Wednesday, February 19, 2014

தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்



தமிழக அமைச்சரவை இன்று எடுத்துள்ள முடிவு உண்மையிலேயே பாராட்டிற்குரியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வது என்ற முடிவு அவ்வளவு சாதாரணமானது அல்ல. தமிழகத்திலிருந்து முகநூலிலும் வலைப் பக்கங்களிலும் செயல்படும் பலரும் கட்சி வேறுபாடில்லாமல் பாராட்டுவதே இந்த முடிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அரசியல் காரணங்கள், தேர்தல் ஆதாயம் கூட விமர்சனங்கள் வைக்கப் படுகிறது. ஆனால் அரசியல் காரணமோ இல்லை தேர்தல் ஆதாயமோ எதுவாக இருந்தாலும் உடனடியாக முடிவு எடுப்பதற்கு ஒரு அரசியல் உறுதி வேண்டும். காலம்காலமாக கருணை மனுக்களை கிடப்பில் போட்ட மத்தியரசு, ஜனாதிபதிகள் ஆகியோரை ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

இதுவே கலைஞர் அரசாக இருந்திருந்தால் அதற்கான வாய்ப்பு குறைவு என்பது உறுத்தும் உண்மை. சொக்கத்தங்கம் சோனியா காந்திக்கு கோபம் வரக்கூடாது. இளவரசன் ராகுல் மனம் புண்படக் கூடாது, மரண தண்டனை ஆதரவாளர்களான பாஜக வுடன் எதிர்கால கூட்டு பாதிக்கக்கூடாது என்று யோசித்து யோசித்து யோசித்து யோசித்து அவர் முடிவு எடுப்பதற்குள் அத்தனை பேரும் வேலூர் சிறையிலேயே மாண்டு மண்ணோடு மண்ணாகி இருப்பார்கள்.

பல்லாண்டுகளாக அனுதினமும் கண்முன்னே ஆடிக் கொண்டிருந்த தூக்குக் கயிறு ஒருவழியாக அறுபட்டு விட்டது. சிறைச்சாலைக் கம்பிகளிலிருந்து வெளியே வருபவர்களுக்கு இப்போதுதான் வாழ்வே தொடங்கவுள்ளது. இனி அவர்கள் வாழ்வு மலரட்டும். அந்த முறையில்
தமிழக முதல்வரை நெஞ்சார பாராட்டுகிறேன்

ராஜீவ் காந்தியின் குடும்பத்தாருக்கும் அவரோடு கொல்லப்பட்ட மற்ற காவலர்கள், பொது மக்கள் குடும்பத்தாருக்கு நியாயம் வேண்டாமா என்று கேள்வி கேட்கிற காங்கிரஸ்காரர்களே, டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குடும்பங்களுக்கும் இலங்கையில் அமைதிப்படையாலும் பிறகு முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் குடும்பங்களுக்கும் உங்கள் கட்சியும் உங்கள் கட்சியின் ஆட்சியும் என்ன நியாயம் செய்திருக்கிறது?

1 comment:

  1. WELL SAID COMRADE! YOU HAVE GIVEN GOOD REPLY TO CONGRESS MEN!

    ReplyDelete