Sunday, February 9, 2014

புத்தகக் கண்காட்சி – மகனிடம் வாங்கிய திட்டு



இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சில சந்திப்புக்கள் நிகழ்ந்தது. முக்கியமாக எங்கள் நெல்லைக் கோட்டத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக செயல்பட்ட தோழர் டி.தேவபிரகாஷ். என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிற தோழர், வயது வித்தியாசமே இல்லாமல் பழகும் இனிய, வெளிப்படையான தோழர் அவர். பல மாதங்களுக்குப் பிறகு அவரை பார்த்தது மகிழ்ச்சியளித்தது.

அதே போல் முகநூல் வாயிலாக பரிச்சயமாகியிருந்த கவிஞர் சுகிர்தராணி அவர்களோடும் அறிமுகம் செய்து கொண்டு சில நிமிடங்கள் பேசினேன். தமுஎகச தோழர் கருணாவோடும் ஓரிரு நிமிடங்கள்.

வம்சி பதிப்பகத்தில் திரு பாலு மகேந்திராவின் “கதை நேரம் முதல் தொகுதி” யும் திரு மாரி செல்வராஜின் “தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்” நூலும் எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றால் அங்கே ஒரு இனிய இன்ப அதிர்ச்சியாக மகத்தான கலைஞர் பாலு மகேந்திராவே அங்கே அமர்ந்திருந்தார்.

வெண்மணி சம்பவம் தொடர்பான ஆவணப் படமான “ராமையாவின் குடிசை” வெளியீட்டு விழாவில் அவரது உரையைக் கேட்டிருந்தாலும் அவ்வளவு பக்கத்தில் பார்க்க பரவசமாகவே இருந்தது. மூன்றாம் பிறை, வீடு, நீங்கள் கேட்டவை, வண்ண வண்ண கோலங்கள் சதி லீலாவதி, ராமன் அப்துல்லா என்று அவர் இயக்கிய படங்கள் ஒரு நொடியில் கண்ணுக்கு முன்னே தோன்றியது.

எங்கள் வாத்தியார் என்று ஆனந்த விகடனில் வெளி வந்த மூங்கில் மூச்சு தொடரில் சுகா நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டவையும் நினைவுக்கு வந்தது. அவரது புத்தகத்தில் அவரது கையெழுத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு அடுத்த ஸ்டாலுக்கு சென்றேன்.



ஆனாலும் அந்த பரவசம் அடங்காததால் கையிலிருந்த அலைபேசியிலேயே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸும் போட்டேன்.

நாக்பூர் போய் விட்டு திரும்பிய பின் அந்த புத்தகத்தையும் அதிலிருந்த அவர் கையெழுத்தையும் மகனிடம் பெருமையாகக் காண்பித்த போது அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாயா என்று கேட்டான். இல்லையே என்று முழித்த போது “ உனக்கு அவர ரொம்ப பிடிக்கும், பார்த்து பேசியிருக்க, ஒரு போட்டோ கூட எடுத்துக்கனும்னு தோணலியா? ஒரு நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டயே” என்று திட்டினான்.

அவன் சொல்வது சரிதானோ, ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டேனோ?



No comments:

Post a Comment