Monday, November 18, 2013

பாராட்டுரைகளும் பாதகம் செய்வோரும்




சர்வதேச நிதி நிறுவனம் (International Monetary Fund)  இந்திய இன்சூரன்ஸ் துறை பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வருமான அளவுகளைப் பார்க்கையில் மற்ற நிதித்துறை சேமிப்புக்களை விட இன்சூரன்ஸ் துறை நீண்ட கால்தடம் பதித்துள்ளது என்று அந்த அறிக்கை பாராட்டியுள்ளது. மிகவும் நெருக்கடியான சூழலிலும் மிகவும் அற்புதமாக எல்.ஐ.சி செயல்பட்டு வருகின்றது என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன்வைக்கிற வாதங்களோடு  ஐ.எம்.ஃஎப் அறிக்கையுன் உடன்படுகிறது என்பதுதான் இதற்குப் பொருள்.

தேசியமயமாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்ற உறுதியோடு எல்.ஐ.சி 57 வருடங்களாக பாடுபட்டு வருவதால்தான் இன்சூரன்ஸ்துறையின் காலடித்தடம் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது குக்கிராமங்களில் கூட தென்படுகின்றது. 1956 ல் தன் பயணத்தை துவக்கிய எல்.ஐ.சி நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களில் நம்பிக்கை எனும்  தீபத்தை ஏற்றி வைத்து ஓளி வீசச்செய்துள்ளது.

வறுமையின் அளவு அதிகமாகவும் வருமானத்தின் அளவு குறைவாகவும் உள்ள இந்த தேசத்தில்தான் 30 கோடி பேருக்கு தனி நபர் காப்பீடும்  10 கோடி பேருக்கு குழுக்காப்பீடும் வழங்கியுள்ளது எல்.ஐ.சி. இவற்றில் பெரும்பான்மை காப்பீடு கிராமப்புறங்களில்தான் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.எம்.ஃஎப் சொல்கிற காலடித்தடத்திற்கு சொந்தக்காரர்கள் எல்.ஐ.சி யும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே.

ஐ.எம்.ஃஎப் அறிக்கை வேறு பல அம்சங்களைப் பற்றியும் சொல்கிறது. பல முன்னேறிய நாடுகளில் இன்சூரன்ஸ் ஆயுள் நிதி என்பதை ஒட்டு மொத்த உற்பத்தியில் மிகவும் குறைவாக உள்ள போது எல்.ஐ.சி யின் முதலீடுகள் மட்டுமே ஒட்டு மொத்த உற்பத்தியில் 16 % க்கும் மேல் உள்ளது. தனி நபர் வருமானம் இந்தியாவை விட பத்து மடங்கு அதிகமாக உள்ள நாடுகளை விட இந்திய இன்சூரன்ஸ்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ சொல்வதை ஐ.எம்.ஃஎப் அறிக்கையும் ஒப்புக்கொள்கிறது.

2004 ல் சீனாவில் 2.2 % ஆக இருந்த இன்சூரன்ஸ் ஊடுறுவல் 2010 ல் 2.5 % ஆக உயர்ந்துள்ளது. அதே போல பிரேசிலில் 1.4 % ஆக இருந்த இன்சூரன்ஸ் ஊடுறுவல் 2010 ல் 1.6 % ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவில் 2.5 % ஆக இருந்த இன்சூரன்ஸ் ஊடுறுவல் 4.4 % ஆக உயர்ந்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் ஊடுறுவலில் சீனாவில் 13.63 % ஆகவும் பிரேசிலில் 14.28 % ஆகவும் உள்ள வளர்ச்சி இந்தியாவில் மகத்தான அளவில் 76 % என்று உள்ளது.

அந்த ஆய்வு எல்.ஐ.சி யின் இதர செயல்பாடுகளைப் பற்றியும் அலசுகிறது. மற்ற தனியார் நிறுவனங்களில் நிர்வாக செலவினம் என்பது பிரிமிய வருமானத்தில் 20.9 % என்ற அளவில் உயர்ந்து இருக்கும்போது எல்.ஐ.சி யிலோ நிர்வாக செலவினம் என்பது வெறும் 6.6 % மட்டுமே. இதன் மூலம் எல்.ஐ.சி தன் பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பலன்களை உருவாக்குகிறது. அதனால்தான் 12 ஆண்டு கால போட்டிக்குப் பின்பும் சந்தைப் பங்கில் முதல் பிரிமிய வருமானத்தில் 72 % ஐயும் பாலிசிகள் எண்ணிக்கையில் 80 % ஐயும் எல்.ஐ.சி யே வைத்துக் கொண்டு இன்சூரன்ஸ் சந்தையின் தலைவராக  மட்டுமல்லாது சந்தையை உருவாக்குபவராகவும் உள்ளது. அதன் கேட்புரிம பட்டுவாடாவிற்கு ஈடு இணையாகவே உலகிலேயே யாரும் இல்லை. அதனால்தான் ப.சிதம்பரமே மகுடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் என்று புகழ வேண்டியிருந்தது. 

சர்வதேச நிதி நிறுவனம் மட்டும் இந்திய இன்சூரன்ஸ் துறையை பாராட்டவில்லை. இன்சூரன்ஸ் பரவலாக்கலில் இந்தியாவிற்கு முதலிடம் அளிக்கிற அறிக்கையை உலக பொருளாதார அமைப்பும் கூட வெளியிட்டிருந்தது. எல்.ஐ.சி யின் செயல்பாடே இந்திய இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடாக உள்ளது.

இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதாய் தேசியமயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு இருந்தாலும் இன்சூரன்ஸ்துறையின் கதவுகளை பன்னாட்டு மூலதனத்திற்கு திறந்து விட மத்திய ஆட்சியாளர்கள் ஏன் தவியாய் தவிக்கிறார்கள்?

ஒரு தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்சூரன்ஸ்துறை முக்கிய பங்காற்றுகிறது. மக்களின் சேமிப்பை திரட்டி தேச வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்புத் தேவைகளுக்கு பயன்படுத்த ஆயுள் காப்பீடு உதவுகிறது. எந்தவிதமான சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லாமல் 92 % உழைப்பாளி மக்கள் இருக்கும் நம் தேசத்தில் எல்.ஐ.சி மட்டுமே அவர்களுக்கு வெளிச்சக் கீற்றாக இருக்கிறது. தேசத்திற்கு எல்லைக்கு அப்பால் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ராணுவம் போல மக்களுக்கு வரும் துயரங்களிலிருந்து காப்பதாக அமைந்துள்ள இன்சூரன்ஸ்துறை இயல்பாகவே அரசின் வசமே இருக்க வேண்டும் என பல வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் நிதியமைச்சரும் மற்ற உலகமயமாக்கல் ஆதரவாளர்களும் இதை வெறும் தத்துவமாக தள்ளி விடப் பார்க்கிறார்கள். பொருளாதார யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இத்தத்துவம் அமைந்துள்ளது என்பதை உணர்ந்தாலும் தெரியாதது போல நடிக்கிறார்கள்.

சந்தையே எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொள்ளும் என்ற உலகமயக் கொள்கையின் வீழ்ச்சியை சர்வதேச பொருளாதார நெருக்கடி நிரூபித்தாலும் அரசு அதனிடமிருந்து பாடம் கற்கத் தயாராக இல்லை. அறிவுஜீவிகளின் விவாதங்களும் உழைப்பாளி மக்களின் போராட்டங்களும் உலகமயத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

சர்வதேச நிதி நிறுவனமும் உலகப் பொருளாதார அமைப்பும் எந்தக் காரணங்களுக்காக  பாராட்டுகின்றதோ அதற்காகவே இந்த பெருமை மிகு நிறுவனங்களை காவு கொடுக்க முயல்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் வலிமையாக இருக்கும்வரை தனியார் நிறுவனங்களால் கோலோச்ச முடியாது என்பதற்காக அவற்றை சிதைக்கப் பார்க்கிறார்கள். அன்னிய மூலதனத்திற்கு கூடுதல் இடம் அளிப்பதன் மூலம் ஏராளமான வளங்களை கைப்பற்றி பொதுத்துறை நிறுவனங்களை போட்டியிலிருந்து வெளியேற்றுவது என்பதுதான் அவர்களின் உத்தி. இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவு உயர்வு என்பது அதையொட்டித்தான்.

உலகமயக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் எந்த முரண்பாடும் கிடையாது. பல சந்தர்ப்பங்களில் இருவரும் கரம் கோர்த்தே செயல்பட்டுள்ளனர். ஆனால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து மக்களிடம் மேற்கொண்டு வரும் விரிவான போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் அவர்கள் மத்தியிலும் தயக்கத்தை உருவாக்கியுள்ளது. நம் போராட்டங்கள் மூலமே அன்னிய மூலதன உயர்வை பத்தாண்டுகளாக தடுத்த பெருமை நமக்கு உண்டு. மேலும் வேகமாய் இயக்கங்களை தொடர்வோம். பாதகச் செயல்களை தடுத்து நிறுத்துவோம்.

( இன்சூரன்ஸ் வொர்க்கர் நவம்பர் இதழில் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான் எழுதிய கட்டுரையிலிருந்து முக்கியமான பகுதிகள்)  

No comments:

Post a Comment