Monday, November 4, 2013

மதம் மாறினால் மட்டுமல்ல மாநிலம் மாறினாலும் சலுகை பறி போய் விடும்!!!!!!!



சமீபத்தில் உச்ச நீதி மன்றத்திற்கு வந்த வழக்கு இது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியிலினத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி கணவன் வாழும் உத்தராஞ்சல் மாநிலத்திற்கு சென்று விடுகிறார். அங்கே அந்தப் பெண் அரசுப் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஆனால் அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று காரணம் சொல்லப்பட்டது. இதிலே அந்தப் பெண் எந்த இனத்தைச் சேர்ந்தவரோ, அந்த இனம் உத்தராஞ்சல் மாநில பட்டியிலின அட்டவணையிலும் இடம் பெற்றுள்ளது. அந்தப் பெண்ணின் கணவரும் அதே இனத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும் அப்பெண்ணிற்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஒரு மாநிலத்தில்  எஸ்.சி பட்டியலிலோ அல்லது எஸ்.டி பட்டியலிலோ இணைந்துள்ள ஒரு இனம் இன்னொரு மாநிலத்தின் பட்டியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல இல்லாமலும் உள்ளது. அதனால் ஒரு மாநிலத்தில் பெற்ற எஸ்.சி சான்றிதழ் கொண்டு இன்னொரு மாநிலத்தில் கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ இட ஒதுக்கீட்டுச் சலுகையை பெற முடியாமல் போவதற்கான நிலைமை உள்ளது. ஆனால் இரு மாநிலங்களிலும் பட்டியலில் இருக்கும்போது சலுகைகளை மறுப்பது சரியாக இருக்குமா?

மதம் மாறுகிற போது சலுகைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால் மதம் மாறினாலும் சமூக சூழல் மாறவில்லை என்பதால் தலித் கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னுக்கு வரும் வேலையில் மாநிலம் மாறினால் மட்டும் சமூக அந்தஸ்து மாறி விடவா போகிறது?.

ஆனால் உச்ச நீதிமன்றத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பதும் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு ஆலோசனை சொல்லியுள்ளது என்பதே இப்பிரச்சினையின் சிக்கலை காண்பிக்கிறது.

பார்ப்போம் இறுதி முடிவு எப்படி வருகிறது என்று.

No comments:

Post a Comment