மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் மூன்று நாட்கள் கோவை நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
பரமக்குடி
துப்பாக்கி சூடு : சம்பத் கமிஷன் அறிக்கை உண்மைக்கு புறம்பானது - ஏற்க
முடியாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு தீர்மானம்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய
துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துகிற ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன்
அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்)யின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
இரட்டைகுவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்டு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக
செயல்பட்டு வந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்
மீது பரமக்குடியில் ( 2011 செப்படம்பர் 11) காவல்துறை நடத்திய கொடூரமான
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை நேரில்
பார்த்தவர்களும், ஊடகங்களும் மற்றும் தனி நபர்கள் எடுத்த வீடியோ
காட்சிகளும் காவல் துறையின் எல்லை மீறிய அராஜகத்தை வெளி உலகத்திற்கு
ஏற்கனவே கொண்டு வந்துள்ளன.
வழக்கமான போக்குவரத்துகள் முற்றிலுமாக
மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, கடைகள் முழுவதும் காவல்துறையால்
அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகிறவர்கள்
மட்டுமே பரமக்குடி நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 50 பேர் நடத்திய
மறியல் போராட்டத்தை காரணமாக்கி காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு முடிந்து பல மணி நேரம் பரமக்குடி நகரை தனது
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, காவல் துறை நடத்திய அராஜகம்
ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். பரமக்குடி துப்பாக்கிச் சூடு
நிகழ்த்தப்பட்ட சில மணி நேரத்திற்குள் மதுரை மாவட்டம் சிந்தாமணி மற்றும்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் காவல் துறை தலித் மக்கள் மீது நடத்திய
துப்பாக்கிச்சூடு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆகவே தான்,
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களும், போராடுகிற அமைப்புகளும்
சி.பி.ஐ விசாரணை கோரி நீதி மன்றத்திற்கு சென்று தற்போது சி.பி.ஐ விசாரணை
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக அரசால்
நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை 30-10- 2013 அன்று தமிழக
சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி
நாளில் அதுவும் தென் மாவட்டங்களின் பதட்டமான ஒரு தினத்தில் சம்பத் கமிஷன்
அறிக்கை சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது சரியான அணுகுமுறையல்ல,
சம்பத் கமிஷன் அறிக்கை காவல் துறையின் அராஜகத்தை மூடி மறைக்கிறது.
காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள்
மீதே பழி சுமத்துகிறது. உண்மைக்கு மாறாக காவல் துறையை பாதுகாக்கும் சம்பத்
கமிஷன் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு சம்பத் கமிஷன் அறிக்கையை
நிராகரித்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின்
தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment