Sunday, November 17, 2013

நெகிழ்ச்சியான வழியனுப்புதல்

சமீபத்தில் மறைந்த கிராமியக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி
அவர்களுக்கு பல தோழர்கள் செலுத்திய நெகிழ்ச்சியான அஞ்சலி
செய்திகள் கீழே.

இவ்வளவு மகத்தான கலைஞரின் மறைவு வருத்தமளிக்கிறது.
இந்த கலைஞரின் ஒரு நிகழ்ச்சியைக் கூட பார்க்கும் வாய்ப்பு
கிடைக்கவில்லையே என்பது இன்னும் சோகத்தை கூட்டுகிறது.

Photo: கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. மேடைக்குப் பின்னால், காதுகளில் பாம்படம் தொங்க கால்களை ஆட்டிக்கொண்டு கடகடவென சிரித்தபடி அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்தக் கிழவியைக் காண வேடிக்கையாக இருந்தது. கிராமியக் கலைக்குழுவினருக்கு உதவியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன்...

நிகழ்ச்சி தொடங்கியதும் மேடையில் ஏறினார் அந்தக் கிழவி. அடேயப்பா... என்ன ஆட்டம்! எவ்வளவு நையாண்டி! அரசியலும் சமூக நிலைமைகளும் வெகு எளிதாக மக்கள் மொழியில் விமர்சிக்கப்படுகின்றன. காதுகளில் தொங்கும் பாம்படங்களை வேகமாக ஆட்டுவதே கூட ஆட்டத்தின் ஒரு பகுதியாய் மக்களைக் கவர்கிறது.

“என்னம்மா தேவி சக்கம்மா
உலகம் தலைகீழா தொங்குதே நியாயமா...
சின்னப்புள்ளையெல்லாம் சிகரட்டு பிடிக்குது
சித்தப்பன்மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது...”
-என்று அந்தக் கட்டைக்குரலில் அவரும் சேர்ந்திசையாக துணைக் கலைஞர்களும் பாடி முடித்தபோது பார்வையாளர்கள் மறுபடியும் அதைப் பாடக் கேட்டுக்கொண்டார்கள். தன் பாடல்களைத் தானே புனைந்துகொள்கிற மொழித்திறன் பெற்றிருந்த பாவலர் ஓம் முத்துமாரி இப்படியாகத்தான் எனக்கு அறிமுகமானார். மதுரைக்கு வருகிறபோதெல்லாம் ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு வந்துவிடுவார். ஆசிரியர் கே. முத்தையாவுடனும் எங்களுடனும் அரசியல் நிலைமைகள் குறித்தும் அவற்றைத் தனது நிகழ்ச்சிகளில் சேர்ப்பது குறித்தும் கலந்தாலோசிப்பார். புதிய பாடல்கள் எழுதினால் தீக்கதிர் வண்ணக்கதிர் இணைப்பில் வெளியிடுவதற்காக அனுப்புவார்.

கூத்துக் கலை நலிவடைந்துகொண்டிருப்பது பற்றி மற்றவர்கள் புலம்பிக்கொண்டிருந்தபோது சமகால கண்ணோட்டத்துடன், சமுதாய அக்கறையுடன் அதற்குப் புதுப்பொலிவு அளித்த முன்னோடிக் கலைஞர். கண்டுகொள்ளப்படாத கூத்துக் கலைஞர்களுக்கு அரசு அங்கீகாரமும் நிதியுதவியும் கிடைத்திட உழைத்தவர். புதிய முயற்சிகளை மனமுவந்து வரவேற்றவர்.

மக்களைப் பற்றிப் பேசுகிற கூத்துக் கலையின் ஒரு அடிவேராய் என்றும் நினைக்கப்பட்டிருப்பார் பாவலர் ஓம் முத்துமாரி.

தோழர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ

 தமிழகத்தின் சிறந்த கிராமியக்கலைஞரும் மக்கள் கலைஞருமான தோழர் ஓம்முத்துமாரி இன்று மாலை 5மணிக்கு சங்கரன் கோவிலுக்கு அருகில்உள்ள திருவேங்கடத்தில் காலமாகியுள்ளார். நல்ல பல கருத்துகளை, முற்போக்கான கருத்துகளை மக்கள் மொழியில் அதுவும் கிராம மக்களின் மொழியில் பாடி சென்றுள்ள அந்த கிராமிய கலைஞனுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி.

 தோழர் இரா.தெ.முத்து
  
நம் காலத்தின் மகத்தான கூத்துக் கலைஞர் பாவலர் தோழர் ஓம் முத்துமாரி தனது 90 ஆவது வயதில் சற்று முன் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடத்தில் மறைந்தார்.

தனது இருபதாவது வயதில் காலில் கட்டிய சலங்கையை, இறுதிக் காலம் வரையிலும் நீண்ட எழுபது ஆண்டுகள் முற்போக்கு இயக்கத்திற்கான மேடைகளில் சமுக சீர்திருத்த மேடைகளில் ஒலித்துக் கொண்டே இருந்தார்

1987 களில் நெல்லை மாவட்ட தமுஎச வோடு தொடர்பு உருவாக்கிக் கொண்டவர், அடுத்தடுத்து அமைப்பின் மாவட்ட, மாநில தலைவர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு 1992ல் அவர் பாடிய பாபருக்கா?இந்த இடம் ராமருக்கா?பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல் ஆகும்.சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த முத்துமாரி,போன ஆண்டு தமுஎகச வின் சிறந்த கூத்துக் கலைஞருக்கான நாட்டுப்புற கலைச்சுடர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

நாளை திருவேங்கடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது என்று அமைப்பின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்

மகத்தான கலைஞருக்கு நம் வீரவணக்கத்தை செலுத்துவோம்

தோழர்  வெண்புறா சரவணன்

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்"... என்ற பாடலின் முதல் மூன்றுவரியை சக கலைஞர் பாட ஆரம்பித்தவுடன் எம்.ஆர். ராதா போன்று கரகர குரலால், ஏய் நிறுத்து நிறுத்து... அதாவது மண்ணாப் போவ, மரமாப் போவ, கல்லாப் போவ, எப்பதாண்டா மனுசனா ஆவ? என்று கேட்டு அப்படியே கூட்டத்தை நோக்கி கையை நீட்ட, கைதட்டும் விசிலும் காதுகிழியும். நம் ஆதிக் கலையான கூத்து மரபிலிருந்த புராணக் கருத்தாக்கங்களில் பெரும் உடைப்பை ஏற்படுத்தி, அதில் மார்க்சியக் கருத்துக்களை கலையம்சம் துளியும் குறையாமல் எளிமையாய் விதைத்தவர் பாலர் ஓம் முத்துமாரி. பாடல் முகாம்களில், அள்ளிமுடிந்த கொண்டையும் தோளில் சிவப்புத் துண்டுமாய் அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து பேனாவைத் திறந்தால் பாட்டு ரெடி. நக்கல், துள்ளல் இசையுடன் சமகால அரசியலை தோலுரிப்பார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, திருவேங்கடம் கலை இரவுக்காக ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது, "தோழர் இன்னிக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு" என்றார். வீடு எங்க பாவலரே என்றேன். பொக்கை வாயால் சிரித்துவிட்டுச் சொன்னார் "இப்டியே கீழ எறங்கி அங்கிட்டாம நேர நடங்க, எந்த வீட்ல செங்கொடி பறக்குதோ அதுதான் நம்ம வீடு"!

 தோழர் அ.குமரேசன்

 கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. மேடைக்குப் பின்னால், காதுகளில் பாம்படம் தொங்க கால்களை ஆட்டிக்கொண்டு கடகடவென சிரித்தபடி அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்தக் கிழவியைக் காண வேடிக்கையாக இருந்தது. கிராமியக் கலைக்குழுவினருக்கு உதவியாக வந்திருக்கிறார் என்று நினைத்தேன்...

நிகழ்ச்சி தொடங்கியதும் மேடையில் ஏறினார் அந்தக் கிழவி. அடேயப்பா... என்ன ஆட்டம்! எவ்வளவு நையாண்டி! அரசியலும் சமூக நிலைமைகளும் வெகு எளிதாக மக்கள் மொழியில் விமர்சிக்கப்படுகின்றன. காதுகளில் தொங்கும் பாம்படங்களை வேகமாக ஆட்டுவதே கூட ஆட்டத்தின் ஒரு பகுதியாய் மக்களைக் கவர்கிறது.

“என்னம்மா தேவி சக்கம்மா
உலகம் தலைகீழா தொங்குதே நியாயமா...
சின்னப்புள்ளையெல்லாம் சிகரட்டு பிடிக்குது
சித்தப்பன்மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது...”
-என்று அந்தக் கட்டைக்குரலில் அவரும் சேர்ந்திசையாக துணைக் கலைஞர்களும் பாடி முடித்தபோது பார்வையாளர்கள் மறுபடியும் அதைப் பாடக் கேட்டுக்கொண்டார்கள். தன் பாடல்களைத் தானே புனைந்துகொள்கிற மொழித்திறன் பெற்றிருந்த பாவலர் ஓம் முத்துமாரி இப்படியாகத்தான் எனக்கு அறிமுகமானார். மதுரைக்கு வருகிறபோதெல்லாம் ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு வந்துவிடுவார். ஆசிரியர் கே. முத்தையாவுடனும் எங்களுடனும் அரசியல் நிலைமைகள் குறித்தும் அவற்றைத் தனது நிகழ்ச்சிகளில் சேர்ப்பது குறித்தும் கலந்தாலோசிப்பார். புதிய பாடல்கள் எழுதினால் தீக்கதிர் வண்ணக்கதிர் இணைப்பில் வெளியிடுவதற்காக அனுப்புவார்.

கூத்துக் கலை நலிவடைந்துகொண்டிருப்பது பற்றி மற்றவர்கள் புலம்பிக்கொண்டிருந்தபோது சமகால கண்ணோட்டத்துடன், சமுதாய அக்கறையுடன் அதற்குப் புதுப்பொலிவு அளித்த முன்னோடிக் கலைஞர். கண்டுகொள்ளப்படாத கூத்துக் கலைஞர்களுக்கு அரசு அங்கீகாரமும் நிதியுதவியும் கிடைத்திட உழைத்தவர். புதிய முயற்சிகளை மனமுவந்து வரவேற்றவர்.

மக்களைப் பற்றிப் பேசுகிற கூத்துக் கலையின் ஒரு அடிவேராய் என்றும் நினைக்கப்பட்டிருப்பார் பாவலர் ஓம் முத்துமாரி.

சுப்ரமணியன் ராமகிருஷ்ணன்
 
 பல்லுப் போன பொக்கைவாய்ச் சிரிப்பு யாரையும் ஈர்க்கும்....பல்லுக்கட்டினாலென்ன என்று கேட்டதற்கு பொக்கைவாய்ச் சிரிப்பே பதில்...ஒருவேளை பல்லுக்கட்டினால் கூட இந்த வசீகரஅழகு இருந்திருக்காதோ என்னவோ.... நெல்லை த.மு.எ.ச. மா நில மா நாட்டின் கலை இரவில் நண்பர் லியோனி மிமிக்ரி நிகழ்ச்சி செய்து கொண்டு இருந்தார்... முன் வரிசையில் முத்துமாரி சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்... இறுதியாக முத்துமாரி மாதிரி லியோனி கரகரத்த குரலில் பேசுவார் என்று யாரும் எதிர்பாராத போது....குழந்தைபோன்று விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்ததை எண்ணும்போது இப்போதும் நெகிழ்கிறேன்

No comments:

Post a Comment