Sunday, November 10, 2013

கடைந்தெடுத்த தமிழ் விரோதி ஜெயமோகன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
கௌரவத்தலைவர் தோழர் அருணன் எழுதி இன்றைய
தீக்கதிர் நாளிதழில் வெளியான அற்புதமான கட்டுரை இது.
இக்கட்டுரை ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை
சாடுவதோடு நிற்காமல் அதன் பின்னே உள்ள அரசியலையும்
அம்பலப்படுத்துகிறது. ஆட்சியாளர்களின் குணாம்சத்தையும்
தோலுரித்து காண்பிக்கிறது. அவசியம் படியுங்கள் முழுமையாக. 


மெல்லத் தமிழினிச் சாகுமோ? அருணன்



இன்றைய உலக - இந்தியச் சூழலில் ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தமிழர்கள் கற்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த அந்நிய மொழியின் மூலம்தான் அனைத்துப் பாடங்களையும் கற்கவேண்டுமா என்பதுதான் கேள்வி. பயிற்று மொழியாக இருக்க வேண்டியது தாய்த் தமிழா, வெளிநாட்டு ஆங்கிலமா என்பதுதான் வினா. “எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது” என்று திரு. ஜெயமோகன் ‘தி இந்து’ ஏட்டின் (4.11.2013) எழுதியிருக்கிறார். 


நல்லவேளையாக, அதற்கு எதிரான கருத்துக்களையும், அந்த ஏடு (8.11.2013) வெளியிட்டிருக்கிறது.ஒரு தமிழ் எழுத்தாளர், ஒரு தமிழ் ஏட்டில்இப்படித் தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் பேசுகிற தெனாவெட்டு வந்திருக்கிற சூழலைக்கவலையோடு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கில வழிக் கல்வியே இனி தமிழகத்தின் எதிர்காலம் என்று பெரிய வரலாற்று ஞானி போல பிரகடனப் படுத்தியிருப்பது மட்டுமல்ல, “அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலை கொள்வது அடிப்படைவாதம் மட்டுமே” என்று தமிழ்வழி ஆதரவாளர்களைப் பழமைவாதிகள் எனச் சாடியும் இருக்கிறார். அந்த ஆணவம் எப்படி வந்தது என்று வேதனையோடு சிந்திக்க வேண்டியிருக்கிறது.


மனிதன் உற்பத்திக் கருவிகளை உருவாக்கும் மிருகம் மட்டுமல்ல, அதில் ஒன்றாகவும், பண்பாட்டு ஊடகமாகவும் பயன்படுகிற மொழியைக் கண்டுபிடித்த மிருகமும் கூட. பெற்றோர் தங்களது மொழியின் மூலம் குழந்தையை வளர்ப்பதன் ஊடே தங்களது முன்னோர்களது பாரம்பரியத்தை அதற்கு ஊட்டிவிடுகிறார்கள். வீட்டில் தாய்மொழியில் தனதுஆரம்ப அறிவைப் பெறும் குழந்தை அதே மொழியின் வழியாகப் பள்ளியில் இதர அறிவுகளைப் பெறும்போது அதற்கு உள்வாங்க, செரிக்க, வெளிப்படுத்த, வளப்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. தாய்மொழியில் கற்றால்தான் எளிதில் புரிபடும், உள்ளார்ந்த சுயசிந்தனை வேகப்படும், அதை வெளிப்படுத்தும் ஆற்றல் சட்டெனக் கைவரும் என்பது அறிவியல்பூர்வ உண்மை. 


இதற்கு நேர்எதிராகத்தான் தமிழர்கள் நடைபோடப் போகிறார்கள் என்று ஒருவர் ஜோசியம் சொல்லுகிறார்.உலக நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்றுத் தரப்படுகிறது. கூடவே மக்களில் ஒரு பகுதியினர் வேற்று மொழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன், சீனம், ஜப்பானியம் என்று அவரவர் தாய்மொழியில்தான் படிப்புச் சொல்லித் தரப்படுகிறது. வீட்டில் பேசுகிற மொழியும், பள்ளி - கல்லூரியில் பேசுகிற மொழியும் ஒன்றாக இருப்பதால் அங்கெல்லாம் மொழி ஒரு பிரச்சனையாகவே இல்லை, ஒவ்வொரு மாணவருக்கும் பாடம் மட்டுமே பிரச்சனை, அதைக் கற்பதில்தான் முழுக் கவனமும்.தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் கற்கிற மாணவர்களுக்கோ பாடமும் பிரச்சனை, மொழியும் பிரச்சனை. மொழியே ஒரு பிரச்சனையாகிப் போவதால் பாடத்தைக் கற்பதிலே கூடுதல் சிக்கல். தட்டுத் தடுமாறிக் கற்பதில் அதைவிடச் சிக்கல். பாட ஞானம் உள்ள ஒரு மாணவன் ஆங்கில ஞானம் இல்லாமல் கல்வியைக் கண்டு கசந்து போவது உண்டு. 


தமிழகப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து விபரங்களைத் திரட்டிய ஒரு மாணவர் அதை ஆங்கிலத்தில் எழுத முடியாமல் அவதிப் பட்டதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.அந்நிய மொழிவழிக் கல்வி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், வெளிப்படுத்தும் ஆற்றலையும் மட்டுப்படுத்துகிறது என்பது வெளிப்படையான உண்மை. அப்படியும் தமிழர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கிற ஆவலைக் காட்டுகிறார்கள் என்பதும் உண்மை. இந்த வினோதமான நிலைதான் ஜெயமோகன் போன்றோரை இப்படி அகங்காரத்தோடு எழுத வைத்திருக்கிறது.இவர்கள் கவனிக்காதது போல விட்டுவிடுகிற மற்றொரு உண்மை உள்ளது. அதுதான் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்படுகிற ஆங்கிலவழிக் கல்விக்கான சூழல். 


இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் மத்திய ஆட்சி மொழி என்பது இந்தி மட்டுமே. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இது விஷயத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இதர 21 மொழிக்காரர்களுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு என்னவென்றால் ஆங்கிலம்! அது ஒரு துணை ஆட்சி மொழியாக நடைமுறையில் உள்ளது.இதன் நேரடி விளைவுதான் நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர் ஒருவர் நினைத்தால் தமிழில் பேச முடியாது! அவர் மத்திய மந்திரியாகவே ஆனாலும் தமிழில் பதில் சொல்ல முடியாது! இந்த விஞ்ஞான யுகத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கிற வசதி நாடாளுமன்றத்தில் செய்யப்படவில்லை. வேண்டுமென்றேதான் மத்திய ஆட்சியாளர்கள் இப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை மத்திய அரசு என்றால், மத்திய அரசு நிறுவனங்கள் என்றால் இந்தி அல்லது ஆங்கிலம்தான்! பிற தேசிய மொழிகள் அரசியல்சாசன அட்டவணையோடு சரி, அதைத்தாண்டி அரசு வளாகத்திற்குள் நுழைய முடியாது.இதனுடைய வெளிப்பாட்டை, தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று நந்தி போலக் குறுக்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் மத்திய அரசின் நிலைபாட்டில் இன்னும் தெளிவாக உணரலாம். அரசியல் சாசனப் பிரிவு 348 (2)-ன்படி தான்உயர்நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் போட்டுஅனுப்பியது தமிழக அரசு. அதை ஒப்புக்கொள்ளாமல், தேவையின்றி உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க அனுப்பி கிடப்பில் போட்டுவிட்டது மத்திய அரசு.மருத்துவக் கல்வி, ஐஐடி தொழில்நுட்பக் கல்வி, முனைவர் பட்டக் கல்வி போன்ற உயர் கல்வியில் இப்போதும் ஆங்கிலத்தையே அங்கீகரித்திருக்கிறது மத்திய அரசு. அதனுடைய பள்ளிக் கல்வி முறையிலும் ஆங்கிலம் அல்லது இந்திக்குத் தான் முழு முன்னுரிமை. 


கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு கொண்டு போனவர்கள் அதன்மூலம் தனியார்மயப்படுத்துதல் மற்றும் ஆங்கிலமயமாக்கல் எனும் இருவேலைகளைப் படுவேகமாகச் செய்து வருகிறார்கள்.மொத்தத்தில், ஆங்கிலம் - இந்தியைத் தவிர வேறு எந்த தேசிய மொழியையும் வளர்க்கிற வேலை, அதற்குரிய இயல்பான உரிமைகளை அங்கீகரிக்கிற வேலை தங்களுக்கு கிடையாது என நினைத்து அவர்கள் செயல்படுகிறார்கள். சோகம் என்னவென்றால் மத்திய அரசின் இந்த அநீதிப் போக்கை எதிர்த்துப் போர்க்கொடி பிடித்திருக்க வேண்டிய தமிழகத்தின் திராவிட இயக்க ஆட்சிகள் அதைச் செய்யவில்லை என்பது. “தமிழ்வாழ்க” என்று வண்ண விளக்கு விளம்பரம் செய்கிறார்களே தவிர, தமிழ்த் தாய்க்குச் சிலை வைக்கிறார்களே தவிர தமிழுக்காக உருப்படியான போர்க்களத்தைக் காணவில்லை. 


இதைவிடக் கொடுமை, கையறு நிலைக்குச் சென்று மத்திய அரசோடு போட்டி போட்டுக் கொண்டு மாநில அரசும், ஆங்கிலவழிக் கல்வியைப் பள்ளிகளில் துவக்குகிற விபரீதம் நடக்கிறது.இப்படி மத்திய - மாநில அரசுகள் நடந்துகொண்டால் சாதாரணத் தமிழர்கள் என்ன செய்வார்கள்? மேலே போகும்போது எப்படியும் ஆங்கிலம்தான் என்றால் துவக்கத்திலிருந்தே அதில் படிக்கட்டும் என்று முடிவெடுக்கிறார்கள். பாவம் தமிழர் வீட்டுப் பிள்ளைகள்! அவர்கள்தான் வீட்டில் ஒரு மொழி, பள்ளியில் ஒருமொழி என்று வழி பிதுங்கி நிற்கிறார்கள்.இந்த உண்மையை உணர்ந்து, திட்டமிட்டு உருவாக்கப்படும் ஆங்கிலமயச் சூழலை எதிர்த்து தமிழர்கள். போராட வேண்டும்; அதற்கான உரிய கோரிக்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மெய்யாலும் தமிழகத்தின் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும், தமிழ் ஆர்வலர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு தமிழ்எழுத்தாளர் இந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வார் என்று பார்த்தால் அவர் அதற்குக் கூச்சமின்றி துரோகம் இழைக்கிறார்.


ஆங்கில வழிக் கல்வியே இங்கே எதிர்காலம் என்று ஓங்கியடித்துச் சொல்வது மட்டுமல்லாது, நிகழ்காலத்திலேயே தமிழுக்கு குழி பறிக்கிற வேலையையும் செய்கிறார். “ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துக்களில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்“ என்று ஓர் அதி ஆபத்தான ஆலோசனையை முன்வைக்கிறார். தமிழை மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்களையும் ஒழித்துக் கட்டச் சொல்லுகிறார், கடைந்தெடுத்த தமிழ் விரோதியாகிப் போனார்.ஒருமொழியானது தனக்கென எழுத்துக்களை - எழுத்துருவை - கொண்டிராத போது இன்னொரு மொழியின் எழுத்துருவை தனதாக்கிக் கொள்ளும். சொந்தப் பிள்ளை இல்லாதவர் தத்துப் பிள்ளை எடுப்பார். தமிழுக்கு என்று பல நூறு ஆண்டு காலப் பழமையுள்ள எழுத்துரு இருக்கும்போது ஆங்கில எழுத்துருவை ஏன் தத்தெடுக்க வேண்டும்? நவீன கணினிக்கும் தமிழ் எழுத்துக்கள் ஏற்றவையே என்பதை வாழ்வு நிரூபித்துவிட்டது. 


ஜெயமோகனின் இந்தத் தமிழ்த் துரோகக் கட்டுரையும் கூட தமிழ் எழுத்துக்களில்தாம் அச்சாகியுள்ளது! அதில் ஒரு சிரமமும் இல்லை.தமிழ் எழுத்துக்களை இவர் கைவிடச் சொல்வதன் நோக்கம், அவற்றுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களை ஏற்கச் சொல்வதன் நோக்கம் தமிழ்ச் சமூகத்தை முழுமையாக ஆங்கிலமயமாக்குவதுதான். ஒரு காலத்தில் இந்தச் சமூகத்தை சமஸ்கிருதமயமாக்க தமிழைக் கைவிடச் சொன்னார்கள், அதை “நீச பாஷை”என்றார்கள் வருணாசிரமவாதிகள். இன்றுஜெயமோகன் வகையறாக்கள் ஆங்கிலத்திற்காக அதே காரியத்தைச் செய்யச் சொல்லுகிறார்கள். இவர்கள் நவீன - வருணாசிரமவாதிகள்.இதிலே, தமிழானது “சமஸ்கிருதம் போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாக” ஆகிவிடுமோ என்றும் கண்ணீர் வடித்துக் கொள்கிறார் ஜெயமோகன். இவர் காட்டுகிற ஆங்கில வழிக் கல்வி, ஆங்கில எழுத்துரு எனும் பாதையில் நடந்தால் அது அப்படித்தான் ஆகும். சாகாவரம் பெற ஒரேவழி கழுத்தை அறுத்துக் கொள்வதுதான் என்ற கதையாக உள்ளது!“மெல்லத் தமிழினிச் சாகும்“ என்று ஒரு பேதை உரைத்ததாக வருத்தத்தோடு பாடினான் பாரதி. 


இன்றைக்கு அதைச் சொல்லுகிறவர்களும் பேதைகளே என்பதைத் தமிழர்கள் நிரூபிப்பார்கள். ஆங்கிலவழிக் கல்விக்கான சூழலைத் திட்டமிட்டு உருவாக்கும் ஆட்சியாளர்களின் தவறான மொழிக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவார்கள். கடந்த காலத்திலும் தமிழ் இத்தகைய அபாயத்தைக் கண்டுவந்திருக்கிறது. அதையெல்லாம் தகர்த்தெறிந்துதான் அது தனது அரியணையைத் தக்கவைத்துக் கொண்டது. அதை மீண்டும் இழந்துவிடாதவாறு அது போராடும். அதன் பிள்ளைகளாம் தமிழர்கள் அதற்கான புத்திசாலித்தனமான உத்திகளை வகுப்பார்கள், போர்க்களங்களைச் சந்திப்பார்கள்.“ஆங்கிலம் இங்கே கல்வியின் மொழி” எனும் ஜெயமோகனின் வார்த்தைகள் அவரின் அநியாய ஆசையே தவிர, சரியான கணிப்பு அல்ல என்பதை வரலாறு நிரூபிக்கும்.

நன்றி  -  தீக்கதிர் 10.11.2013

10 comments:

  1. நன்றி திரு.ராமன் அவர்களே.

    ReplyDelete
  2. 10, 15ஆண்டுகளுக்கு முன், துக்ளக் “சோ“ இப்படித்தான் Fஎன்னும் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழ் எழுத்து வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தார்... இவர்களெல்லாம் தெரியாமல் செய்வதாகத் தெரியவில்லை... திடடமிட்டே செய்கிறார்கள், அரசாங்கமும் எதையும் திட்டமிடாமலே செய்வதால் இவர்களின் “சிந்தனை“யும் பேசப்படுகிறது. அருணனின் அவசரப்படாத, அறிவியல் ரீதியான பதில் மிகச்சரியானது. சரியாக அதை எடுத்து வெளியிட்ட தங்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. அருணன் மிக நல்லாவே சொல்லியுள்ளார்.உலக சூழலில் ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தமிழர்கள் கற்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அனைத்துப் பாடங்களையும் தமிழ் மொழி மூலம் தான் தமிழகத்தில் கற்க வேண்டும். உலக நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் கல்வி கற்றுத் தரப்படும் போது
    //இதற்கு நேர்எதிராகத்தான் தமிழர்கள் நடைபோடப் போகிறார்கள் என்று ஒருவர் ஜோசியம் சொல்லுகிறார்.//
    தமிழக சமூகத்தின் போக்கு அப்படி தான் உள்ளது.தமிழக சமூகத்தின் போக்கு உலக நாடுகளின் மக்களின் போக்குக்கு நேர்எதிராக தன் சொந்த மொழியை புறக்கணித்து பதிலுக்கு ஆங்கிலத்தை தழுவுவதை உயர் பெருமையா நினைப்பது உண்மை.

    ReplyDelete
  4. தமிழில் (மட்டும்) கற்று பட்டிமன்றம் நடத்தலாமெ தவிர உருப்படியாக ஒன்றும் கண்டு பிடிக்கவோ, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ முடியாது. என்னக்கேட்டால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இவற்றோடு ஆங்கிலமும் கற்க வேண்டும். அப்போது தான் தேசமும் உருப்படும், சர்வதேச அளவில் நாமும் போட்டியிட முடியும்.
    தமிழில் படித்தவர் எவர் புதிய செல் பேசி நுட்பத்தையோ, தொலைக்காட்சி முறையையோ, கணிப்பொறி மொழியையோ கண்டுபிடித்தார்கள்?
    திண்ணைப் பேச்சுக்கு ஏற்ற மொழி தமிழ் மொழி என்பதை இன்னும் அறியாதத்தான் பரிதாபம்.

    ReplyDelete
  5. ரங்குடு அவர்களே! முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். ஆங்கிலம் கற்க கூடாது என்று இந்த கட்டுரையில் சொல்லப்படவே இல்லை.

    ReplyDelete
  6. மீண்டும் அந்நிய சக்திகள் நம்மை ஆள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஜெயமோகன் ? தாய்மொழி வழி கல்வி மட்டுமே ஒரு மனிதனை அறிவாளியாக உயர்த்தும் என்பதை அறியாதவரா மெத்த படித்த ஜெயமோகன் ?

    ReplyDelete
  7. waste of time to go through jayamohan's report. he wrote to get money. that's all. no need to any discussion on that matter.

    ReplyDelete
  8. சகோ வேகநரி, மன்னிக்கவும். நீங்களும் அருணனும் உங்கள் குழந்தைகளை தமிழ்மீடியத்தில் சேர்ப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.

    ReplyDelete
  9. சகோ நந்தவனத்தான், குழந்தைகளை தமிழ்மீடியத்தில் சேர்ப்பேன். ஆனால் என்ன! மற்ற தமிழர்கள் எல்லாம் இவன் என்ன குழந்தைகளை போயும் போயும் தமிழ்மீடியத்தில் படிப்பிக்கிறானே என்று இழிவாக பார்ப்பார்கள்:(
    இப்படியான ஒரு துயரநிலை உலக நாடுகளில் இல்லை. தமிழக அரசியல்வாதிக்க தமிழ் அழிஞ்சிட்டுது என்று அரசியல் ஆதாயம் செய்ய பயன்படுத்தும் பக்கத்து இலங்கையில் கூட தமிழ் மாணவர்கள் தமிழ்மீடியத்திலும்,சிங்கலவங்க சிங்கள பாஷையிலும் தான் படிக்கிறார்கள்.ஆனா தமிழ்மீடியத்தில் கல்வி கற்பது தண்டமென்றும், ஆங்கிலமீடியத்தில் கல்விகற்றால் உலகை ஆளலாம் என்ற ஒரு நம்பிக்கை இங்கே ஆழமாக பதிந்துள்ளது.
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    உலகநாடுகள் போல் சொந்த பாஷையில் தமிழில் தான்கல்வி. ஒரு மொழியாக, கட்டாய பாடமாக ஆங்கிலத்தை தமிழர்களுக்கு கற்பிக்கபடும். இப்படியான ஒரு நியாயமானநிலையில் ஹிந்தி, சமஸ்கிருதம் என்பவை ஒரு விருப்பு மொழி தெரிவாகவாவது மாணவர்களுக்கு வைப்பது மிக நன்றாயிருக்கும். விருப்பு தெரிவில் விரும்பும் பாஷைகளையும் கற்றுதர வசதி செய்யலாம்.

    ReplyDelete
  10. சுஜாதா, அப்துல் கலாம், விஞ்ஞானி அண்ணாதுரை என இந்தியாவில் சாதித்த பலரும் தாய்மொழியில் கல்வி கற்றோரே. ஆங்கில வழியில் கல்வி கற்ற இந்தியர்கள் இதுவரை குண்டுமணி ஊசியாவாது சுயமாய் உருவாக்கி இருக்கின்றார்களா! ஆண்டுக்கு பல நோபல் பரிசுகள் தாய்மொழியில் கல்வி பயிலும் இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மன், பிரான்சு, அமெரிக்கா, சீனாவில் இருந்தே பெறுகின்றனர்.. என்று தணியுமோ ஆங்கில தாகம் நமக்கு!!! சிந்திக்கும் திறனை அடகு வைத்துவிட்டு எந்த பிற மொழியை தலையில் தேய்த்தாலும் எதையும் பிடுங்கவிட போவதில்லை. நம் அதிகப் பட்ச சாதனை பெட்டி தட்டுவதே..!

    ReplyDelete