Saturday, February 8, 2014

இனி நான் புத்தங்கள் வாங்கப் போவதில்லை




ஒவ்வொரு வருடமும் செல்கிற சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்த முறை செல்ல முடியாமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. நாக்பூர் செல்ல சென்னையிலிருந்து புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் பதிவு செய்திருந்ததால் ட்ரெயினை பிடிக்கும் முன் புத்தகக் கண்காட்சி சென்றால் என்ன தோன்றியது. அதற்கு ஏற்றார்போல பிருந்தாவன் எக்ஸ்பிரசிலும் டிக்கெட் கிடைக்கவில்லை.

18.01.2014 அன்று சனிக்கிழமை ஒரு வேளை மட்டுமே அலுவலகம் என்பதால் அன்று மதியமே வேலூரிலிருந்து காரில் புறப்பட்டு நேராக புத்தகக் கண்காட்சிக்கு சென்றோம். கடந்த வருடத்து அசௌகர்யங்கள் இந்த வருடம் இல்லை. ஒரு நூறு ஸ்டால்களுக்காவது சென்று பார்க்க முடிந்தது.

புத்தகங்கள் வாங்குவதற்காக ஒதுக்கியிருந்த மூவாயிரம் ரூபாய் முடிந்து போனதாலும் அதற்கு மேல் புத்தகங்களை சுமக்க கைகளுக்கு வலிமை இல்லாததாலும் இரண்டு மணி நேரத்திலேயே வெளியே வந்து விட்டோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் ஒரு காரணம்.

வாங்கிய புத்தகங்களில் நான்கை மட்டும் ரயில் பயணத்திற்காக வைத்துக் கொண்டு மற்றவற்றை கார் டிக்கியில் போட்டு அனுப்பி விட்டேன். இந்த ஞாயிறு அன்று அவற்றை எடுத்து புரட்டிப் பார்த்ததிலேயே பாதி பொழுது  கழிந்து விட்டது. ஹாலில் இருக்கும் டீப்பாய், தொலைக்காட்சி, நாற்காலிகள் எல்லாம் புத்தகங்களின் ஆக்கிரமிப்பில்தான் இருந்தது.

இன்று அவற்றை ஒழுங்கு படுத்தி வைக்கும் போது இன்னும் படிக்காமல் இருக்கிற எட்டு நூல்கள் கடுமையாக முறைத்தது போலவே தோன்றியது. எங்களையே இன்னும் படிக்கவில்லை, அதற்குள் இன்னுமா என்று கேட்டது போலவே தோன்றியது.

ஏற்கனவே வாங்கிய புத்தகங்களையும் இப்போது வாங்கியுள்ள நூல்களையும் படித்து முடிக்காமல் இனி புதிதாக புத்தகங்கள் வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இனி தொடர்ச்சியாக பல கிளைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால் பயண நேரத்தில் படித்து விட முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பார்ப்போம் என்ன ஆகிறது என்று. மேலே உள்ளவற்றில் ஏழு புத்தகங்களை படித்து முடித்து விட்டேன் என்பது ஒரு சின்ன ஆறுதல்.

புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு தூரத்து உறவினர் வந்தார். அவர் அவற்றைப் பார்த்து விட்டு “நீங்க புக்கெல்லாம் கூட படிப்பீங்களா?” என்று கேட்டாரே ஒரு கேள்வி. அப்போது படிக்காமல் வைத்த அந்த எட்டு புத்தகங்கள் என்னைப் பார்த்து கை கொட்டி சிரித்தது போலவே தோன்றியது.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அனானிகள் எனக்கு அண்ணனாக முடியாது

    ReplyDelete