எதிர்பார்த்தது போலவே அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆட்சி அல்பாயுசாகவே
முடிந்துள்ளது. அம்பானியை பாதுகாக்க காங்கிரசும் பாஜகவும் கரம்
கோர்த்துக் கொண்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டி பதவி விலகினார்.
யாருக்கு எதிராக, யாருடைய ஊழல்களுக்கு எதிராக தேர்தலில்
பிரச்சாரம் செய்தாரோ, அவர்களுடைய ஆதரவோடு ஆட்சி அமைத்த
அந்த நிமிடத்திலிருந்தே அந்த நாற்காலி ஆடிக் கொண்டுத்தான்
இருந்தது.
அன்னா ஹசாரேவும் சரி, அவரது சீடராய் வந்து அவரை மிஞ்சிய
அரவிந்த் கேஜ்ரிவாலும் சரி ஊழல் என்று சொல்வது அரசியல்வாதிகள்
மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரைத்தான். ஊழல்
எனும் நாணயத்தின் மறு பக்கம் பற்றி அவர்கள் கவலைப்பட்டதே
கிடையாது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல்வேறு ஊழல் வழக்குகள்
வந்துள்ளது. ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரியையோ அல்லது
அமைச்சரையோ குறை சொல்லும் யாரும் லஞ்சம் கொடுத்த
அந்த பெரிய மனிதர்களைப் பற்றி வாய் திறந்ததே இல்லை.
லஞ்சம் யார் வாங்கினாலும் தவறு, அனைவரும் சட்டத்தின்படி
தண்டிக்கப்பட வேண்டும். நூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண
ஊழியர்கள் மீது சாட்டையை வீசும் இந்த சமூகம் கோடிகளில்
லஞ்சம் வாங்கும் மனிதர்களுக்கு வெண்சாமரம் வீசும் அவலமும்
இந்த தேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
கோடிகளில் ஊழல் செய்த அதிகாரிகள், அமைச்சர்களாவது
பொது வெளியில் அம்பலப்படுகிறார்கள், சில சமயம்
திஹாருக்கும் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு லஞ்சம்
அளித்த அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருந்த பெரிய
முதலாளிகள், பெரும் நிறுவனங்கள் பெயர் வெளியே வருவதே
இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் ஊழலில் ஏற்பட்டுள்ள
பரிணாம வளர்ச்சி.
சில பல கோடிகளில் இருந்த ஊழல் தொகை இன்று பல
ஆயிரம், லட்சம் கோடிகளில் உயரத் தொடங்கியது உலகமயமாக்கல்
கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகே. எல்லை கடந்த
பேராசைக்கு நெறிமுறைகள் இரையாகி விட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கு தீனி போடும்
அரசுகள், அதற்கு ஏற்றார்போல கொள்கைகளை வகுத்தும்
உதவுகிறார்கள், சலுகைகளும் வழங்குகிறார்கள், வசூலிக்க வேண்டிய
தொகைகளையும் வசூலிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதைத்தவிர
ஊழல் ஆறுகள் எப்போதுமே ஜீவநதியாக ஓடிக் கொண்டே
இருக்கின்றன.
ஆனால் அன்னா ஹசாராவேவும் கேஜ்ரிவாலும் இந்த கார்ப்பரேட்
கொள்கைகளைப் பற்றி இதுநாள் வரை வாய் திறந்ததே இல்லை.
முதல் முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் அம்பானிக்காக
காங்கிரசும் பாஜகவும் கரம் கோர்த்துக் கொண்டுள்ளார்கள்
என்ற உண்மையை, நாங்கள் பல்லாண்டுகளாக சொல்லிக் கொண்டே
இருக்கிற அந்த யதார்த்ததை சொல்லியுள்ளார்.
கார்ப்பரேட்டுகள் மட்டும் காரணமல்ல, உலக மயக் கொள்கைகள்தான்
ஊழலின் ஊற்றுக்கண் என்பதை இப்போதாவது புரிந்து
கொண்டீர்களா? மிஸ்டர் அரவிந்த் கேஜ்ரிவால்?
No comments:
Post a Comment