Monday, July 1, 2013

மருத்துவர்களை வாழ்த்துவோம், வசூல் ராஜாக்களை ?

இன்று மருத்துவர்கள் தினம்.

உயிர் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து
மருத்துவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

மருத்துவர் தினம் தொடர்பாக முகநூலில் பல வாழ்த்துக்களையும்
படித்தேன். பல நக்கல், நையாண்டிகளும் இருந்தது.

வசூல் ராஜாக்களை கிண்டல் செய்வதில் தவறில்லை. அதற்காக
ஒட்டு மொத்த மருத்துவர்களையும் கிண்டலடிப்பது என்பது
சரியான பார்வை இல்லை.

சேவை மனப்பான்மையோடு, நோயாளிகளுக்கு உதவும் 
சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருக்கிற ஏராளமான 
மருத்துவர்கள் ஒவ்வொரு ஊரிலும் செயல்பட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள். 

நான் வேலூர் வந்த புதிதில் பிரகாசம் என்ற குழந்தை 
மருத்துவர் இருந்தார். யாராக இருந்தாலும் ஏழு ரூபாய்தான்
வாங்குவார். மாத்திரைகளும் அவரே கொடுத்து விடுவார்.
துரதிர்ஷ்டவசமாக ஒரு தீ விபத்தில் அவர் காலமாகி விட்டார்.

இருபது ரூபாய், இருபத்தி ஐந்து ரூபாய் மட்டும் வாங்கும்
டாக்டர்கள் இப்போதும் உள்ளனர். தேவையற்ற செலவு
வைக்காத மருத்துவமனைகளும் இப்போதும் இருக்கின்றன.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியல் மீது மிகக்
கடுமையான விமர்சனம் இருந்த போதிலும் அவரும்
குறைந்த கட்டணம் வாங்கிய ஒரு மருத்துவர் என்பதையும்
குறிப்பிட்டேயாக வேண்டும்.

வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையிலேயே பல அனுபவம்
எனக்கு உண்டு. அனேகமாக சிசேரியன் ஆபரேஷன் குறைவாகவும்
நார்மல் சுகப்பிரசவம் அதிகமாகவும் உள்ள மருத்துவமனை 
அதுவாக மட்டுமே இருக்கலாம்.

வசூல் ராஜா டாக்டர்கள் என்று மேலோட்டமாக சொல்பவர்கள்
அப்படிப்பட்ட வசூல் ராஜாக்களை யார் உருவாக்குகிறார்கள்
என்பதையும் பார்க்க வேண்டும்.

அரசு மட்டும் மருத்துவக் கல்லூரி நடத்திக் கொண்டிருந்த
காலத்தில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

மருத்துவக் கல்லூரிகளை தனியார் நடத்தத் தொடங்கிய பின்பு
சீர்கேடுகள் அதிகமாகின. கல்லூரி அனுமதிக்கு கோடிகளைக்
கொட்டுபவர்கள் மாணவர்களிடமிருந்து லட்சங்களை 
பெறுகின்றனர். 

தன் மகனோ, மகளோ எப்படியாவது டாக்டராக வேண்டும் என்று
ஆசைப்படும் பெற்றோர் கடன் வாங்கியாவது நாற்பது லட்சம்,
ஐம்பது லட்சம் என்று  கட்டுகிறார்கள்.

லட்சங்களை கல்லூரிகளில் கொட்டுபவர்கள் அவற்றை 
நோயாளிகளிடமிருந்து கறக்கிறார்கள்.

அடுத்து வருவது மருந்து கம்பெனிகள். உலகமயத்திற்குப் பின்பு
இப்போது சின்னக் கம்பெனிகளை எல்லாம் பெரிய திமிங்கலங்கள்
விழுங்கி விட்டன.  விற்பனைக்காக எதையும் செய்ய அவை
தயாராக இருக்கின்றன. மருத்துவர்களை மருந்து எழுத வைக்க
எந்த அளவிற்கும் செல்ல அவை தயாராக உள்ளன. வெளிநாட்டுப்
பயணம் தொடங்கி உல்லாசப் பயணம் வரை ஆசை காட்டப்படுகின்றது.

கார்ப்பரேட் மருத்துவக் கலாச்சாரம் காசு கறக்கும் கலாச்சாரமாகி
விட்டது. நட்சத்திர மருத்துவமனைகளின் வருகையே மருத்துவத்
துறையின் சீர்கேட்டிற்கு முக்கியக் காரணம்.

மருத்துவக் காப்பீடு செய்துள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால்
காப்பீட்டுத் தொகையில் கடைசி பைசா வரை கறப்பது என்பது
மரபாகி விட்டது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் மத்திய, மாநில
அரசுகள். ஒட்டு மொத்த உற்பத்தியில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் வரை சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது
ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த வளர்ச்சிக்கான சாசனத்தில் 
சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த பிரகடனத்தை ஏற்றுக்
கொண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில்
தேசிய குறைந்த பட்ச பொதுத்திட்டம் என்ற கொள்கைப் பிரகடனம்
ஒன்றை அறித்தது நினைவில் உள்ளதா?  அதில் கூட சுகாதாரத்திற்கு
ஐந்து சதவிகிதம் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஒட்டு மொத்த உற்பத்தியில் ஐந்து சதவிகிதம் அல்ல, பட்ஜெட்
தொகையில் கூட ஐந்து சதவிகிதம் அல்ல, மூன்று சதவிகிதம் கூட
எந்த காலகட்டத்திலும் ஒதுக்கப்பட்டது இல்லை. அரசு மருத்துவ
மனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த
மாநில அரசுகளும் போதிய கவனம் செலுத்துவதில்லை.

ஆக வசூல் ராஜாக்களை உருவாக்குவதில் இத்தனை குற்றவாளிகள்
உள்ளனர். ஆக இந்த அமைப்பில் உள்ள கோளாறுகள் பற்றி,
அவற்றை சரி செய்வது பற்றி கவலை கொள்ளாமல் மருத்துவர்களை
மட்டும் கிண்டலடிப்பது சரியல்ல.

உன்னதமான மருத்துவர்களை கொண்டாடுவோம்
வசூல் ராஜாக்களை திருத்திடுவோம்.

No comments:

Post a Comment