேச வந்தால் முதலில் ஐயா உங்களை அடிக்கடி டாஸ்மாக்கில் பார்த்திருக்கேனே என்று எடுத்து விடணும். அவரு பேசுவதைக் கவனித்த்தபின் ஓடணும்.

    கோபாலன்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ! நிஜ வாழ்வு சரக்கு காமெடி !

    ReplyDelete
  3. கோபாலன் சார், டாஸ்மாக் போகும் பழக்கம் எனக்கு கிடையாதே. பிறகு எப்படி அவ்வாறு சொல்வது? உங்களுக்கு இருக்கும் போல?

    ReplyDelete