நீண்ட காலத்திற்குப் பின்பு இன்று தீபாவளியன்று இன்று
வெளியான ஒரு திரைப்படத்திற்கு சென்றேன். விஷால்
தயாரித்து, நடித்து சுசீந்திரன் இயக்கிய " பாண்டிய நாடு"
திரைப்படத்திற்கு மதியம் 3 காட்சிக்கு குடும்பத்துடன்
சென்றிருந்தேன்.
மாமூலான பழி வாங்கல் கதை கொஞ்சம் வித்தியாசமாக
எடுத்துள்ளார் சுசீந்திரன். பாரதிராஜாவின் நடிப்பு சூப்பர்.
மதுரை மண்ணில் கிரானைட் ஊழல், மந்திரி எல்லாம்
காண்பிப்பது எதையோ நினைவு படுத்துகிறது. விஷால்
நடிப்பு பரவாயில்லை. லட்சுமி மேனனை விரயம் செய்து
உள்ளனர். பாடல்கள், பின்னணி இசை தண்டம்.
தீபாவளி ரிலீஸ் படங்கள் பற்றி கொஞ்சம் மலரும்
நினைவுகள் தானாகவே வந்து விட்டது.
இதற்கு முன்பாக தீபாவளியன்று வெளியான படத்தை
அன்றே பார்த்தது என்பது "ஆஹா" தான். கிட்டத்தட்ட
பதினாறு வருடங்கள் இருக்கலாம். தொலைக்காட்சி
ரொம்பவும் போரடித்ததால் போய்ப் பார்த்த படம் அது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கூட்டம் கொஞ்சம்
குறைவாக உள்ள தியேட்டராக பார்த்து போனோம்.
ஆனால் நல்ல காமெடி படம். கேட்கும் திறன் இல்லாத
பெரியவரோடு சாவு வீட்டில் டெல்லி கணேஷ் பேசும்
காட்சியை மறக்க முடியுமா என்ன?
நெய்வேலியில் ஒரு காலத்தில் தீபாவளி ரிலீஸ்
என்பதற்கு வாய்ப்பே கிடையாது. என்.எல்.சி
நிர்வாகம் நடத்திய அமராவதி தியேட்டரில் எந்த ஒரு
திரைப்படமும் ஆறு மாத காலத்திற்கு பிறகுதான் வரும்.
தேவி ரத்னா என்ற புதிய திரையரங்கம் வந்த பின்புதான்
புதுப்படம் பார்க்கும் யோகமே நெய்வேலி மக்களுக்கு
கிடைத்தது.
அப்படி பார்த்த திரைப்படம் "குணா". ரசிகர்களின்
ஆரவாரத்தில் முதல் நாள் பார்க்கையில் வசனமோ,
இசையோ காதில் விழவேயில்லை. ஒரு பத்து
நாட்களுக்கு பின்பு மீண்டும் ஒரு முறை பார்த்த
போதுதான் சினிமாவும் புரிந்தது. இளையராஜாவின்
பின்னணி இசை உச்சத்தில் இருந்த திரைப்படத்தில்
குணாவும் ஒன்று.
அதற்கு முன்பாக பார்த்த படம் என்பது கமலஹாசன்
நடித்த "மனிதரில் இத்தனை நிறங்களா". கல்லூரி
முதலாண்டு என்பது ஞாபகம். பைலட் பிரேம்நாத,
சிகப்பு ரோஜாக்கள், தப்புத் தாளங்கள், வண்டிக்காரன்
மகன், தங்க ரங்கன் (தேங்காய் ஸ்ரீனிவாசன் கதாநாயகனாக
நடித்த திரைப்படம்) என்று பல படங்கள் அன்று
வெளியானாலும் ஆசியாவின் பிரம்மாண்டமான
தியேட்டரான தங்கம் தியேட்டரில் வெளியான
"மனிதரில் இத்தனை நிறங்களா" படத்திற்கு மட்டுமே
டிக்கெட் கிடைத்தது. அந்தப் படத்தின் கதை என்ன என்று
சத்தியமாக எனக்கு புரியவில்லை. இரண்டாவது முறை
பார்க்கும் தைரியமும் வரவில்லை. மழை தருமோ என்
மேகம் என்ற எஸ்.பி.பி யின் இனிமையான பாட்டு
மட்டும் நினைவில் உள்ளது.
காரைக்குடியில் இருக்கும் போது பார்த்தது இரண்டு
தீபாவளி திரைப்படங்கள்.
எம்.எஸ்.வி யின் இனிமையான இசையில் ஜெயச்சந்திரன்,
ஜானகி பாடிய வசந்த கால நதியலைகளையும்
ஆடி வெள்ளியையும் விரும்பாதவர்கள் யாராவது உண்டா?
கமலஹாசன், ரஜனிகாந்த், ஸ்ரீதேவி, கல்கத்தா விஸ்வநாதன்
ஆகியோர் கலக்கிய மூன்று முடிச்சு. வெறுப்பை உருவாக்கும்
அளவிற்கு ரஜனிகாந்தின் நடிப்பு இருந்ததள்ளவா?
இன்னும் ஒரு தீபாவளி ரிலீஸ் படம் உண்டு. என் இரண்டாவது
அக்காவின் தலை தீபாவளி அன்று. கஷ்டப்பட்டு
அனுமதி வாங்கி, கூட்டத்தில் முண்டியடித்து, வியர்வை
மழையில் மதியக்காட்சி பார்த்து விட்டு வந்தேன். அன்று
இரவுக்காட்சி குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும்
புறப்பட்டனர். நானும் வருகிறேன் என்று அடம் பிடிக்க
பார்த்த படத்தையே மறுபடி பார்க்க வேண்டிய அவசியம்
இல்லை என்று அதட்டல் போட்டு விட்டு போய் விட்டார்கள்.
நான் தூங்கி விட்டேன்.
திரைப்படம் பார்த்து விட்டு வந்தவர்கள் தூங்கிக் கிடந்தவனை
மெனக்கெட்டு எழுப்பி " இந்த சினிமாவையா ரெண்டாவது
தடவை பார்க்க புறப்பட்ட?" என்று நக்கலாக வேறு கேள்வி
கேட்டார்கள்.
அந்தப்படம் விஸ்வரூபம்.
கமலஹாசனுடையது அல்ல.
சிவாஜி இரு வேடங்களில், ஸ்ரீதேவி, சுஜாதாவுடன் நடித்தது.
இப்போ ஒரு தபா விஸ்வரூபம் பாத்துட்டு எழுதுப்பா
ReplyDelete