Tuesday, November 26, 2013

கொலையும் செய்வாளா அன்னை?


பரபரப்பான ஆருஷி தல்வார் கொலை வழக்கில் அவளது பெற்றோரே குற்றவாளி என்று சி.பி.ஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17 வயது மாணவியின் சடலம் முதலில் கண்டெடுக்கப் படுகின்றது. காணாமல் போன பணியாள் ஹேம்ராஜ் தான் கொலை செய்திருப்பான் என்று நம்பப்பட்ட சூழலில் ஹேம்ராஜின் சடலமும் இரண்டு நாட்கள் கழித்து கண்டெடுக்கப் படுகிறது. பூட்டி வைத்த வீட்டில் யார் கொலை செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் எழ ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

கொலை செய்த காரணத்திற்காகவும் கொலைக் குற்றத்தின் தடயங்களை மறைத்த காரணத்திற்காகவும் ஆருஷியின் பெற்றோர்கள் கைது செய்யப் படுகின்றனர். இப்போது அவர்கள்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு என்று இன்னும் நீண்ட நாட்கள் வழக்கு பயணம் செய்யும். ஏனென்றால் அவர்கள் பணம் படைத்தவர்கள். சட்டம் தன் கடமையை சரியாக  செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சட்டம் அளிக்கும் தண்டனையை விட அந்தப் பெற்றோருக்கு மனசாட்சி அளிக்கும் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். கொலை செய்த குற்றத்தை விட கொலை செய்யும் சூழலை உருவாக்கியதுதான் அவர்கள் செய்த பெரும் குற்றமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு பெற்றோருக்குமான பாடமாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரே மகளை கொலை செய்ய வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது. தங்கள் மகளை பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததுதான் காரணம் என்று சி.பி.ஐ சொன்னதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பணத்தின் பின்னால் அலையும் வேளையில் பிள்ளைகள் மீதான கவனத்தை இழந்து விடுகின்றார்கள். அவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா என்பதை பார்க்கக் கூட அவகாசமில்லாமல் பண வேட்டை முக்கியமாக போய் விட்டது.

உலகமயம் இன்று கொண்டு வந்துள்ள பல நச்சுக்களில் கலாச்சார சீர்கேடு என்பது முதன்மையானது. பார்ட்டி கலாச்சாரம், பப்களில் நடனம், விடிய விடிய ஊர் சுற்றுவது என வாலிபப் பருவ மகிழ்ச்சிக்கு பல புதிய வடிகால்கள் வந்து விட்டன. வெளியே செல்லாமலேயே வீட்டிலேயே தடுமாற இணைய தளம் எண்ணற்ற கதவுகளை திறந்து வைத்து வருகிறது. சலனத்திற்கு வாய்ப்பளிக்கிறது. தனிமையின் கொடுமை தடம் புரள அழைக்கிறது. பணத்திற்காக பாசத்தை பின்னுக்கு தள்ளுகையில் பரிதாபத்திற்குரிய குழந்தைகள் வழி மாறி போகின்றார்கள். போக வைப்பதும் இவர்கள்தான்.

கவனிப்பை, கண்காணிப்பை உரிய நேரத்தில் கைகழுவிவிட்டு  பாசத்திற்கு ஏங்கிய பிள்ளை படி தாண்டி சென்ற பின்னர் கத்தியை தூக்கி எஞ்சிய காலமெல்லாம் கண்ணீரில் மிதப்பதில் என்ன லாபம்?

1 comment:

  1. மாயமானை துரத்தியகதை தான் இன்றைய இந்தியனின் நிலை.பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா என்ற பழைய பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete