Sunday, November 3, 2013

நடிகைகள் என்றால் என்ன அவ்வளவு இளக்காரமா?

கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஒரு பெரிய சர்ச்சையாக
விவாதிக்கப்பட்டு வருகின்றது.

கேரள நடிகை ஸ்வேதா மேனனிடம் காங்கிரஸ் கட்சியின்
கொல்லம் தொகுதி எம்.பி பீதாம்பர குரூப் தவறாக நடந்து 
கொண்டுள்ளார். அந்த காணொளியை நானும் பார்த்தேன்.

ஒரு பொது நிகழ்வில் அந்தப் பெண்ணை நெருங்கவும்
தொடவும் அவர் முயற்சிக்கிறார். கொஞ்சம் ஒதுங்கி நிற்கச்
சொல்லி அந்த பெண் சைகை காண்பிப்பதும் நம்மால்
உணர முடிகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற அனைவரும்
உற்சாகமாக இருக்கையில் அந்த "பெரிய" மனிதனின் 
கண்ணில் மட்டும் சபலம் நிரம்பி வழிகிறது. 

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து
உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிற வழிகாட்டுதல்களின்
அடிப்படையில் பார்க்கையில் "தவறான தொடுதல்கள்"
செய்த அந்த எம்.பி யின் நடத்தை கண்டிப்பாக ஒரு
குற்றம். 

கேரள அரசும் காங்கிரஸ் கட்சியும் என்ன நடவடிக்கை
எடுக்கப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாளில்
தெரிந்து விடும் என்று நம்புகிறேன். சூரிய நெல்லி 
விவகாரத்தில் பி.ஜே.குரியனை காத்து வருவது போல
குரூப்பிற்கும் பாதுகாப்பு வளையம்  கிடைக்குமா என்பதும்
தெரிந்து விடும்.

இதிலே பலர் வெளியிட்டுள்ள கமெண்டுகள்தான் மிகவும்
பிற்போக்குத்தனமாக உள்ளது. நடிகை என்பதால் அவ்வாறு
நடந்து கொண்டிருப்பாரோ என்ற ரீதியில் சிலர் எழுதுவது
குரூப்பினை தப்ப வைத்து அந்த பெண்ணையே குற்றவாளி
என்று சித்தரிக்கும் மோசமான  செயல்.

ஒரு மாலைப் பத்திரிக்கை, இதில் என்ன ரகசியம் வேண்டிக்
கிடக்கிறது! தமிழ் முரசு தன் போஸ்டரில் "கவர்ச்சி நடிகையிடம்
தவறாக நடந்து கொண்ட அரசியல்வாதி" என்று தலைப்புச்செய்தி
வெளியிட்டுள்ளது. கவர்ச்சி நடிகை என்று சொல்வதன் மூலம்
குரூப்பின் மீது அவ்வளவு கோபம் வராமல் பார்த்துக் கொள்ள
முயல்கிறது. ஆனால் கவர்ச்சிப்படம் இல்லாமல் தமிழ் முரசு
வெளி வருவதேயில்லை.

சரி, நடிகை என்றால் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்
உரிமையை யார் அளித்தார்கள்? எந்த சட்டத்தில் அதற்கு இடம்
உள்ளது?

மனதில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க வக்கிரமே நடிகைதானே
என்று சொல்ல வைக்கிறது.

4 comments:

  1. யார் செய்தாலும் தவறு தவறுதான்.

    ReplyDelete
  2. கவர்ச்சி நடிகையின் படத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பத்திரிக்கைக்கும் அந்த அரசியல்வாதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, அதனால் தான் அந்த பத்திரிக்கை அரசியல்வாதியை விட கேவலமாக நடந்து கொள்கிறது

    ReplyDelete
  3. இவர்களையெல்லாம் நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும்

    ReplyDelete
  4. நடிகை என்றால் என்ன யாராகயிருந்தால் என்ன அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் உரிமையை யாருக்கும் கிடையாது.

    ReplyDelete